Ad

வியாழன், 30 செப்டம்பர், 2021

திருவாரூர்: வழக்கறிஞர் மீது சாணிப்பால்; கம்யூனிஸ்ட் நிர்வாகி கைது; கொதிக்கும் அதிமுக! -நடந்தது என்ன?

1960,70-களில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் மீது, பண்ணையார்கள் நடத்திய சாணிப்பால்-சவுக்கடிக்கு எதிராக போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள். ஆனால் இன்று இதே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர், அதிமுகர் பிரமுகர் மீது சாணிப்பாலை ஊற்றி அவமானப்படுத்தியதாகவும் இது மனித தன்மையற்ற அநாகரிக செயல் எனவும் அதிமுக-வினர் கொந்தளிக்கிறார்கள்.

காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுக-வினர்

என்ன நடந்தது?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார். அதிமுக வழக்கறிஞர் அணியின் திருவாரூர் மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் இவர், 2021- சட்டமன்ற தேர்தலில் அதிமுக. சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் மீது இதே பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தயாளன் உள்ளிட்ட 6 பேர் சாணத்தை கரைத்து ஊற்றியதாக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றம் இழைத்தவர்கள் மீது காவல்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். 50-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டதோடு, முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஆயத்தமானார்கள், இந்நிலையில்தான் தயாளனை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளார்கள்.

நம்மிடம் பேசிய அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் ‘’எனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியில சொல்லவே வேதனையா இருக்கு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினராக இருக்குற தயாளன், இவரோட மனைவி, தம்பி உள்பட இவங்க குடும்பத்துல உள்ளவங்க எல்லாருமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில இந்த பகுதியில முக்கியமான பொறுப்புல இருக்காங்க. அரசு புறம்போக்கு நிலத்துல சட்டவிரோதமாக போர்வெல் அமைச்சி, கடந்த பல வருசமா, தயாளன் குடும்பத்தினர், டேங்கர் லாரியில தண்ணிர் விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. இதனால், இந்த பகுதியில் நிலத்தடிநீர் குறைஞ்சிப் போனதால, விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கல. ஊராட்சித்தலைவர், ஒன்றிக்குழு தலைவர் எல்லாருமே இந்திய கம்யூனிஸ்ட். இவங்க அதை கண்டிக்கவே இல்லை. மாவட்ட ஆட்சியர்கிட்ட புகார் தெரிவிச்சேன். அதிகாரிகள் ஆய்வு பண்ணி, தடை விதிச்சாங்க. அடுத்த சில நாள்கள் தண்ணீர் எடுக்காமல் இருந்த தயாளன், மறுபடியும் தண்ணீர் விற்பனைய ஆரம்பிச்சார்.

வழக்கறிஞர் சுரேஷ்குமார்

தண்ணீர் லாரியை மடக்கி, சட்டப்பூர்வ நடவடிக்கைகள்ல இறங்கினேன். இதனால் தயாளனுக்கு என் மேல் கோபம் அதிகமாயிடுச்சி, இந்த நிலையில் தான், காலையில நான் வயலுக்கு கார்ல போயிக்கிட்டு இந்தப்ப, தயாளன் குடும்பத்தினர் என்னை வழிமறிச்சாங்க, கார் கண்ணாடியை இறக்கினேன். பாத்திரத்துல கரைச்சி வச்சிருந்த சாணத்தை என் மேல ஊத்தினாங்க. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தவும் முயற்சி செஞ்சாங்க. உடனே நான் போக்குவரத்து உள்ள இடத்துக்கு காரை ஓட்டிக்கிட்டு போயி, நடு ரோட்டுல உட்கார்ந்து கூச்சல் எழுப்பினதுனால, கூட்டம் சேர்ந்துடுச்சி. உயிர் பிழைச்சேன். இந்த அவமானத்தை நினைச்சி, ஓவ்வொரு நிமிஷமும் புழுங்கிக்கிட்டு இருக்கேன்.

Also Read: `திமுக Vs இந்திய கம்யூனிஸ்ட்’ - இது திருவாரூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி கலாட்டா

சாணியை கரைச்சி ஊத்துறதுங்கறது, மிகவும் இழிவான செயல். அதுவும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவங்கவங்களே இப்படி அநாகரிகமாக நடந்துக்கிட்டது அதிர்ச்சியா இருக்கு. விவசாய தொழிலாளர்கள் மீது பண்ணையார்கள் சாணத்தை கரைச்சி ஊத்தி அவமானப்படுத்தியபோது, இது மனிததன்மையற்ற செயல்னு கம்யூனிஸ்டுங்க ,கொந்தளிச்சி போராட்டம் நடத்தினாங்க. ஆனால் இப்ப, இந்த அநாகரிக செயல்ல ஈடுபட்டவங்க மேல, அவங்க கட்சித்தலைமை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கலை. காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருக்க, இந்த பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்தான் இவங்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்காங்க. இந்த சம்பவத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடலை’’ என ஆதங்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தயாளன்

தயாளன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால், அவரது சார்பில் நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ரஜினி, ‘’தயாளன் சட்டவிரோதமாக போர்வெல் அமைச்சி தண்ணீர் விற்பனைச் செய்வதாக சொல்வது உண்மையல்ல. காண்ட்ராக்டர்கிட்ட வேலைப் பார்த்துக்கிட்டு இருக்கார். தயாளனின் தம்பி மனைவி குளிப்பதை, சுரேஷ்குமாரின் மகன் செல்போன்ல வீடியோ எடுத்ததுனால கோபமாகி கூச்சல் எழுப்பி கடுமையாக திட்டியிருக்கிறார், அந்த நேரத்தில் சுரேஷ்குமார், தயாளனின் வீட்டுக்குள் வந்து, தயாளனின் தம்பியை தாக்க முயற்சித்தார். கணவரை காப்பாற்ற, சுரேஷ்குமார் மீது உமா சாணத்தை ஊற்றியிருக்கிறார். இதில் தயாளனுக்கு சம்பந்தமில்லை’’என தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரத்திடம் இது தொடர்பாக பேசியபோது, ‘’தயாளனின் தூண்டுதலின் பேரில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், சுரேஷ்குமாரின் மீது சாணத்தை ஊற்றியிருக்கிறார்கள். சம்பவ இடத்தில் தயாளனும் இருந்திருக்கிறார். அவரை கைது செய்துள்ளோம். சட்டப்படியான நடவடிக்கைகள் நேர்மையாக நடைபெற்று வருகிறது. தயாளனின் தம்பி மனைவி குளிப்பதை, சுரேஷ்குமாரின் மகன் வீடியோ எடுத்ததாக குற்றம்சாட்டியதால், அவரது செல்ப்போனை ஆய்வு செய்தோம். அதுபோன்ற வீடியோக்கள் எதுவும் இல்லை. தண்ணீர் எடுக்கும் வீடியோதான் உள்ளது’’ என்றார்.

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தயாளனுக்கு ஆதரவாக உள்ளதா ? இக்கட்சியின் வழக்கறிஞரும், திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்க தலைவருமான அருள்செல்வன், ‘’இது மனிதகுலத்திற்கு எதிரான செயல். இந்த சம்பவத்தில் தயாளனுக்கு ஆதரவாக எங்கள் கட்சி செயல்படவில்லை. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நாங்களும் வலியுறுத்தியுள்ளோம். சட்டவிரோத செயல்களுக்கு எங்கள் கட்சி எப்போதுமே ஆதரவாக இருக்காது’’என்றார்.

இக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ‘’தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையை, அரசியல் பிரச்னையாக மாற்றுவது நியாயமல்ல. அதேசமயம், சாணியை கரைத்து ஊற்றுவதென்பது, அதை யார் செய்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது’’என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/communist-cadre-attacked-admk-cadre-with-cow-dung-police-arrested

லார்ஜ் கேப்பை விட லாபம் தரும் மிட்கேப் பங்குகள்; முதலீடு செய்யும் முன் இதையும் தெரிஞ்சுக்கோங்க!- 26

புத்த மதம் போதிக்கும் பல விஷயங்களில் பொன்னான நடுவழி மிகவும் பிரசித்தி பெற்றது. இருவித எல்லைகளுக்கும் போகாமல் நடுநிலையில் பிரயாணிப்பதையே பொன்னான நடுவழி என்கிறார்கள். அப்படி ஒரு நடுவழிதான் மிட்கேப் பங்குகள். சென்ற கட்டுரையில் பார்த்த லார்ஜ் கேப் பங்குகளின் இளைய சகோதரி.

நம் போர்ட்ஃபோலியோவில் ஒரு பல்வகைப்படுத்துதலை (Diversification) கொண்டு வர மிகவும் உதவுபவை இந்த மிட்கேப் பங்குகள். லார்ஜ் கேப் பங்குகளின் ஸ்திரத்தன்மையையும், ஸ்மால் கேப் பங்குகளின் துரித வளர்ச்சியையும் ஒருங்கே தரவல்ல இவற்றின் மற்ற அம்சங்களைப் பார்ப்போம்:

Stock Market

துரிதமாக வளரக்கூடிய சாத்தியக்கூறு:

ஒரு காளைச் சந்தை (Bull Market) நேர்ந்தாலோ, சந்தை விரிவடைந்தாலோ அதிக நன்மை பெறுவது மிட்கேப்ஸ். நாம் பார்க்க வளரும் தாவணிப் பெண் திடீரென புடவை கட்டி வந்து நின்று அசத்துவது போல் இந்த மிட்கேப்ஸும் எதிர்பாராமல் உற்பத்தி, வரவு, லாபம் என்று எல்லாவற்றிலும் வளர்ந்து லார்ஜ் கேப்பாக மாறிவிடும் சாத்தியக்கூறு உண்டு.

குறைந்த ரிஸ்க்:

ஸ்மால் கேப் பங்குகளைவிட இவற்றில் ரிஸ்க் குறைவு. திடீரென காளைச் சந்தை, கரடிச் சந்தையாக மாறும் நேரம் பல ஸ்மால் கேப் கம்பெனிகள் காணாமல் போகும். இவை போல் அல்லாமல் மிட் கேப் கம்பெனிகள் சிறிது தள்ளாடினாலும், நிலைக்கும்.

எளிதில் பணம் திரட்டும் தகுதி:

ஸ்மால் கம்பெனிகளுக்குக் கிடைப்பதைவிட எளிதாகக் கடனும் முதலீடும் மிட்கேப் கம்பெனிகளுக்கு கிடைப்பதால், அவற்றின் வளர்ச்சி வேகமாகிறது.

பன்முகத் தன்மை

பொதுவாக மிட்கேப் பங்குகள், லார்ஜ் கேப்பை ஒரு கரையாகவும், ஸ்மால் கேப்பை மறு கரையாகவும் கொண்டு விளங்கும். இவற்றில் சில லார்ஜ் கேப்பின் ஸ்திரத்தன்மையை அதிகம் கொண்டிருக்கும்; இன்னும் சில ஸ்மால் கேப்பின் சாயல் மாறாமல் அதீத வளர்ச்சி உள்ளனவாக இருக்கும்.

Stock Market (Representational Image)

Also Read: பங்குச்சந்தையில் ஜெயிக்க இது ரொம்பவே முக்கியம்; `டெக்னிக்கல் அனலிசிஸ்' என்னும் வழிகாட்டி - 24

எளிதில் விலை போகும்

சந்தை என்றுமே ஏற்ற இறக்கம் நிறைந்தது. ஒரு திடீர் வீழ்ச்சி வரும்போது ஸ்மால் கேப் பங்குகள் விலை போவது கடினம். ஆனால், மிட் கேப் பங்குகள் ஏற்கெனவே பலராலும் கவனிக்கப்பட்டவை என்பதால் எளிதில் விலை போகும்.

ஆனால், எல்லா மிட் கேப் பங்குகளும் சிறந்தவை என்று கூறிவிட முடியாது. இவற்றிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை.

* மிட்கேப் பங்குகள் `வேல்யூ ட்ராப்' என்ற திரிசங்கு நிலையில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. சில மிட்கேப் கம்பெனிகள் ஸ்மால் கேப் என்ற நிலையில் இருந்து முன்னேறிவிட்டாலும், குறைந்த அளவு லாபம், பற்றாக்குறையான பண வரவு போன்ற பிரச்னைகளில் சிக்கித் தத்தளிக்கின்றன. இதே நிலைமை தொடரும் பட்சத்தில் சந்தையில் இருந்து இவை காணாமல் போகும் அபாயமும் உண்டு.

* சில மிட் கேப் கம்பெனிகள் அதிக லாபம் சம்பாதித்து மதிப்பு உயர்வும் அடைகின்றன. ஆனால், அவற்றை முறையாகப் பயன்படுத்தி முன்னேற்றக்கூடிய திறமையான மேனேஜர்களோ, நிறுவனக் கட்டமைப்போ லார்ஜ் கேப் கம்பெனிகள் அளவு இந்த மிட் கேப் கம்பெனிகளில் இருப்பது கடினம்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய சில மிட் கேப் கம்பெனிகள் சமூகத்தில் ஏற்படும் பொருளாதார அலை உயர்வால் தாமும் ஒரு திடீர் உயர்வை சந்திக்கின்றன. அந்தப் பொருளாதார அலை உயர்வு குறையும் தருணம், தங்கள் திடீர் உயர்வைத் தக்க வைத்துக்கொள்ளும் அளவு வலிமை இந்தக் கம்பெனிகளுக்கு இல்லாமல் போகலாம்.

Stock Market (Representational Image)

Also Read: முதலீட்டிற்கு பங்கம் விளைவிக்காத லார்ஜ்கேப் பங்குகள்; என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா? - 25

ஆனாலும் நம் போர்ட்ஃபோலியோவில் மிட் கேப் கம்பெனிகளைச் சேர்க்க முக்கியமான காரணங்கள் உள்ளன. கடந்த சில வருடங்களாக லார்ஜ் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளை விட மிட்கேப் பங்குகள் சிறப்பாக செயல்படுகின்றன. இவற்றில் உள்ள குறைந்த ரிஸ்க்கும், அதிக லாபமும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவை பற்றிய தகவல்களும் எளிதில் கிடைக்கின்றன. நம் போர்ட்ஃபோலியோவில் சில நல்ல மிட்கேப் பங்குகளை சேர்ப்பதன் மூலம் தரத்தையும் வளர்ச்சியையும் கூட்டலாம்.

- அடுத்து திங்கள் அன்று காலை 9 மணிக்கு சந்திக்கலாம்.


source https://www.vikatan.com/business/finance/things-you-should-know-before-investing-in-mid-cap-shares

Covid Questions: அமெரிக்காவில் பரவத் தொடங்கியிருக்கும் `R1' வேரியன்ட்; நம்மையும் தாக்குமா?

அமெரிக்காவில் ஆர் 1 (R1) என்ற பெயரில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது உண்மைதானா? கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிட்டது, இனி அது குறித்த பயம் தேவையில்லை என்று நிம்மதியடைய ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்தச் செய்தி பீதியைக் கிளப்பியிருக்கிறது. இதன் ஆபத்து நமக்கும் இருக்கிறதா?

- ஆத்விக் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

``நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மைதான். அமெரிக்காவில் நர்சிங் ஹோம் ஒன்றில் கொரோனா வைரஸின் புதிய வேரியன்ட்டான ஆர் 1 கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது பரபரப்பான செய்தியாக மாறியது. இந்த வைரஸ் வேரியன்ட் பற்றி இன்னும் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். கண்காணிப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளிலும் இந்த வேரியன்ட் இருப்பதாக ரிப்போர்ட் செய்யப்பட்டிருக்கிறது.

Also Read: Covid Questions: அறிகுறிகள் இல்லாத கோவிட் நோயாளிகளையும் பாதிக்குமா கறுப்பு பூஞ்சைத் தொற்று?

எப்படியிருப்பினும் இப்போதைக்கு இந்த வேரியன்ட் பற்றிய பெரிய பயமுறுத்தல்கள் தேவையில்லை. இந்த வேரியன்ட் வேகமாகப் பரவும் என்பதற்கோ, தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கும் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸின் வேரியன்ட்டுகளை இப்படிப் பிரிக்கிறது:

அதன்படி டெல்டா வேரியன்ட்டை கவலையளிக்கும் வகை என்றும், `mu' வேரியன்ட்டை உருமாற்றம் காரணமாக கவனத்துக்குள்ளாகி இருக்கும் வகை என்றும், `R1' வேரியன்ட்டை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் வகை என்றும் சொல்கிறார்கள்.

Covid -19 Outbreak

Also Read: Covid Questions: கொரோனாவுக்கு தடுப்பூசி ஓகே; ஆனால் மருந்து எப்போது வரும்?

இப்போதைக்கு இது குறித்த பயமோ, பதற்றமோ தேவையில்லை. ஆனால் கொரோனா நம்மைவிட்டு விலகிவிட்டது, அது குறித்த பயம் தேவையில்லை என்றும் நினைக்க வேண்டாம். அடுத்த அலை குறித்த கணிப்புகளை மருத்துவர்களாலும் அறிவியலாளர்களாலுமே உறுதியாகச் சொல்ல முடியாததால், இன்னும் சில மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளைக் கழுவுவது என கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்காதீர்கள்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/will-r1-variant-of-covid-19-which-is-prevalent-in-usa-cause-more-trouble

செவ்வாயில் ரோபோக்களுக்கு `லீவு'... இரண்டு வாரங்களுக்குத் தகவல் தொடர்பை நிறுத்திவைக்கும் நாசா! ஏன்?

செவ்வாயில் அயராது வேலை பார்த்து வரும் ரோவர்களுக்கும், லேண்டர்களுக்கும் மற்றும் ஆர்பிட்டர்களுக்கும் கொஞ்சம் விடுமுறை அளிக்கவிருக்கிறது நாசா. ரோபோக்களுக்கு விடுமுறையா என்று குழம்ப வேண்டாம். அடுத்த சில வாரங்களுக்குச் செவ்வாயும் பூமியும் எதிர் எதிரே சூரியனிற்கு இரு பக்கமும் இருக்கும். எனவே செவ்வாயிலிருந்தோ பூமியிலிருந்தோ தகவல்களை அனுப்புவதில் குழப்பங்கள் ஏற்படலாம். எனவேதான் அடுத்த சில வாரங்களுக்குச் செவ்வாயில் இருக்கும் ரோபோக்களுடன் தகவல் தொடர்பை நிறுத்தி வைக்கப்போகிறது நாசா.

Mars Solar Conjunction

பூமியும் செவ்வாயும் எதிர் எதிராகச் சூரியனிற்கு இருபக்கமும் வரும் நிகழ்வை Mars Solar Conjunction என்று குறிப்பிடுகின்றனர். சூரியனில் இருந்து எப்போதும் வெப்பமான, அயனியாக்கம் செய்யப்பட்ட வாயு (Ionized Gas) வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் செவ்வாயில் இருந்தோ, பூமியில் இருந்தோ தகவல்களை அனுப்பும் போது நடுவில் சூரியன் இருப்பதால் தகவல்கள் முழுமையாக எதிர்ப்பக்கத்தைச் சென்று சேராது.

எதிர் எதிர் திசையில் சூரியனிற்கு இருபுறமும் இருக்கும் பூமி மற்றும் செவ்வாய்

பூமியில் இருந்து அனுப்பப்படும் தகவல்கள் முழுமையாகச் சென்று சேரவில்லை என்றால், செவ்வாயில் இருக்கும் ரோவர்கள், லேண்டர்களில் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் இந்தக் காலத்தில் மட்டும் தகவல்தொடர்பை நிறுத்தி வைக்கிறது நாசா.

இந்த நிலை இரண்டு வாரங்கள்வரை தொடரும். இது வழக்கமாக இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு தான். கடந்த 2019-ல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இதே போன்று இரண்டு வாரங்களுக்குத் தகவல் தொடர்பை நிறுத்திவைத்தது நாசா. இப்போது அக்டோபர் 2 முதல் அக்டோபர் 16 வரை தகவல்தொடர்பை நிறுத்தி வைக்கவிருக்கின்றனர்.

Also Read: கையை மீறிச் சென்று கொண்டிருக்கும் E-Waste பிரச்னை... எப்படிக் கையாள்கிறது ஐரோப்பிய ஒன்றியம்?

இந்த இரண்டு வாரக் காலங்களும் செவ்வாயில் இருக்கும் ரோபோக்கள் செயல்படாதா?

இந்த இரண்டு வாரக் காலம், செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையே தகவல் தொடர்பு மட்டும்தான் துண்டிக்கப்படும் என்பதால், அதற்கு முன்பே அவற்றுக்கான 'ஹோம் வொர்க்' கொடுக்கப்பட்டுவிடும். செவ்வாயில் இருக்கும் ரோபோக்கள் இந்த இரண்டு வாரக் காலமும் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற கமாண்டை முன்பே கொடுத்துவிடுவார்கள் நாசா விஞ்ஞானிகள். அதற்கேற்ற வகையில் அவை தரவுகளைச் சேர்த்து வைத்திருக்கும். மீண்டும் தகவல் தொடர்பு சீரானதும் சேர்த்து வைக்கப்பட்ட தரவுகளை மொத்தமாகப் பூமிக்கு அனுப்பிவிடும்.

தற்போது செவ்வாயில் நாசாவினுடைய Perseverance மற்றும் Curiosity ஆகிய இரண்டு ரோவர்கள், Ingenuity ஹெலிகாப்டர், Insight லேண்டர், Odyssey, MAVEN மற்றும் Mars Reconnaissance Orbiter ஆகிய ஆர்பிட்டர்கள் இயக்கத்தில் இருக்கின்றன.

செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையே சூரியன் வரும் இந்த இரண்டு வாரங்களுக்கு மட்டும் ஏன் தகவல் தொடர்பை நிறுத்தி வைக்கிறார்கள் என்பதை நாசாவின் ஒரு நிமிட காணொளியின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

செவ்வாயில் இருக்கும் ரோபோக்கள், என்னனென்ன செயல்களைச் செய்கின்றன?

Perseverance ரோவர் செவ்வாயின் வானிலை தொடர்பான தகவல்கள் சேகரிப்பது, புதிய சத்தங்களைப் பதிவு செய்வது ஆகிய செயல்களை மேற்கொள்ளும். Ingenuity ஹெலிகாப்டர் Perseverance-ல் இருந்து 175 மீட்டர் தொலைவில் தற்போது இருக்கிறது. அது ரோவருக்கு அதன் நிலை குறித்த தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும்.

கியூரியாஸிட்டி ரோவரும் வானிலை தொடர்பான தகவல்கள், ரேடியேஷன் குறித்த தகவல்களோடு சேர்த்து, அதன் கேமரா செவ்வாயின் மண் துகள்கள் குறித்த தரவுகளையும் சேகரிக்கும். இன்சைட் லேண்டர் அதன் செய்ஸ்மோமீட்டர் கருவியைக் கொண்டு செவ்வாயின் தரைப்பரப்புக்கு அடியில் நிகழும் நிகழ்வுகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும். செவ்வாயை வட்டமடித்து வரும் மூன்று ஆர்பிட்டர்களும் செவ்வாயின் மேற்பரப்பு குறித்த தகவல்களைச் சேகரிக்கும்.



source https://www.vikatan.com/science/astronomy/nasa-will-stand-down-from-commanding-its-mars-missions-for-the-next-few-weeks

`உள்ளாட்சித் தேர்தல் முடியும்வரை விலக்கு' -லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எம்.ஆர்.விஐயபாஸ்கர் கடிதம்

அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு, லஞ்ச ஒழிப்பு துறையில் நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையை காரணம் காட்டி, விலக்கு கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

லஞ்ச ஒழிப்புதுறை

Also Read: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வேண்டும்! - லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

திமுக ஆட்சிக்கு வந்தத பிறகு, கடந்த ஆட்சியில் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.சி.வீரமணி என்று தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தற்போது, வேலுமணி தொடர்புடைவர்களின் இல்லங்களிலும் சோதனை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில், கடந்த ஜூலை 21 -ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அவரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிரசாரத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அவர் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் சம்பந்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ. 25 லட்சம் பணம், ஆவணங்களை கைப்பறியதாக தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, 30 ஆம் தேதியான நேற்று, எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கிடையில், கரூர், 8 வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு பதவிக்கு போட்டியிடும் தானேஷ் என்கிற முத்துக்குமாருக்கு கடந்த சில நாள்களாக வாக்கு சேகரித்து வருகிறார் எம்.ஆர் விஜயபாஸ்கர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராவாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கேட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mrvijayabaskar-asked-for-exemption-from-investigation-till-local-body-election-completes

அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலப்பு விவகாரம்: 3 வது முறையாக ஆய்வு மேற்கொண்ட பசுமை தீர்ப்பாயக்குழு!

கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு மற்றும் நகராட்சி கழிவுநீர் கலப்பது குறித்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயக்குழு 3 வது முறையாக ஆய்வு செய்திருக்கிறது.

அமராவதி ஆற்றில் சோதனை

Also Read: `தேர்தல் புறக்கணிப்பு' அறிவித்த கிராம மக்கள்; படையெடுத்த அதிகாரிகள்; தொடங்கப்பட்ட பணிகள்!

கரூரில் நகரின் வழியாக செல்லும் அமராவதி ஆறு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து தொடங்கி, கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலூரில் உள்ள காவிரியில் கலக்கிறது. இந்த நிலையில், அமராவதி கரைகளில் இருந்த சாய்ப்பட்டறை ஆலை கழிவுகளால், இந்த ஆறு விஷமானது. நிலத்தடி நீரும் கெட்டுப்போனது என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக உள்ளது. இதனால், விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததையடுத்து, 15 வருடங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் இழுத்து மூடப்பட்டன. ஆனால் தற்போதும், 60 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், மறுபடியும் அமராவதி ஆற்றில் சாயக்கழிவை ஆலைகள் திறந்துவிடுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆய்வு மேற்கொள்ளும் மேக்னா

அதனால், கரூர் அமராவதி ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களில் சாயக்கழிவு மற்றும் கரூர் நகராட்சி கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை சுமோட்டாவாக இவ்விவகாரத்தினை விசாரணைக்கு எடுத்தன. தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனைத்துத் துறையினர் அடங்கிய குழுவை அமைத்து அமராவதி ஆறு, கிளை வாய்க்கால்கள், சாயக்கழிவு, கரூர் நகராட்சி கழிவு நீர், திடக்கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 11, 12 ஆம் தேதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் நீதிமன்றம் திருப்தி அடையாததால், கடந்த ஜூன் மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாயப்பட்டறைகளில் மட்டுமே தனியே ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் நகராட்சி கழிவுநீர், திடக்கழிவுகள் அமராவதி ஆற்றில் கலப்பது குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை மறு ஆய்வு செய்து, ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 22 ஆம் தேதி மறு ஆய்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, தென்னிந்திய பசுமைத்தீர்ப்பாயம் மூன்றாவது முறையாக கரூர் அமராவதி ஆற்றில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வு மேற்கொள்ளும் மேக்னா

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானிகள் மேக்னா, கார்த்திகேயன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், அமராவதி ஆறு நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் முருகேசன், நகராட்சி பொறியாளர் நக்கீரன் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். அவர்கள், கரூர் அமராவதி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி மேக்னா, "தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பிலான குழு அமராவதி ஆற்றில் இரு நாள் ஆய்வை தொடங்கி உள்ளோம். கடந்த இரு முறை நடந்த ஆய்வுகளின் போது விடுப்பட்ட சில தகவல்களை சேகரிப்பதற்காக, தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் நகருக்குள் அமராவதி ஆறு வருவதற்கு முன்புள்ள செட்டிப்பாளையம், அமவராதி கதவணை தொடங்கி நகரில் அமராவதி செல்லும் பகுதிகளில் இருந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி, ஆறு இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அமராவதி ஆற்றங்கரையில் உள்ள 11 தொழிற்சாலைகளின் கழிவு நீர் மற்றும் திடக்கழிவுகள் எதுவும் அமராவதி ஆற்றில் கலக்கவில்லை.

பேட்டியளிக்கும் மேக்னா

ஆய்வை முடித்து, ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். ஆய்வு முறையாக நடத்தப்படுகிறது. அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்வோம்" என்றார். ஆனால், 'மேக்னாவுக்கு இந்தி, ஆங்கிலம் மட்டும் தெரியும் என்பதால், தமிழ் தெரியாத அதிகாரியை அனுப்பி ஆய்வு செய்ய சொல்வது, தவறு. இதனால், ஆய்வு முறையாக நடக்காது' என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.



source https://www.vikatan.com/news/environment/karur-amaravati-river-environment-issue-third-time-investigation

மதுரை: தெற்கு ரயில்வேயில் கோரக்பூர் தேர்வாளர்களை நியமனம் செய்யும் முயற்சி நிறுத்தம்!

தெற்கு ரயில்வேயில் பணிக்கு தேர்வானவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும்போது, வடகிழக்கு ரயில்வேயை சேர்ந்த 54 பேர் பட்டியலை தெற்கு ரயில்வே கேட்டு வாங்கியது கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சு.வெங்கடேசன்

இந்த செயல் எந்த வகையிலும் நியாயமானதல்ல, இது நிறுத்தப்பட வேண்டும், இல்லையென்றால் நேரடியாக போராட்டத்தில் இறங்குவோம் என்று கடந்த செப்டம்பர் 25-ம் தேதி ரயில்வே அமைச்சருக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் அவருடைய கோரிக்கையை தெற்கு ரயில்வே ஏற்றுக்கொண்டு கோராக்பூரில் பெற்ற தேர்வாளவர் பட்டியலை திருப்பி அனுப்பியுள்ளது.

தெற்கு ரயில்வே

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சு.வெங்கடேசனிடம் பேசினேன், "எனது கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே, கோரக்பூர் தேர்வாளர் பட்டியலை கடந்த 28-ம் தேதி திருப்பி அனுப்பியுள்ளது. இதற்காக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும், என் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read: ரயில்வே பணிகளில் மீண்டும் வடமாநில ஆதிக்கமா? நடந்ததும் நடப்பதும்

அதேநேரம் தெற்கு ரயில்வேயில் உள்ள 51 காலி பணியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள சென்னை ரயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்வானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

சு.வெங்கடேசன்

ஏற்கனவே ரயில்வே தேர்வு வாரியத்தின் சென்னை இணையதளத்தில், அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு செய்யப்பட்டவர்களை 2022 வரை பணியமர்த்தலாம் என்றும் இணையதளத்தில் உள்ளது.

எனவே, சென்னையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களையும் அந்த 51 காலிப்பணியிடங்களில் நிரப்பிட வேண்டும். தேவைப்பட்டால் ரயில்வே அமைச்சர் இதில் தலையிட்டு அனுமதி வழங்க கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/appointment-regulated-in-southern-railway-after-heavy-opposition-from-tamil-nadu

``விவசாயத்தை வாழ வைக்க வேண்டுமென்றால்.. 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கணும்!" - சீமான்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கோலியனூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, "கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ச்சியாக பயணிப்பது தான் வெற்றி. மாறாக சமரசம் செய்து கொண்டு, அவரோடு இவரோடு சேர்ந்து கொண்டு, வாக்குகளுக்கு காசு கொடுத்து பெறுவது வெற்றி கிடையாது. நாங்கள் அடுத்த தேர்தல் வெற்றியை எண்ணி நிற்கிறோம். நிரந்தரமான வெற்றியை தேடி போராடிக்கொண்டு இருக்கிறோம். வாக்கு சதவீதத்தின் படி வளர்ந்து கொண்டு தானே இருக்கிறோம். 'அவை சீட்டாக மாறவில்லையே?' என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் சீட்டை பெற வரவில்லை, நாட்டை கைப்பற்ற வந்துள்ளோம்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான்

Also Read: உள்ளாட்சித் தேர்தல்; களத்தில் மிரட்டப்படுகிறார்களா எதிர்க்கட்சி வேட்பாளர்கள்?

இப்போது ஆட்சி மாற்றம் என்பது எடப்பாடியை தொடர்ந்து ஸ்டாலின் வந்துள்ளார் அவ்வளவுதானே. 'நீட்' டுக்கு எதிராக நம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை, 'நாங்கள் ஏற்கவேண்டியது இல்லை' என்று கூறுகிறார்கள் மத்தியில். அப்போ... 'நீங்க மதிக்கலனா, நீங்க கொண்டு வருகின்ற சட்டத்தை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும்' என இவர்கள் சண்டை போட வேண்டும். மதிக்க முடியாது என்று சொல்ல வேண்டும். அந்த மாதிரி எல்லாம் இவங்க சண்டை போட மாட்டாங்க. ஆனால் நாங்க போடுவோம், பொறுத்திருந்து பாருங்க. நாம்தமிழர் வேட்பாளர்களை இந்த உள்ளாட்சித் தேர்தலின்போது வாபஸ் பெறும்படி கூறியதும், மிரட்டப்படுவதும் உண்மைதான். செஞ்சி தொகுதியில் ஒன்றிய செயலாளரை கடத்திச்சென்று வாபஸ் பெற வைத்துள்ளனர் என்கின்றனர். காவல் துறை, மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் புகார் கொடுக்கின்றோம். ஆனால் யாரும் புகாரை எடுப்பதில்லை.

மாவட்ட ஆட்சியர்களை நியமித்தது அரசு. அப்போது அவர்களுக்கு ஆதரவாக தானே இயங்குவார்கள். இச்செயல் இந்த ஆட்சியில் என்பதல்ல... எந்த ஆட்சி வந்தாலும் நடக்கும். அதனால் தான் இவர்களை ஒழிக்க நினைக்கிறோம். ஒரு ஜனநாயக நாட்டில் உண்மையும், நேர்மையுமாக தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை என்றால்... நீங்கள் என்ன நிர்வாகம் செய்கிறீர்கள். அனைவருக்கும் சமவாய்ப்பு இருக்க வேண்டும் அல்லவா! சின்ன பசங்களாகிய எங்களைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்?

Also Read: வேளாண் சட்டம்: `அறிக்கை மீது நம்பிக்கை இல்லை; வாபஸ் பெறுவதே தீர்வு!' - விவசாயிகள் தொடர் போராட்டம்

தொடர்ந்து வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடுவோம். வேளாண் சட்டம், வேளாண் குடிகளுக்கு மட்டும் பாதிப்பு என்பது பைத்தியக்காரத்தனம். அது ஒட்டுமொத்த நாட்டு குடிகளுக்கும் எதிரானது.

சீமான்

இந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றால்... கூட்டிணைவு நிறுவனங்களின் நம்பிக்கையை இழந்து விடுவோம்." என்று அமைச்சரே கூறுகிறார். அப்போ, இது யாருக்கான திட்டம்? என பார்க்கவேண்டும். உள்ளாட்சி தேர்தலில் என் தம்பிகள், தங்கைகள் வெற்றிபெற்றால்... ஊழலற்ற, லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகத்தை கிராமங்களில் செய்யலாம்.

விவசாயத்தை வாழ வைக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கணும். மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தை ஈட்டுகின்ற நாடு எதுவோ அதுதான் வாழும், வளரும். மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டு, சோம்பி இருக்க வைத்து கூலி கொடுப்பதென்பது மிக ஆபத்தான போக்கு. வேளாண்மை செய்வதற்கு ஆட்களே வரவில்லை எனும்போது, வேளாண்மைக்கு என எதற்கு தனி பட்ஜெட். அதனால் பயன் என்ன வரப்போகிறது? அது ஏமாற்று தானே. 100 நாள் வேலை திட்டம் வந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது? எத்தனை மரம் நடவு செய்துள்ளீர்கள்; ஏரி, குளங்களைத் தூர்வாரி உள்ளீர்கள்; சாலையை சீரமைத்துள்ளீர்கள் என்றால்... ஒன்னும் கிடையாது. கூட்டமாக பல்லாங்குழி ஆடுவது, சீட்டாடுவது, புரணி பேசுவது... இதற்கு தண்டமாக ஒரு சம்பளம். ஏழ்மையில் உள்ள ஒரு நாட்டில், மக்களை உழைப்பிலிருந்து வெளியேற்றி வேடிக்கை பார்ப்பது என்ன அர்த்தம். நீங்க ஊதியமாக 100ரூ, 200 ரூபாய் தரலாம். ஆனால், அரிசி, பருப்பு, தக்காளி, வெண்டைக்காய் எங்கிருந்து வரும். காசை பீய்த்து சாப்பிட முடியுமா. வறுமையை போக்க வேண்டும் என்றால்... வேளாண்மை செய்யணும்.

100 நாள் வேலை

இங்குள்ள இரண்டு கட்சியை பொறுத்தவரையில் ஆள் மாறுமே தவிர ஆட்சி மாறாது. இவங்க வந்தாலும் ஓட்டுக்கு காசு, அவங்க வந்தாலும் ஓட்டுக்கு காசு. இரண்டு பக்கமும் லஞ்சம் இல்லாமல் வேலை செய்ய மாட்டார்கள். டாஸ்மார்க் இயங்கும். அதனால் பெரிய மாறுதலை எதிர்பார்க்க முடியாது. ஒரு கொடியில் அண்ணா இருப்பார், மற்றொன்றில் இருக்க மாட்டார் அவ்வளவுதான்" என்றார்

Also Read: சீமான்: பாஜக-வுக்கு ஆதரவாக நான் எப்போது பேசினேன்?|விஜய் மக்கள் மன்றம் கலைப்பு - எஸ்ஏசி|Quicklook

'இந்து இல்லாமல் தமிழ் எங்கே வளரமுடியும்' என்று ஹெச்.ராஜா பேசியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், "சைவத்திற்கும், தமிழுக்கும் தான் சம்பந்தம் உள்ளது. 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் இந்துக்களா..? அவர் என்னுடன் பேசுவதற்கு தயாரா..? தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.

இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இன்று பனை விதைகளை நடுவோம், படித்த இளைஞர்களை முனைவர்களாக கொண்டு வருவோம் என்கிறார்கள். அன்று நாங்கள் சொல்லும் போது சிரித்தார்கள். இப்போ 'மேட் இன் தமிழ்நாடு' என்கிறார்கள். ஒரு குண்டூசியை கூட நாம உற்பத்தி பண்ணுவது கிடையாது. தயாரிப்பு முழுக்க மதுபானங்கள் தான். இந்தியாவே 'மேக் இன்' திட்டத்தை தான் வைத்துள்ளது. இதை தான் நாங்கள் 'வாடகைத்தாய் பொருளாதாரக் கொள்கை' என்கிறோம். அது தகர்க்கப்பட வேண்டும். இந்த நாட்டில் காரை ஏற்றுமதியும், சோறு இறக்குமதியும் செய்றீங்க. தற்சார்பு என்பது மிக அவசியமானது.

சீமான் - எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

ராணுவ தளவாடங்களை வெளிநாட்டில் இருந்து வாங்குகிறீர்கள். 'எங்கே ஃபைல்' என்று நீதிமன்றம் கேட்டால், காணவில்லை என்கிறீர்கள். ஒரு ஃபைலை கூட பாதுகாக்க தெரியாதவர்கள்... எப்படி நாட்டை பாதுகாப்பார்கள். தேசத்தை நேசிப்பவரை துரோகி என்றும், தேசத்தை காட்டிக் கொடுப்பவனை தலைவன் என்றும் கூறிக்கொள்வது. இது ஒரு போக்கா! ராணுவ ரகசியம் இங்கு எங்கே உள்ளது? அதானி துறைமுகத்தில் தற்போது 21,000 கோடி ஹெராயின் வந்துள்ளது. அதற்கு 2 பேரை கைது பண்ணியுள்ளார்கள். இவர்கள் மட்டும்தான் இதற்கெல்லாம் காரணமா? எந்த கேள்விக்கு இவர்கள் பதில் கூறி உள்ளார்கள்?" என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/seaman-interview-in-viluppuram-after-local-body-election-campaign

1000 நாட்டுக்கோழிகள், அசத்தலான வருமானம்; சாத்தியமானது எப்படி? | Pasumai Vikatan



source https://www.vikatan.com/news/agriculture/pudukottai-farmer-shares-his-experience-on-native-breed-poultry-farming

திருமணம் மீறிய உறவு; கணவரின் அக்காவை விருந்துக்கு அழைத்து கொள்ளை! 7 மாதங்களுக்குப் பிறகு பெண் கைது

கன்னியாகுமரி மாவட்டம், சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பேபி சுதா (44). இவர் நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்துவருகிறார். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். பேபிசுதா தன்னுடைய இரண்டு மகள்களுடன் சேரமங்கலத்திலுள்ள தனது வீட்டில் வசித்துவருகிறார். கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி பெத்தேல்புரம் பகுதியில் வசிக்கும் தன்னுடைய தம்பி சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளி மோள், பேபிசுதாவை தங்கள் ஊரில் சர்ச் திருவிழா நடப்பதாகவும், வீட்டுக்கு விருந்துக்கு வரும்படியும் அழைத்திருக்கிறார்.

தம்பி மனைவியின் அழைப்பின் பேரில் பேபிசுதா தனது வீட்டைப் பூட்டிவிட்டு இரண்டு மகள்களுடன் ஷர்மிளிமோள் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள தேவாலயத் திருவிழாவில் கலந்துகொண்டு விருந்து முடித்து ஜனவரி 28-ம் தேதி சேரமங்கலத்திலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார் பேபிசுதா. அப்போது அவரின் வீட்டின் பின்பக்கக் கதவுகள், அறைக் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அறையிலிருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த 50 சவரன் தங்க நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது. இது குறித்து அவர் மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பபின்

கொள்ளையர்களைப் பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். கடந்த ஏழு மாதங்களாகத் தனிப்படை போலீஸாருக்கு கொள்ளையடித்தவர்கள் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து கொள்ளை நடந்த அன்று அந்தப் பகுதியில் ஆக்டிவாக இருந்த செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். அப்போது, பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நள்ளிரவில் அந்தப் பகுதியில் உபயோகத்தில் இருந்தது கண்டறியப்பட்டது.

அந்த வாலிபர் செல்போனிலிருந்து பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் அந்த வாலிபரையும், அவருடன் இருந்த இளம்பெண்ணையும் மண்டைக்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையில் அந்த வாலிபர் பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த பபின் (27) என்பது தெரியவந்தது. ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரான பபின் ஆஸ்திரேலியாவில் வேலை செய்துவந்தார். கொரோனா நோய்த் தொற்றால் வேலை இழந்து ஒன்றரை வருடத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

நகை கொள்ளை!

ஊரில் வேலை இல்லாமல் சுற்றிய பபினுக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளி மோள் (24) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. கம்ப்யூட்டர் பட்டதாரியான ஷர்மிளி மோளின் கணவர் கட்டடப் பணி செய்துவருகிறார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை இருக்கிறது. பபினும், ஷர்மிளிமோளும் தனியாகப் பல இடங்களில் சுற்றிவந்தனர். இதனால் செலவுக்குப் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஷர்மிளிமோள் தனது கணவரின் சகோதரி வீட்டிலேயே கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டி, பபின் மூலம் அதை செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "ஷர்மிளிமோள் தனது ஆண் நண்பர் பபினுடன் சேர்ந்து சேரமங்கலத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரி பேபிசுதா வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டார். பேபி சுதா தங்க நகைகளுடன் நல்ல வசதியாக இருப்பதாகவும், வீட்டில் நகைகள் எங்கெங்கு இருக்கின்றன என்று தனக்குத் தெரியும் என்றும் சர்மிளிமோள் கூறியிருக்கிறார். ஷர்மிளி மோளின் திட்டத்துக்கு உடன்பட்டிருக்கிறார் பபின். அந்தத் திட்டத்தின்படி தன்னுடைய கணவரின் சகோதரி பேபி சுதாவை கடந்த ஜனவரி 26-ம் தேதி வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருக்கிறார் ஷர்மிளிமோள்.

ஷர்மிளி மோள்

கொள்ளையடித்த நகைகளை விற்று, அந்தப் பணத்தில் ஊட்டியில் சொகுசு வீட்டை வாடகைக்கு எடுத்து சில நாள்கள் தனிமையில் சந்தோஷமாக இருந்துவிட்டு ஊருக்குத் திரும்பியுள்ளனர். இது போன்று அடிக்கடி நேர்முகத்தேர்வு என ஷர்மிளிமோள் சென்றிருக்கிறார். ஒருகட்டத்தில் வெளியூர் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், திட்டத்தை மாற்றியிருக்கிறார்கள். கொள்ளையடித்த நகையின் ஒரு பகுதியை விற்று, பபினைப் புதிதாக வீடு கட்டும்படி கூறியிருக்கிறார் ஷர்மிளி மோள். ஷர்மிளி மோளின் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி, பபின் புதிய வீடு கட்டியிருக்கிறார். பபினின் வீட்டில் வயதான பாட்டியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதனால் ஷர்மிளி மோள், பபினின் வீட்டுக்கு அடிக்கடி சென்று இருவரும் சந்தித்துவந்துள்ளனர். இப்போது விசாரணையில் வசமாகச் சிக்கிக்கொண்டனர்" என்றனர். இப்போது இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/women-asked-her-man-in-affair-to-loot-her-sister-in-law-house

திருத்தணி: பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்! - வைரலான வீடியோ; மடக்கிப் பிடித்த போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த மத்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (22). நேற்று முன்தினம் இளைஞர் உதயகுமார் தனது 22-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மத்தூர் காலனி அருகிலுள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அங்கு சென்றவர், நண்பர்கள் வாங்கிவைத்திருந்த `கேக்´-ஐ இருசக்கர வாகனத்தின்மீது வைத்து இரண்டரை அடி நீளம்கொண்ட பட்டாக்கத்தியால் வெட்டி நண்பர்களுக்கு ஊட்டினார். அப்போது, உதயகுமாரின் நண்பர்கள் அவர் கத்தியால் கேக் வெட்டியதைத் தங்களது மொபைலில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்

அந்த வீடியோ, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் வைரலானதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் சிலர் இது குறித்து திருத்தணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் மத்தூர் காலனி பகுதிக்கு விரைந்த போலீஸார், பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர் உதயகுமார்மீது வழக்கு பதிந்து, அவரைக் கைதுசெய்து, பட்டாக்கத்தியைப் பறிமுதல் செய்தனர். உதயகுமார் ஏற்கெனவே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாகக் கைதாகி சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பட்டாக் கத்திகளும் படுகொலைகளும் இல்லா வடசென்னை வரலாறு! - சார்பட்டா பரம்பரை வாசகர் விமர்சனம்



source https://www.vikatan.com/news/crime/police-arrested-youngster-who-cuts-cake-using-knife-during-birthday-celebration

`திப்பு சுல்தானின் சிம்மாசனத்தில் அமர ஆசைப்பட்ட வி.ஐ.பி-க்கள்!’ -மோன்சன் மாவுங்கல்லின் மோசடி லீலைகள்

மோட்டிவேஷன் ஸ்பீக்கர், தெலுங்கு சினிமா நடிகர், ஆயுர்வேத டாக்டர், தொல்லியல் பொருள்கள் சேகரிப்பாளர் எனத் தன்னைக் காட்டிக்கொண்டவர் கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்த மோன்சன் மாவுங்கல். சேர்த்தலையிலும், கொச்சியிலும் பிரம்மாண்ட வீடுகள் இவருக்கு உள்ளன. கொச்சியிலுள்ள வீட்டில் பழைமையான பொருள்களின் மியூசியம் எனப் பல பொருள்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்.

இந்தநிலையில் புரூனே சுல்தானின் கிரீடம் விற்ற வகையில், தனக்கு 70,000 கோடி ரூபாய் வரவேண்டியிருக்கிறது. அதற்கு வரி செலுத்துவதற்காகப் பணம் வேண்டும் என ரூ.6.27 கோடி வாங்கி மோசடி செய்ததாக சேர்த்தலாவைச் சேர்ந்த ஷாஜி என்பவர் அளித்த புகாரின் பேரில் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் மோன்சன் மாவுங்கல்லைக் கைதுசெய்துள்ளனர். ஏற்கெனவே சுமார் 12 கோடி ரூபாய்க்கான மோசடிக்கான புகார் சென்றுள்ள நிலையில் மோன்சன் மீது பல்வேறு மோசடிப் புகார்கள் வந்துள்ளன. இந்தநிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் மோன்சனின் மியூசியத்தில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்திருக்கிறது.

மோன்சன் மாவுங்கல்

வி.ஐ.பி-க்களை தனது மியூசியத்துக்கு வரவழைக்கும்போது திப்பு சுல்தானின் சிம்மாசனம் எனக் கூறி ஓர் இருக்கையில் அமர வைப்பது அவரின் வழக்கம். அந்த சிம்மாசனத்தில் கேரள மாநில முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து போட்டோ எடுத்துள்ளனர். வி.ஐ.பி-க்கள் சிம்மாசனத்தில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து அதில் அமர்ந்து புகைப்படம் எடுக்க பல வி.ஐ.பி-க்கள் ஆசைப்பட்டிருக்கிறார்களாம்.

Also Read: ``சுல்தானின் கிரீடம் விற்றதில் ரூ.70,000 கோடி வரவிருக்கிறது"- `மோசடி' மோன்சன் மாவுங்கல் கைது!

இப்போது அந்த சிம்மாசனம் போலியாகத் தயாரிக்கப்பட்டது என தெரியவந்திருக்கிறது. மேலும் மியூசியத்தில் உள்ள யானைத் தந்தங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் என அனைத்தும் போலியானவை எனக் கூறப்படுகிறது. மியூசியத்தில் இருக்கும் அத்தனை பொருள்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறை மற்றும் சுங்கத்துறையினர் மோன்சன் மாவுங்கல்லின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

மோன்சன் மாவுங்கல்

தன்னிடம் இருந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருள்களை விற்பனை செய்ததில் தனக்குப் பணம் வரவேண்டியிருப்பதாகவும், அதற்கு வரி செலுத்தினால் பணம் வந்துவிடும். அதற்காக இப்போது பணம் தந்தால் பல கோடியாக திருப்பித் தந்துவிடுவேன் எனக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் மோன்சன் மாவுங்கல். மோசடி மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பர கார்கள் வாங்கி, தனது வீட்டின் முன்புறம் நிறுத்திவைத்து தன்னை முக்கியப் புள்ளியாகக் காட்டியிருக்கிறார். அவரைச் சுற்றி எப்போதும் பாதுகாவலர்களை வைத்திருப்பார். இப்போது சிறையிலிருக்கும் மோன்சன் மாவுங்கல்லிடம் முழு விசாரணை நடத்தினால், அவர் வைத்திருந்த திப்பு சுல்தானின் சிம்மாசனத்தில் அமர்ந்து குதூகலித்த வி.ஐ.பி-க்களின் விவரங்கள் வெளியாகும் என்கிறார்கள் அதிகாரிகள்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/vips-intrest-in-thippu-sultan-chairkerala-fraud-monson-mavunkal-case-update

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கு: நேரில் ஆஜராகாத டி.எஸ்.பி-க்கு பிடிவாரன்ட்!

2019-ம் ஆண்டு, ராமநாதபுரத்திலிருந்து, இலங்கைக்குக் 80 கிலோ அளவிலான போதைப்பொருள் கடத்தப்பட்டது. அப்போதைய ராமநாதபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையிலான போலீஸார், இந்தக் கடத்தல் தொடர்பாக 11 பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு, புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது ராமநாதபுரம் டி.எஸ்.பி-யாக இருந்த ரகுபதி, தற்போது திருநெல்வேலி சமூகநீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருக்கிறார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர், ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றம்

இதை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் வழங்க மறுத்ததோடு, இந்த வழக்கு விசாரணையை கீழமை கோர்ட் விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கை விரைந்து முடிக்கத் திட்டமிட்ட புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு கோர்ட் டி.எஸ்.பி ரகுபதியை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், டி.எஸ்.பி ரகுபதி ஆஜராகவில்லை. இந்தநிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி, டி.எஸ்.பி ரகுபதிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/warrant-issued-for-dsp-by-court-for-not-appearing-for-investigation

பழநி அரசு மருத்துவமனை: திடீர் புகை; ஆக்சிஜன் குழாய் வெடித்ததாக வதந்தி! - அலறி ஓடிய கர்ப்பிணிகள்

பழநி நகரின் மையப்பகுதியில், பழநி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, தாய், சேய் நலப்பிரிவு, மகப்பேறு மற்றும் புறநோளிகள் பிரிவு, கொரோனா பிரிவு மற்றும் ரத்த வங்கி ஆகியவற்றுக்கு தனித்தனியாகக் கட்டடங்கள் உள்ளன. இதில் மகப்பேறு பிரிவு 70 படுக்கைகளுடன் இயங்கிவருகிறது. இந்தநிலையில் புதன்கிழமை பகல் 12 மணி அளவில் மின்கம்பத்திலிருந்து கட்டடத்துக்குள் வரும் இணைப்புப் பகுதியில் ஷார்ட் சர்க்கியூட் ஏற்பட்டிருக்கிறது. இதில் சிறிய அளவில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கட்டடத்துக்குள் ஆக்சிஜன் குழாய் வெடித்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் வார்டில் இருந்த கர்ப்பிணிகள், தாய்மார்கள் பச்சிளங்குழந்தைகளுடன் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கட்டடத்தின் பின்பக்க நுழைவுவாயில் கண்ணாடிக் கதவு உடைந்தது.

மகப்பேறு பிரிவு

இதற்கிடையே கட்டடத்தில் இருந்த தீத்தடுப்பு உபகரணங்களைக்கொண்டு தீ ஏற்படாமல் தடுக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் விரைந்து வந்து மின் இணைப்புகளைச் சரிசெய்தனர்.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வார்டிலிருந்து வெளியேறிய கர்ப்பிணிகள், தாய்மார்கள் பாதுகாப்பாக உள்ளே அழைத்துவரப்பட்டனர்.

Also Read: மகப்பேறுக்கு தயாரான கர்ப்பிணி ஊழியர்; குட்டி வளைகாப்பு நடத்தி சர்ப்ரைஸ் தந்த அரசு அலுவலக ஊழியர்கள்!

`மகப்பேறு பிரிவு கட்டடத்தில் போதிய படுக்கை வசதி இல்லாததால், கர்ப்பிணிகள், தாய்மார்கள் படுக்கையின்றி கீழே படுக்கும் நிலை இருக்கிறது. படுக்கைகள் 70 இருந்தாலும், இங்கு கூடுதலான பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுவருகிறது. இத்தகையை சூழலில் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடத்தால் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே தாய், சேய் நலப்பிரிவுக்குக் கூடுதல் கட்டடம் அமைக்க வேண்டும் எனவும், மருத்துவமனையை முறையாகப் பராமரிக்க வேண்டும்’ எனவும் பழநி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Also Read: மீண்டும் புயலைக் கிளப்பும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை விவகாரம்... தி.மு.க-வின் திட்டம்தான் என்ன?

இது குறித்து பழநி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமாரிடம் பேசினோம். ``மருத்துவனை முறையாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது. முதலுதவி மற்றும் தீத்தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறு மின்கசிவு காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதனால் வார்டில் இருந்தவர்கள் பதறிப்போய் வெளியேறியுள்ளனர். மின் ஊழியர்ளை உடனடியாக வரவழைத்து மின் இணைப்பு பிரச்னை சரிசெய்யப்பட்டது. போதிய இடவசதி இல்லாதது உண்மைதான். கூடுதல் கட்டடத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் புதிய கட்டடம் அமையவிருக்கிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/accident/panic-at-palani-government-hospital-after-smoke-came-out

`20 ஓவரில் ஒரு ஓவர்தான் முடிந்துள்ளது!' - திமுக சாதனைகள் குறித்து செந்தில் பாலாஜி

``திமுக ஆட்சியின் நான்கு மாத சாதனை என்பது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் முடிவடைந்த மாதிரி. அதிலேயே எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. இனி, அடுத்துவரும் ஒவ்வொரு திட்டமும் மக்களைக் கவரும் வகையில் இருக்கும்’ என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி பிரசாரம்

Also Read: `திமுக அரசின் நகைக்கடன் தள்ளுபடியில் ஏகப்பட்ட நிபந்தனைகள்..!’ - குற்றம்சாட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், வெள்ளியணைப் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு 8-வது வார்டு பதவிக்கு திமுக சார்பில் கண்ணையன் என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தார். அதோடு, தேர்தல் பணிமனையையும் திறந்துவைத்தார். அதில், கலந்துகொண்ட திமுக-வினர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் கலந்துகொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில வர்த்தகப் பிரிவுச் செயலாளர் விசா.ம.சண்முகம், கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சின்னசாமி, தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் எனப் பல நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். தொடர்ந்து, வெள்ளியணை கடைவீதியில் நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கி, வாக்கு சேகரித்தார். பின்னர், தேர்தல் பிரசாரத்தில் பேசிய செந்தில் பாலாஜி,

செந்தில் பாலாஜி பிரசாரம்

``தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் எண்ணற்ற பல திட்டங்களை புதிதாக ஏற்றுள்ள அரசு அறிவித்து நடைமுறைப்படுத்திவருகிறது. அவற்றில், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, ஆவின் பால் விற்பனை விலையைக் குறைத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செலவை அரசே ஏற்றுக்கொண்டது. ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் ஜூன் மாதம் 3-ம் தேதி குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூபாய் 4,000 உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றதும் முதல் தவணையாக ரூ. 2,000, ஜூன் 3 -ம் தேதி இரண்டாம் தவணையாக ரூ. 2,000 என முன்னதாகவே வழங்கி, பொதுமக்களின் பொருளாதாரநிலையை மேம்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியின் நான்கு மாத சாதனை என்பது 20 ஓவர் கிரிக்கெட் மேட் போல. ஆனால், ஒரு ஓவர் முடிவடைந்த நிலையிலேயே எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

Also Read: மு.க.ஸ்டாலின்: `மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்!’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

இனி, அடுதது வரும் ஒவ்வொரு திட்டமும் மக்களைக் கவரும் வகையில் இருக்கும். ஆட்சியில் பொறுப்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களின் நலனில் அக்கறையோடு தி.மு.க செயலாற்றிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்கு கிலோ அரிசி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் உதவித்தொகை வழங்குகிறோம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தி, அதில் பாதித் தொகையை மட்டுமே செலவிட்டு, மக்களிடம் நல்ல பெயர் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைத்தார்கள். ஆனால், அவர்களின் ஆசை பகல்கனவாகிப் போனது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற நேரத்தில், கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இன்று படிப்படியாக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரை அதிமுக-வினரால் பொதுமக்களுக்கு எவ்விதமான உதவியும் வழங்கப்படவில்லை.

செந்தில் பாலாஜி பிரசாரம்

ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் தற்போது தேர்தல் நடைபெறும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள எட்டு ஊராட்சிகளில் சுமார் ரூ. 10.7 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் குடிநீர் வசதி வடிகால் வசதி ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கரூர் மாவட்டத்துக்கு இரண்டு தடுப்பணைகள் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். கூட்டணிக் கட்சியினரும், தி.மு.க தொண்டர்களும் பொதுமக்களிடம் வாக்குச் சேகரிக்கும் போது, நான்கு மாத கால ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி, வாக்குச் சேகரிக்க வேண்டும். அதன் மூலம், உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளில், 80 சதவிகித வாக்குகளை தி.மு.க பெற்றது என்ற வரலாற்றுச் சாதனையை உருவாக்குவோம். எதிர்க்கட்சிகளைப் பற்றி நாம் இங்கு பேச வேண்டியதில்லை. நான்கு மாத காலத்தில் மேற்கொண்ட திட்டங்கள் மற்றும் இனி அடுத்து நாம் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-senthil-balaji-election-campaign-in-karur

`அவர்தான் கிணத்துல குதிக்கச் சொன்னாரு!' - கணவரை இழந்த துக்கத்தில் விபரீத முடிவெடுத்த பெண்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த, திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (34). இவரின் கணவர் பெயர் முனுசாமி. இந்தத் தம்பதிக்கு ரட்சகன் (2), காமேஷ் (4) என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்தநிலையில், கடந்த 22-ம் தேதி பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஐஸ்வர்யாவின் கணவர் முனுசாமி ஆவடி ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன ஐஸ்வர்யா, கடந்த சில தினங்களாகவே சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல், மிகுந்த மன உளைச்சலில் இருந்துவந்திருக்கிறார். கணவர் முனுசாமி இறந்து ஒரு வார காலமே ஆகும் நிலையில், ஐஸ்வர்யா ஏற்கெனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற ஐஸ்வர்யா

இந்தநிலையில், நேற்று மதியம் யாரிடமும் பேசாமல் சோகமாக மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்தவர், திடீரென தன் இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள பச்சையம்மன் கோயில் கிணற்றுக்குச் சென்றிருக்கிறார். கிணற்றின் அருகே தங்களை அழைத்துக்கொண்டு சென்றதைக் கண்டு பயத்தில் நடுங்கிப்போன சிறுவர்கள் கத்திக் கூச்சலிட்டிருக்கின்றனர். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத ஐஸ்வர்யா சிறுவர்கள் இருவரையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு, தானும் குதித்திருக்கிறார்.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு கிணற்றுப் பகுதிக்கு விரைந்த அக்கம் பக்கத்தினர், துரிதமாகச் செயல்பட்டு சிறுவர்கள் இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால், ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற முடியாததால், உடனடியாக ஆவடி தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அடுத்த சில நிமிடங்களில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கயிறு மூலமாக ஐஸ்வர்யாவைப் பத்திரமாக மீட்டு முதலுவதி செய்து காப்பாற்றினார்கள்.

உறவினர்கள்

அதையடுத்து, அங்கு விரைந்த திருமுல்லைவாயல் போலீஸார் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற ஐஸ்வர்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஐஸ்வர்யா, ``என் கணவர்தான் என்னைக் குழந்தைகளுடன் கிணற்றில் குதிக்கச் சொன்னார். அவர்தான் எங்களை அழைத்துச் சென்றார்" என்று கூறினார். ஐஸ்வர்யாவின் பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், அவருக்கு அறிவுரை கூறிவிட்டு பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு அவரது உறவினர்களை வலியுறுத்திவிட்டுச் சென்றனர்.

இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: `மூன்று பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லை; தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதி!'



source https://www.vikatan.com/news/tamilnadu/a-woman-who-jumped-into-a-well-with-children-and-tried-to-commit-suicide-after-her-husbands-death

தேனி: ஆக்கிரமிப்பு நிலத்துக்கு அடிதடி! - நாட்டு வெடிகுண்டு வீசியதாக நாடகமாடியவர் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலகோம்பையைச் சேர்ந்தவர் சூரியன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துவருகிறது. ஏற்கெனவே இரு தரப்பினர் மீது ராஜதானி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாலகோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட கொழுஞ்சிபட்டி மயானத்துக்கு அருகேயுள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து சூரியன் என்பவர் ஆட்டுக்கொட்டகை அமைத்திருக்கிறார். இந்த இடத்துக்கு ஒருவருக்கு ஒருவர் சொந்தம் கொண்டாடியதிலும் இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு இருந்திருக்கிறது. இந்தநிலையில் சூரியன் அமைத்திருந்த ஆட்டுக்கொட்டகையை மாணிக்கத்தின் மகன்கள் முத்துபாண்டி, சின்னசாமி ஆகியோர் சேர்ந்து அடித்து நொறுக்கிவிட்டனர். இதுகுறித்து சூரியன் போலீஸாரிடம் புகார் அளிக்கும்போது,`` எனது ஆட்டுக்கொட்டகையை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி, நாட்டு வெடிகுண்டுகள் வீசிச் சென்றுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

நாட்டு வெடிகுண்டுகள்

Also Read: கத்தி, அரிவாளுடன் போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செய்த இளைஞர்; கைது செய்த போலீஸார்!

இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது கொட்டகை சூறையாடப்பட்ட பகுதியில் மூன்று நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன. அது குறித்து சூரியனிடம் கடுமையாக விசாரித்தபோது, காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டுகள் வாங்கி வைத்திருந்ததாகவும், மாணிக்கம் தரப்பினர்மீது கேஸ் ஸ்ட்ராங் ஆவதற்காகத்தான் என்னுடையை வெடிகுண்டுகளை முத்துபாண்டி, சின்னசாமி ஆகியோர் வீசிச் சென்றதாகவும் பொய் கூறினேன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து ராஜதானி போலீஸார் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி மணலில் பாதுகாப்பாகப் புதைத்து வைத்துள்ளனர்.

மேலும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக நாடகமாடிய சூரியன், முத்துபாண்டி ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சின்னச்சாமியைத் தேடிவருகின்றனர்.

போலீஸார்

இதுகுறித்து ராஜதானி போலீஸாரிடம் விசாரித்தோம், ``இடப்பிரச்னை காரணமாக இரு தரப்புக்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுவருகிறது. இவர்கள்மீது ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆக்கிரமிப்பு இடத்துக்கு அடிதடி நடத்தியதில் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில்தான் நாட்டு வெடிகுண்டு நாடகம் அரங்கேறியுள்ளது. சூரியன், அவரின் தம்பி துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் பெற்றுள்ளனர். இதை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம்” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/man-arrest-after-complaint-as-country-bomb-thrown-in-his-land

பி.கே ப்ளான் ; கன்னையா குமார், ஜிக்னேஷ் என்ட்ரி - புது ரத்தம் பாய்வதால் காங்கிரஸ் தேறுமா?

``நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சிதான் இருக்கிறது. அந்த பெரிய கப்பலைக் காப்பாற்றாவிட்டால், சிறிய கப்பல்கள் தப்பிக்க முடியாது. காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றினால், காந்தி வலியுறுத்தும் ஒற்றுமை, பகத்சிங்கின் துணிவு, அம்பேத்கரின் சமத்துவம் இவை எல்லாம் பாதுகாக்கப்படும்''

ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினருமான கன்னையா குமார், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து தெரிவித்த விளக்கம் இது. இவரைப்போல, குஜாராத் மாநிலம், வட்காம் சட்டமன்றத் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏவும் தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸ் கட்சியில் இணையாவிட்டாலும், 2022-ல் குஜராத்தில் நடைபெறப்போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். சுயேச்சை எம்.எல்.ஏவான இவர், காங்கிரஸ் கட்சியில் தற்போது இணைந்தால் எம்.எல்.ஏ பதவிக்கு சிக்கல் என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார். களச்செயல்பாடுகளின் மூலம் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற இவ்விரு இளைஞர்களின் வருகை, காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சியைக் கொடுக்குமா என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக இருவர் குறித்தும் அடிப்படையான சில விஷயங்களைப் பார்ப்போம்.

ராகுல் காந்தி - கன்னையா குமார்

கன்னையா குமார் ; 

பீகாரில், பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள பெஹாத் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கன்னையா குமார். இந்த ஊர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் அதிகம் நிறைந்த 'டேகரா' சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. கன்னையா குமாரின் குடும்பத்தினரும் தீவிரமான கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள். அதனால், பள்ளிப் பருவத்திலேயே கம்யூனிசக் கருத்துக்களைத் தாங்கிய நாடகங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வமிக்கவராகத் திகழ்ந்துள்ளார் கன்னையா குமார். பாட்னாவில் உள்ள மகத் பல்கலைக்கழகத்தில் 2007-ம் ஆண்டு புவியியல் பட்டப்படிப்பை முடித்த அவர், அடுத்த ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் (ஏ.ஐ.எஸ்.ஏ) உறுப்பினராகச் சேர்ந்தார். முதுநிலைப் பட்டம் பெற்ற பிறகு, ஜே.என்.யு-வில் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் பிரிவில் `ஆப்பிரிக்கன் ஸ்டடீஸ்' ஆய்வுப் படிப்பில் இடம் கிடைத்தது. செப்டம்பர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் சங்கத்தின் தலைவரான முதல் "அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு" உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார். ரோகித் வெமூலாவின் மரணம்தான் கன்னையா குமாரைத் தீவிரமான அரசியலின் பக்கம் திருப்பியது.

பல்கலைக்கழக வளாகத்தில், 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாணவர் கூட்டம் ஒன்றில், தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாக கன்னையா குமார், டெல்லி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது ஐ.பி.சி 124ஏ மற்றும் 120பி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம், இந்திய அரசியலில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. தொடர்ந்து, 2018-ம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கன்னையாகுமார், 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அந்தக் கட்சியின் சார்பில் பெகுசாராய் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்துவந்த கன்னையா, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை இரண்டு முறை சந்தித்து உரையாடியதாகச் செய்திகள் வெளியானது. கடந்த செவ்வாய்கிழமை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், ராகுல்காந்தி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தார்.

ராகுல் காந்தி - ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி

இவர் குஜராத் மாநிலம், மெக்சனா மாவட்டத்தில் உள்ள மெனு என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அகமதாபாத் எச். கே. கலைக் கல்லூரி மாணவனாக இருந்தபோதுதான், இலக்கியத்தின் மீதும் அரசியலின் மீதும் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது ஜிக்னேஷ் மேவானிக்கு. தொடர்ந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த ஜிக்னேஷ் மேவானி, சட்டமும் பயின்றவர். குஜராத் மாநிலம் உனா நகரில் மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக நான்கு தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு எதிராக, அகமதாபாத்திலிருந்து உனா வரை 20,000 தலித் மக்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தினார் ஜிக்னேஷ் மேவானி. இந்திய அளவில் கவனிக்கத்த இளம் தலைவரானார். ராஷ்டிரிய தலித் அதிகார் மஞ்ச் எனும் அமைப்பை நடத்திவரும் இவர், 2017-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தனித் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். இவருக்காக அப்போது, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. இந்தநிலையில், காங்கிரஸின் கொள்கைகளை ஆதரிப்பதாகவும் 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

Also Read: பிரசாந்த் கிஷோர் வந்தால்... காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ்ஸா... மைனஸா?! - ஒரு பார்வை

``காங்கிரஸ் கட்சியில் பதவிகளை அனுபவித்து, புதிய பதவிகளுக்காக மாற்றுக் கட்சிகளில் சிலர் சேர்ந்துவரும் நிலையில், மக்களுக்காக களத்தில் நின்ற போராளிகள் எங்களுடன் இணைந்துவருவது இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். அடுத்த ஆண்டு நடக்கப்போகும் ஏழு மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பெரிதும் உதவும். தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் அதன் தாக்கம் இருக்கும்'' என கன்னையா குமாரின் வருகையை, ஜிக்னேஷ் மேவானியின் ஆதரவை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். ``கன்னையா குமாரின் வருகையால் காங்கிரஸ் கட்சி பயனடையும்'' என பீகார் மாநில காங்கிரஸ் தலைவர், மதன் மோகன் ஜா தெரிவித்துள்ளார். ஜிக்னேஷ் மேவானியின் வருகையின் மூலம் தலித் மக்களின் ஆதரவை உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் பெறமுடியும் எனவும் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. மறுபுறம், ``கன்னையா குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்மையாக இருக்கவில்லை'' என விமர்சித்துள்ளார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா.

பிரசாந்த் கிஷோர்

`` பிரசாந்த் கிஷோரின் முயற்சியால்தான் இந்த விஷயங்கள் நடந்திருக்கின்றன. இருவரின் வருகையும் காங்கிரஸ் கட்சியின் மீது இளைஞர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், இதன் மூலமே தேர்தல்களில் வெற்றிபெறமுடியும் என்று சொல்லமுடியாது. காரணம், தேர்தல் வெற்றிக்கு, கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு மிகவும் முக்கியம். காங்கிரஸ் கட்சிக்கு ஒருசில மாநிலங்களைத் தவிர மிகப்பெரிய அளவில் கட்சிக் கட்டமைப்பு இல்லை. தலைவர்களின் முகங்களுக்காக வாக்களித்து விடுவார்கள் என்றால், ராகுல்காந்தியை விட் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தலைவர்கள் யாரும் இல்லை. மிகச்சிறப்பாக பேசியும் வருகிறார். ஆனாலும் காங்கிரஸ் கட்சி ஏன் தோல்வியைத் தழுவி வருகிறது. கன்னையா குமாரின் மூலம் பீகாரில் கட்சியை வலுப்படுத்தலாம். அதேபோல, ஜிக்னேஷின் மூல்ம் குஜராத்தில் தலித் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். ஆனால், ஜிக்னேஷின் முகத்தை வைத்து, உ.பியில் வாக்கு பெற முடியாது. அதேநிலைதான் கன்னையா குமாரை வைத்துக்கொண்டு பிற மாநிலங்களிலும். இந்த உண்மையை காங்கிரஸ் கட்சி உணர்ந்தால் மட்டுமே பா.ஜ.கவுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியை உருவாக்கமுடியும்'' என்கிறார்கள் தேசிய அரசியலைக் கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-kanhaiya-kumar-and-jignesh-mevani-entry-in-congress

நட்சத்திரப் பலன்கள் - அக்டோபர் 1 முதல் 7 வரை! #VikatanPhotoCards

அசுவினி
பரணி
கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-based-on-the-star-signs-for-the-period-of-october-1st-to-7th