Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

கேரளாவை அதிரவைத்த வீடியோ; போலீஸ் லாக் செய்த காருக்குள் கதறிய 3 வயது குழந்தை! - நடந்தது என்ன?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் பகுதியில் பெண் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் போலீஸ் காரின் அருகில் ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(38) என்பவர் அவரது எட்டு வயது மகளுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது காரில் இருந்த தனது செல்போனை காணவில்லை என்று சிவில் போலீஸ் அதிகாரி ரெஜிதா கூறினார். மேலும் காரின் அருகில் நின்றுகொண்டிருந்த ஜெயச்சந்திரனிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

ஜெயச்சந்திரன் போன் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார். அடுத்ததாக ஜெயச்சந்திரன் தன்னுடன் அழைத்து வந்திருந்த அவரது மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளிடம் விசாரணை நடத்தினார் ரெஜிதா. உண்மையை ஒப்புக்கொள்ளாமல் இருந்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பேன் என ரெஜிதா மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பயந்துபோன சிறுமி சத்தமாக அழத்தொடங்கினார். இதற்கிடையில் சக போலீஸ் ஒருவர் ரெஜிதாவின் செல் நம்பருக்கு போன் செய்தார். அது காருக்குள் இருந்த ரெஜிதாவின் கைப்பையில் ரிங் ஆனது. இதையடுத்து தனது போன் திருடப்படவில்லை என்பது உறுதியானதால் விழிபிதுங்கினார் ரெஜிதா. இதுகுறித்த வீடியோவை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

காருக்குள் கதறிய குழந்தை

பொது இடத்தில் தந்தையையும், குழந்தையையும் விசாரணை நடத்திய சம்பவம் குறித்து குழந்தைகள் நல ஆணையமும் விசாரணை நடத்தியது. குழந்தைக்கு கவுன்சலிங் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சிவில் போலீஸ் அதிகாரி ரெஜிதா, திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது முதற்கட்ட நடவடிக்கை எனவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில், மூன்று வயது சிறுமியை காரில் அடைத்து வைத்ததாகவும், சிறுமி தேம்பித்தேம்பி அழுதபோதும் போலீஸார் கண்டுகொள்ளாமல் சாவியை எடுத்துக்கொண்டு போனதாகவும் புதிய புகார் ஒன்று கிளம்பியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி பாலராமபுரத்தில் சிபு, தனது மனைவி, மூன்று வயது மகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக சென்றதாக சிபுவின் காரை போலீஸார் மடக்கினர்.

குழந்தையுடன் தாய் அஞ்சனா

அதிவேகமாக வந்ததற்காக 1,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அந்த அபராத தொகையை செலுத்திய சிபு, ``நிறைய கார்கள் அதிவேகமாக செல்கிறதே அதையெல்லாம் ஏன் மடக்கிப் பிடிக்கவில்லை?” என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸார் சிபுவின் காரை லாக் செய்து சாவியை எடுத்துள்ளனர். சிபுவும் அவரது மனைவி அஞ்சனாவும் காருக்கு வெளியே நின்ற நிலையில் அப்போது சிபுவின் மூன்று வயது குழந்தை மட்டும் காருக்குள் இருந்து. அந்த சமயத்தில் காருக்குள் தனியாக இருந்த குழந்தை பலமாக அழுதது. குழந்தை அழுவது பற்றி சிபு கூறியும், அதை கண்டுகொள்ளாத போலீஸார் கார் சீஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறினர். இதையடுத்து குழந்தை காருக்குள் கத்தி அழுவதை தாய் அஞ்சனா அதை வீடியோ எடுத்தார்.

Also Read: கேரளா:`` `ஈசோ’ என்ற பெயரில் சினிமா வெளிவர அனுமதிக்க மாட்டோம்’’ முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ்

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸார் சிபு காவலர்களை தாக்கியதாக வழக்கு பதிய முயன்றனர். ஆனால் சாலையில் சென்ற பயணிகள் அங்கு கூடி நியாயம் பேசியதால் போலீஸார் அவர்களை விடுவித்துவிட்டுச் சென்றனர். குழந்தை அழும் வீடியோவை வெளியிட்ட சிபு கூறுகையில், "நான் காவல்துறைக்கு பயந்து இதுவரை எதுவும் செய்யாமல் இருந்தேன். ஆற்றிங்கல் பகுதியில் பெண் சிவில் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தது மீடியாக்களில் வெளியானதால் தைரியமாக வீடியோவை வெளியிட்டேன்" என்றார். பாலராமபுரம் போலீஸ் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/kerala-police-went-into-controversy-after-locked-the-car-with-kid-inside

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக