Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

மன ஆட்டை பலியிட்டு அறிவு தீபம் ஏற்றிய மகான்... தாயுமான சுவாமிகள்!

தெய்வமே! துள்ளிக் குதிக்கின்ற (என்) மனம் என்னும் ஆட்டைப் பலி கொடுத்தேன். ஆகையால், தீய செயல்கள் என்னும் துஷ்ட தேவதைகள், இனிமேல் என்னை வருத்தாது. சாந்த தேவதையான உனக்கு, அன்பையே நீராகக் கொண்டு அபிஷேகம் செய்தேன். என் உயிரையே நைவேத்தியமாகப் படைத்தேன். மூச்சுக் காற்றையே உனக்குத் தூபமாகச் செய்தேன். அறிவையே உனக்குத் தீபமாக ஒளி வீசச் செய்தேன்'' என்று பாடுகிறார் ஒரு மகான்.

துள்ளு மறியா மனது பலி கொடுத்தேன் கர்ம

துஷ்ட தேவதைகள் இல்லை

துரியநிறை சாந்த தேவதையாம் உனக்கே

தொழும்பன் அன்பு அபிஷேக நீர்

உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம்

ப்ராணன் ஓங்குமதி தூப தீபம்

ஒருகாலம் அன்று இது சதாகால பூஜையாய்

ஒப்புவித்தேன் கருணைகூர்

தெள்ளிமறை வடியிட்ட அமுதப்பிழம்பே

தெளிந்த தேனே சீனியே

திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே

தெவிட்டாத ஆனந்தமே

கள்ளன் அறிவூடுமே மெள்ளமௌ வெளியாய்க்

கலக்க வரும் நல்ல உறவே

கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு

கருணாகரக் கடவுளே!

திருச்சி மலைக்கோட்டை

இந்தப் பாடலை எழுதியது திருச்சியில் வாழ்ந்த மகான் தாயுமான சுவாமிகள்.

குழந்தையாக இருந்தபோதே தாயுமான சுவாமிக்கு பக்தி அதிகமாக இருந்தது. ஆலயம் சென்றால் அங்கேயே தங்கிவிடுவார். தியான நிலையில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகும். பார்ப்பவர் மனமும் உடலும் சிலிர்க்கும். தியானத்திலிருந்து அவரை விலக்கி வீட்டுக்கு அழைத்துவர படாதபாடு பட வேண்டியிருக்கும். அவரின் தந்தை கேடிலியப்பப்பிள்ளை; தாய் கஜவல்லி.

கேடிலியப்பப்பிள்ளை, விஜயரங்க சொக்கநாதன் என்ற அரசரிடம் பெருங்கணக்கராக வேலை செய்தார். அவருக்குப் பிறகு தாயுமானவ ஸ்வாமிகள் சில காலம் பெருங்கணக்கராகப் பதவி வகித்தார். அவருடைய ஞானத் தெளிவு, பொறுப்பு, நேர்மை ஆகியவை மன்னரைக் கவர்ந்தன. அதனால் மனம் மகிழ்ந்த மன்னர், விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றைத் தாயுமானவருக்குப் பரிசு வழங்கினார்.

அப்போது குளிர்காலம். மன்னரிடம் இருந்து சால்வையைப் பெற்ற தாயுமானவர், அரண்மனையை விட்டு வெளியே வந்தார். வழியில் வயதான பாட்டி ஒருத்தி குளிரில் நடுங்கியபடி எதிரில் வந்தாள்.

அவளைப் பார்த்ததும் தாயுமானவர், அந்த சால்வையைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். தாயுமானவர் அவ்வாறு செய்ததை அறிந்த மன்னர், தான் அவமானப்பட்டதாக நினைத்தார்.

தாயுமானவரை அழைத்து விசாரித்தார்.

''நான் உங்களுக்குத் தந்த விலை உயர்ந்த சால்வையை ஒரு பிச்சைக்காரக் கிழவிக்குக் கொடுத்துவிட்டீர்களே... அது ஏன்?'' எனக் கேட்டார்.

அதற்குத் தாயுமானவர், ''மன்னா! என்னைக் காட்டிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு வந்த அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு இந்தச் சால்வை அவசியம் தேவைப்பட்டது. அதனால்தான் அதை அவளுக்குத் தந்தேன்'' என்றார்.

அன்னையே தாயுமானவரிடம் விளையாடக் கிழவியாக வந்தாளா? மன்னனுக்கு உள்ளூர பக்தியும் அச்சமும் பிறந்தது. ஒருவேளை அப்படியில்லாமல் இருந்தாலும் துயரத்தில் துடிக்கும் ஒரு ஜீவனை அம்பிகையாகவே கருதி, அந்தத் துயரத்தைத் துடைத்த தாயுமானவரின் கருணை உள்ளம் கண்டு நெகிழ்ந்துபோனார். அவரை வணங்கி மரியாதை செய்தார்.

இப்படி வாழும் காலமெல்லாம் பக்தி நெறியைப் பரப்பி தன் அனுபவத்தை சாராக்கிப் பாடல்கள் செய்து தமிழுக்கும் இறைவனுக்கும் தொண்டு செய்த மகான் தாயுமான சுவாமிகள். இவர், 56 தலைப்புகளில் 1,452 பாடல்கள் பாடியுள்ளார். அனைத்தும் காலத்தில் நின்று நிலைத்து அவர் புகழை நமக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும்.



source https://www.vikatan.com/spiritual/gods/glory-of-thayumana-swamykal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக