Ad

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

`தடுப்பூசி போட வந்துருக்கேன்' - ஆவடியில் சிறுவர்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் கணபதி நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் (33). இவரது மனைவி பெயர் புஷ்பலதா (27). இந்த தம்பதிக்கு மணிகண்டன் (11), மோனிஷ் (9) என இரு மகன்கள் உள்ளனர். லோகநாதன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றைய தினம், லோகநாதன் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், அவரது மனைவி புஷ்பலதாவும் வீட்டில் பிள்ளைகளை விட்டு விட்டு தனது உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் இருவரும் வெளியில் சென்று விட்ட நிலையில், சிறுவர்கள் இருவரும் மொபைல் போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் பாடங்களைப் கவனித்து வந்தனர். அப்போது சரியாக காலை 10.30 மணிக்கு, லோகநாதனின் வீட்டுக் கதவை சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தட்டியிருக்கிறார்.

சத்தம் கேட்டு கதவைத் திறந்த சிறுவர்கள் யார் என்று விசாரிக்க இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர், ``கொரோனா தடுப்பூசி செலுத்த மாநகராட்சியிலிருந்து வந்திருக்கிறேன். வீட்டில் உங்கள் பெற்றோர் இல்லையா?, தடுப்பூசி தொடர்பாக விவரம் தேவைப்படுகிறது. உங்கள் ஆதார் அட்டைகளை எடுத்து வாருங்கள்" என்று கூறியிருக்கிறார். அந்த நபரை சுகாதாரத்துறை ஊழியர் என்று நம்பிய சிறுவர்கள் அவரை அழைத்து வீட்டின் சோபாவில் அமரவைத்து விட்டு, பீரோவிலிருந்து ஆதார் அட்டைகளை எடுத்துக் காண்பித்திருக்கின்றனர். அதை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம நபர், திடீரென சிறுவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக வீட்டின் அறை ஒன்றில் அடைத்து விட்டு பீரோவிலிருந்து தங்க நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டின் பிரதான கதவையும் தாழிட்டு விட்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கிறார்.

நகை கொள்ளை!

அதையடுத்து, அறையில் அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள் இருவரும், ஜன்னல் வழியாக அக்கம்பக்கத்தினரைக் கத்தி கூச்சலிட்டு அழைத்தனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவைத் திறந்து அவர்களை மீட்டு உடனடியாக அவர்களது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து வீட்டிற்கு வரவழைத்தனர். வீட்டிற்கு விரைந்த லோகநாதன், அவரின் மனைவி புஷ்பலதா பீரோவைச் சோதனை செய்தனர்.

Also Read: மும்பை: 10-வது மாடியில் நடந்த கொள்ளை; பின்புறமாக ஏறிச் சென்ற `ஸ்பைடர்மேன்' திருடன்!

அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க நகைகள் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, இருவரும் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நூதன கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார். லோகநாதனின் வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார், சிறுவர்களை விசாரித்து விட்டு தற்போது லோகநாதனின் வீட்டருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமியைத் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் மாநகராட்சி ஊழியர் என்ற போர்வையில் வீட்டிற்குள் நுழைந்து சிறுவர்களை அடைத்து விட்டு, மர்ம நபர் நகைகளைக் களவாடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/avadi-police-are-in-search-of-the-thief-who-cheated-the-boys-and-looted-the-jewelry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக