'பாட்ஷா'வாக சாகச வாழ்க்கை வாழ்ந்த டோம் அதில் இருந்து விலகி 'மாணிக்கமாக' குடும்பத்துடன் நேரம் செலவு செய்யும்போது மீண்டும் ஒரு One last mission வாய்ப்பு வருகிறது. அதில் என்ன நடக்கிறது என்பதுதான் Fast & Furious 9 படத்தின் ஒன்லைன்.
அன்பான மனைவி, அழகான மகன் என வாழும் டோமுக்கு கடந்த கால வாழ்க்கையின் நினைவுகள் வருகின்றன. தம்பி ஜேகபின் துரோகங்கள் கண் முன் விரிய, மீண்டுமொரு மிஷன். உலகை அழிக்கும் சக்தி வாய்ந்த டிவைஸ் எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருக்க, 'தாயின் மணிக்கொடி' சொல்லி இன்ஜினை ஸ்டார்ட் செய்கிறார் டோம். சாகசங்கள், கம்பி கட்டும் கதைகள், காந்தங்கள் என நீளும் சண்டைக் காட்சிகளுடன் "நாமெல்லாம் ஃபேமிலிடா கண்ணா" என்கிற F&F டெம்ப்ளேட்டுடன் முடிகிறது இந்த பாகம்.
டோமாக வழக்கம் போல் வின் டீசல் மிரட்டியிருக்கிறார். முரட்டு உடம்பும், அந்த கணீர் குரலும், வின் டீசலின் ஆகப்பெரும் பலம். பாசமான அதிரடி மனைவி லெட்டியாக மிச்சல். மீண்டுமொரு அசத்தல் பைக் பெர்ஃபாமென்ஸ்! புதிய கிளைக்கதையில் எதிர்மறை நாயகன் ஜேகபாக ஜான் சீனா. 'கல்லுக்குள் ஈரம்' என்பதுபோல் எதிர்பார்த்த கதைக்களத்தில் தன்னால் இயன்றதை செய்திருக்கிறார். வில்லியாக சார்லீஸ் தீரோன், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் நடாலி என அதே 'மாயாண்டி குடும்பத்தார்'தான் இந்தப் படத்திலும். மிஷன் என வந்துவிட்டால் அங்காளி பங்காளிகளை சேர்த்துக்கொள்வது என்னும் குல வழக்கம் இதிலும் தொடர்கிறது.
எமோஷனல் வசனங்களுக்கு இடையே, சில காமெடி வசனங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. பழைய படங்களின் ஃபுட்டேஜஸ், எமோஷன்ஸ் என ஒரு கலவையாக வந்திருக்கிறது திரைப்படம்.
F&F படங்களின் பலம் என்றாலே அதன் ஆக்ஷன் காட்சிகள்தான். சட்டத்துக்குப் புறம்பான கார் சேஸிங் என்று இருந்த படங்கள் ஐந்தாம் பாகத்துக்கு பிறகு heist படங்களாக உருமாறின. அதற்குப் பிறகு, ஸ்டேஜிங்கில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், புதிய புதிய ஆக்ஷன் காட்சிகள்தான் படத்தை அடுத்தடுத்த பாகங்கள் நோக்கி நகர்த்திவருகின்றன. அந்த வகையில், படத்தின் ஆரம்பத்தில் கன்னிவெடிகளினூடே வரும் பறக்கும் கார் சேஸிங் காட்சிகள் நிச்சயம் ஒரு சிறப்பான சம்பவம்.
ஆனால், காந்தம் என்கிற ஒரு பதத்தை வைத்து இரண்டாம் பாதியை ஏகத்துக்கும் இழுத்திருக்கிறார்கள். என்ன பிரச்னை என்றாலும் காந்தத்தை வைத்து டீல் செய்வது, பிரமாண்ட கார் சண்டைக் காட்சியை காமெடியாக்கிவிடுகிறது. அதேபோல் வேகமாகச் செல்லும் கார் என்னும் காம்பினேஷனுக்கு ஏற்றது போல், இதற்கு முன் பல பரிட்சார்த்த முயற்சிகளை டீல் செய்திருந்தாலும், இதில் ஒருபடி மேலே போய், இல்லை இல்லை பல படிகள் மேலே போய் ராக்கெட் இன்ஜினை வைத்து ஒரு சம்பவம் செய்திருக்கிறார்கள். அநேகமாக அடுத்த பாலகிருஷ்ணா படத்தில் இந்தச் சம்பவம் இடம்பெறலாம். இடம்பெறாவிட்டால் நாம் தப்பித்தோம்.
Also Read: டிஸ்னியின் Cruella - இரண்டு எம்மாக்களுக்கும் நாமினேஷன் நிச்சயம், ஆஸ்கர் லட்சியம்!
ஜூன் மாதமே உலகம் முழுக்க வெளியாகிவிட்ட திரைப்படம், இந்திய திரையரங்குகளில் இப்போதுதான் வெளியாகிறது. படம் ஏற்கெனவே மிகப்பெரிய ஹிட். F&F சீரிஸில் ஒன்பதாவது படம், மொத்தத்தில் (Hobbs & Shaw உட்பட) பத்தாவது படம். சண்டைக் காட்சிகள் மாறுவது, புதிய கிளைக்கதை தவிர பெரும்பாலும் எந்த மாற்றமும் இல்லாமல், ஒருவருக்கும் காயம் கூட இல்லாமல்தான் ஒவ்வொரு படமும் வருகிறது. இந்தப் படத்தில் இதை அவர்களே கேள்வியாகவும் கேட்டிருக்கிறார்கள்.
நமக்கு வரும் கேள்வி, படக்குழுவுக்கும் வருவதால் சால்ஜாப்பாக அதைக் காமெடியாக்கியிருக்கிறார்கள். F&F சீரிஸின் பத்தாவது திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. 2023, 2024 என நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். அதிலாவது புதிய விஷயங்கள் இருக்கும் என நம்பலாம்.
பார்த்து செய்யுங்க இயக்குநர் ஜஸ்டின் லின்!
source https://cinema.vikatan.com/hollywood/vin-diesel-and-john-cena-face-off-in-fast-and-furious-9-the-fast-saga
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக