மகாகவி, தேசியக்கவி, முண்டாசுக் கவிஞன், செந்தமிழ்த்தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன் என்றெல்லாம் பாரதியின் கவித்துவத்துக்கு கிடைக்காத பட்டங்களே இல்லை. ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளார், சுதந்திரப்போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்ட புரட்சியாளராகவும் விளங்கியிருக்கிறார். 39 வயதில் அவர் இறந்திருந்தாலும், அவரின் எழுத்தும், புகழும் நூற்றாண்டுகள் கடந்து இன்னும் நம்முடன் உயிர்ப்புடனே வாழ்ந்து வருகிறது. காதல், கல்வி, தேசம், ஆன்மீகம், சமூகம், புரட்சி என அவர் கவிதை எழுத்துக்கள் பயணிகாத பாதைகளே இல்லை. கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்த பன்முக நாயகன் பாரதிக்கு, இன்று நூற்றாண்டு காணும் நினைவுப் பெருநாள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், ``பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி 'பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்” உள்பட பல்வேறு அறிவிப்புகளை பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நிகழ்வை ஒட்டி அறிவித்திருக்கிறார்.
பாரதி மறைந்து நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னும், அவர் கருத்துக்களின் தேவை நம் சமூகத்தில் இருந்துகொண்டு தான் இருக்கிறது. ``செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என்று பாடிய பாரதியார், தற்காலத் தமிழகச்சூழலில் எந்த வகையிலெல்லாம் தேவைப்படுகிறார் என்பது குறித்து பன்முகத் தளத்தில் செயல்படும் சமூக ஆர்வலர்களின் பார்வை இதோ:
எழுத்தாளரும், வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன்:
``வாழ்க நற்றமிழ், வளர்க தேசியம் என்று கூறியவர் பாரதியார். அவர் வாழ்ந்தது சில காலம் தான் என்றாலும் கூட தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டவர். `வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும்' என அப்போதே நதிநீர் இணைப்பால் நாடு வளம்பெறும் எனக் கனவு கண்டார். `சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்' எனக்கூறி இன்றைய சேதுசமுத்திர திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
முக்கியமாக, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர். பராசக்தி, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டை பாடிய பாரதிதான், மயிலாப்பூர் கிருஸ்தவப் பாதிரியாருடன் நட்பு பாராட்டி கிறிஸ்தவ மதக்குறிப்புகளையும், அதேபோல இஸ்லாமிய சகோதரர்களுடன் இணக்கமாய் இருந்து இஸ்லாமியக் கருத்துகளைப்பற்றி உயர்வாகவும் எழுதினார். பாரதியின் கவிதைகளால் அன்றைக்கு மூன்று மதத்தவர்களும் ஒற்றுமையுடன் இருந்து இந்திய சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். ஆனால், இந்நாட்டின் இன்றைய நிலையோ எங்குபார்த்தாலும் சாதி, மத மோதல்கள் நிகழும் களமாக மாறியிருக்கிறது. பாரதியின் தொலைநோக்குப் பார்வையெல்லாம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் தொலைவிலேயே நிற்கிறது. இதுவே பாரதியின் இன்றையத்தேவையை ஆழமாக உணர்த்துகிறது."
பாரதி நூற்றாண்டையொட்டி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகள் வைக்கிறேன்.
``இந்திய அரசு, பாரதி பயின்ற வாரணாசியின் இந்து சர்வகலாச் சாலையில் அவர்க்கு முழு உருவச்சிலை அமைக்கவேண்டும். வாரணாசிப் பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல்கலைக்கழகத்திலும் பாரதி குறித்து ஆய்வு செய்ய இருக்கைகள் நிறுவ வேண்டும். பாரதி நூற்றாண்டுக் குறித்துச் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்.
தமிழக அரசு, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில் கிராமிய வளர்ச்சி குறித்தான பல்கலைக்கழகத்தையும், அவர் படித்த ம.தி.தா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் அவர் குறித்தான கருவூலம் ஒன்றையும் அமைக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் பாரதியை படித்து, அவர் கூற்றை நேசிப்பவன் என்ற முறையில் இந்தக் கருத்தை முன்வைக்கின்றேன். இதை வழிமொழிந்து அரசுகள் இதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்."
த.மு.எ.க.ச-வின் முன்னாள் தலைவரும், எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன்:
``எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், என்று அனைவருக்குமான பொருளாதார சமத்துவத்தைக் கனவு கண்டவர் பாரதி. அது இன்னும் எட்டாத தூரத்தில் தான் நிற்கிறது. கொரோனா தொற்றுகாலத்தில் கோடி கோடியாய்க் கொள்ளையடித்த கும்பலுடன், கேட்பாரற்ற சமூகமாகமான புலம்பெயர் தொழிலாளர்களும், அன்றாடம் உழைத்துப் பிழைப்பவரும் சக பயணிகளாக வாழும் அசமத்துவப் பொருளாதார நிலை மாறும் வரை பாரதி நமக்குத் தேவைதான்.
`பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே' என்று ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதிய எதிர்ப்பும் என்கிற இரட்டைத்தேசியம் பேசியவன் பாரதி. ஆணவக்கொலைகளின் பூமியாக தமிழகம் கொடிகட்டிப் பறக்கிறது. சாதி ஒழிவது ஒருபுறம் இருந்தாலும், தீண்டாமைக் கொடுமைகளே இன்னும் இங்கு ஒழியவில்லை.
பணமயமாக்கல் என்கிற பேரில் தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு கடை விரிக்கிறது. பாரதியின் இந்த வரிகள் இன்றைக்கும் பாடத் தேவையான வரிகளாகவே திகழ்கின்றன.
குழந்தைமையைக் கொல்லும் மரணசாசனமாக ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை நம் தலையில் விடிந்துவிட்டது. இன்று ஓடி விளையாடவும் கூடி வாழவும் சொன்ன பாரதியின் பாப்பா பாட்டுக்கள் முன்னெப்போதையும்விட இன்றுதான் மிகவும் தேவையாக இருக்கிறது"
Also Read: பாரதியார் பிறந்தநாள்: `கட்டாயக் கல்வியை உறுதி செய்வோம்!’– எட்டயபுரத்தில் உறுதியேற்ற இளம் பாரதிகள்
`இளம் பாரதி பட்டம்' வென்றவரும், முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான, இர.ராகுல்:
``பாரதி எனும் பெயருக்கு இங்கு தனி ஆற்றல் உண்டு. அக்கினி குஞ்சுகளை அவிழ்த்து விடும் ஆற்றல் படைத்த வரிகளை படைத்த படைப்பாளியின் பெயருக்கு ஆற்றல் இருப்பது அதிசயம் இல்லை. இலக்கியம் எளியோருக்கு இல்லை எனும் நிலை மாற்றி பாமரருக்கும் சேர்த்து பாட்டு சமைத்தப் படைப்பாளி பாரதி. இன்றைய சமூகம் மெல்ல முன்னோக்கி நகர பாரதி இன்றியமையாத துணை. பாரதியின் பாடல்கள் அன்று விடுதலை வேட்கையை வித்திட்டது. இன்றும் விடுதலை வேட்கை முடிந்த பாடில்லை. பெண் விடுதலை தளத்திலும் சாதிய சமூக விலங்குகளை உடைத்தெறியவதிலும் பாரதியின் வரிகள் வழியே அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய அவசியம் இருக்கத்தான் செய்கிறது.
பாரதி மனிதர்க்கு மட்டுமே உரியவராக இருந்திருந்தால் பாரதியின் தேவை நாட்கள் நகரும் போது முடிந்திருக்கும். ஆனால், பாரதி பறவைக்கும், விலங்கும், அவ்வளவு ஏன் அவன் ஆறு, கடல், மலை என இயற்கையின் எல்லா பரிமாணத்திற்கும் பாட்டிசைத்து பாடிய புலவன். ஆதலால் அவன் தேவைக்கு என்றுமே முடிவதில்லை. பாரதியின் அகண்டப் பார்வையிலிருந்து உலகை ரசிக்க இன்னும் நூறு தலைமுறைக்கு அப்பாலும் ஆட்கள் இருப்பார்கள். பாரதி வேற்றுமையில் ஒற்றுமை காணும் கண் படைத்திருந்தார். மொழி, இனம், மதம் கடந்து மனிதத்தை போற்றும் வகையில் அமைந்துள்ள பாரதியின் பாடல்கள் இன்றைய சூழலில் நிச்சயம் தேவை. பாரதி ஓர் புறக்கணிக்க முடியாத படைப்பாளி என்பதே நிதர்சனம்.
பாரதியார் பல்கலைக்கழக (பாரதி கலை இலக்கிய மன்றம்), முனைவர் பட்டப்படிப்பு மாணவி திவ்யபாரதி:
"ஆதலால் காதல் செய்வீர்" காதல் செய்வதற்கான நியாயங்களை மேல்தட்டு மக்களின் மண்டையில் உறைக்கும் படி சொல்வதற்கு பாரதி தேவைப்படுகிறார். பெரும்பாலும் காதலை மனித இயற்கையாக ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மேற்தட்டு மனிதர்களே. ஆனால் இவர்களுக்கான ஒரு குரலாக பாரதியாரை ஏற்றுக்கொள்ள பொது சமூகத்தில் அவர்கள் தயங்குவதில்லை. பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான். பொது சமூகத்தில் உள்ள ஆதிக்க நிலை சிந்தனையாளர்களை "பாரதி" என்ற பிம்பம் தன்வசப்படுத்தி உள்ளது. பாரதி என்ற ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பிம்பத்தால் மட்டுமே சாதிய மன நிலையில் இருப்பவர்களின் புத்திக்கும் எட்டுவது போன்ற இந்தக் கருத்தை ஒரு பாடலின் மூலம் சொல்லிவிடமுடியும்.
தற்போது இளைஞர்கள் தங்களது கார்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் பாரதியாரின் உருவ ஸ்டிக்கர்களை விதவிதமாக போடுவதையும் "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ" என்ற வசனங்களை ஒட்டி இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட இளைஞர்களுக்கு பாரதி மாதிரியான ஒரு `பிராண்ட்' அல்லது ஒரு `ஹீரோயிக் இமேஜ்' மூலமாகவே ஒரு சமத்துவ கருத்தையும் மனிதகுலத்திற்கு நன்மை நல்கும் கருத்துக்களை நவீன உலகில் கொண்டு சேர்க்க முடிகிறது. எனவே தான், இன்றைய நவீன காலத்திலும் பாரதியின் பல்வேறு வகையான வடிவங்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது”
source https://www.vikatan.com/news/tamilnadu/what-is-the-need-for-bhartiyar-in-contemporary-tamil-nadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக