Ad

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

சங்கத் தமிழ் இலக்கியங்களுக்குத் திராவிட அடையாளமா? - சர்ச்சையும் விளக்கமும்!

“சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கெனத் தொடராச் செலவினமாக ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” எனத் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். “பெருமைமிக்கத் தொல் தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வசப்படுத்தும் திராவிடத்திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது” என நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமானும் சங்க இலக்கியங்களைத் தொகுத்து அவற்றுக்குத் திராவிட இலக்கியம் எனத் தமிழக அரசு பெயர் சூட்ட முயல்வது தவறானது” தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனும் பாஜக-வினரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். “சங்கத் தமிழ் நூல்களுக்குத் திராவிட களஞ்சியம் என்ற பெயரைச் சூட்டத் தமிழ்நாடு அரசு முயல்கிறது என்ற கூற்று அடிப்படை அற்றது, உண்மை அற்றது” என்று விளக்கமளித்த அமைச்சர் தெங்கம் தன்னரசு.

சங்க இலக்கியம்

“சங்க இலக்கிய நூல்களைச் சீர் பிரித்து வெளியிடுவதும் திராவிடக் களஞ்சியத் தொகுப்பும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை, தனியானவை, தனித்துவமானவை. எனவே இவற்றை எல்லாம் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். குழப்புவதற்கான முயற்சியிலும் ஈடுபட வேண்டாம், அப்படிக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவும் முயல வேண்டாம்” என்றும் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருக்கிறார். ஆனாலும் விமர்சனங்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

Also Read: "தமிழ் சங்க இலக்கியத் தொகுப்பிற்கு `திராவிடக் களஞ்சியம்’ எனப் பெயர் சூட்டுவதா?" - பெ.மணியரசன் கேள்வி

அரசின் அறிவிப்பு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம், “ ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று கூறியவரின் வழி நடப்பவர்கள், தமிழ் நூல்களைத் திராவிட களஞ்சியம் என்று அடையாளப்படுத்த முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ் உயிரைப் போன்றது. திராவிட இனம் என்ற போலி கருத்துருவாக்கம் அந்த உயிரை அழிக்க நினைத்து அந்நியர்களால் உருவாக்கப்பட்ட சூழ்ச்சியே. தமிழை, தமிழர்களை, தமிழ்க் கலாசாரத்தை, தமிழ் மொழியின் பெருமைகளைச் சீர்குலைத்து திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் விதைத்து பிரிவினைக்கு வித்திட்ட ஆங்கிலேயர் கால்டுவெல்லின் அடிவருடிகள், நம் இனிய தமிழை ஒழிக்க நினைத்து தமிழின் அடையாளத்தை அழிக்க நினைக்கிறார்கள். நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதன் மூலம் தமிழ்நாட்டில் பிரிவினையைத் தூண்ட திமுக நினைக்கிறது.

நாராயணன் திருப்பதி

திமுக-விற்கு தமிழ்நாட்டு மக்களை, பொருளாதாரத்தை முன்னேற்றுவது குறித்து எந்த அக்கறையும் இல்லை. இன, மொழி ரீதியிலான சர்ச்சையைக் கிளப்பிவிட்டு, இங்கிருக்கும் பிரச்னைகளைத் திசை திருப்பச் சூழ்ச்சி செய்கிறார்கள். தமிழக அரசு, தமிழ் விரோத போக்கைக் கைவிட்டு, திராவிட களஞ்சியம் உருவாக்குவோம் என்ற அறிக்கையை உடன் திரும்பப்பெற வேண்டும். திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பைக் குறிக்கும் சொல்லே தவிர இனத்தைக் குறிப்பதல்ல” எனத் திராவிடக் களஞ்சியம் என்ற அறிவிப்பு குறித்து விமர்சனங்களை முன் வைத்தார்.

Also Read: திராவிடக் களஞ்சியம் சர்ச்சை: `திமுக அரசின் தமிழர் அடையாள அழிப்பு முயற்சி!’ - கொதிக்கும் சீமான்

விமர்சனங்கள் குறித்து திமுக செய்தித்தொடர் இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனிடம் பேசினோம், “தத்துவார்த்த, ஆட்சி நிர்வாக ரீதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசு மீது குற்றம் சுமத்தக் காரணம் ஏதும் கிடைக்கவில்லை.

சங்க இலக்கியங்கள் குறித்த அறிவிப்பும் திராவிடக் களஞ்சியம் குறித்த அறிவிப்பும் வேறு வேறு என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கிவிட்ட பின்னரும் இதில் என்ன விளக்க வேண்டியிருக்கிறது எனத் தெரியவில்லை. திராவிடம் என்பது சூழ்ச்சி என்றால் ஆந்திராவில் திராவிடப் பல்கலைக்கழகம் ஏன் அமைத்தார்கள். இன்றைக்கும் அது அதே பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா இல்லையா? கால்டுவெல் 19-ஆம் நூற்றாண்டில் தானே திராவிடம் என்று சொன்னார். ஞானசம்பந்தரை ஆதிசங்கரர் திராவிடத் திசு என அழைத்திருக்கிறார் இல்லையா? இன்றைக்கும் பழைய வரலாற்று வரைபடங்களில் இந்தியாவைத் திராவிட நாடு எனக் குறித்திருக்கிறார். வரலாற்று ஆய்வாளர்கள் பல நாகரீகங்களைத் திராவிட நாகரீகம் எனவும் குறிப்பிட்டு எழுதுகிறார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

திராவிடம் என்பது மொழி சார்ந்தது மட்டுமல்ல. கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் சார்ந்தது. வடமொழிக்குச் சமஸ்கிருதம், தென் மொழிகளுக்குத் தமிழ் தலைமை தாங்குகின்றன. தமிழ்தான் ஆதி மொழி, தாய்மொழி என்பதன் அடிப்படையைத் திராவிடப் பண்பாட்டில் கட்டமைக்க முடியும். இந்தியாவில் உயர்மட்டத்திலிருந்த திராவிடத்தை ஆரியர்கள்தான் பிரிவினையை விதைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்கிறார். அதற்குச் சீமான், மணியரசன் போன்றவர்கள் கைக் கூலிகளாகச் சேர்ந்திருக்கிறார்கள்” என விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dravidian-symbol-for-tamil-literature-controversy-and-explanation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக