Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

சென்னை: மாயமான இரண்டு சிறுமிகள்; சிறார் வதை! -இருவேறு சம்பவங்களில் போக்சோவில் கைதான இளைஞர்கள்

சென்னை மாதவரம் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமி, கடந்த 18.8.2021-ம் தேதி முதல் காணவில்லை. அதனால் சிறுமியின் பெற்றோர், 19.8.2021-ம் தேதி மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், சிறுமியைத் தேடிவந்தனர். இந்தநிலையில் சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியை திருவள்ளூர் மாவட்டம், விச்சூர் தாலுகா, கொடிபள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதனால் ராஜேஷ்குமாரை போலீஸார் தேடினர். அப்போது அவரும் மாயமாகியிருந்தார்.

சிறுமி

இதையடுத்து சிறுமியையும் ராஜேஷ்குமாரையும் போலீஸார் தேடிவந்த நிலையில் இருவரும் ஒரே இடத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்குச் சென்ற போலீஸார் ராஜேஷ்குமாரைப் பிடித்து சிறுமியை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது இருவரும் காதலித்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதால் ராஜேஷ்குமாருடன் திருவள்ளூருக்குச் சென்றதாகவும் கூறியிருக்கிறார். மேலும் திருவள்ளூரில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட ராஜேஷ்குமார், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு மணலி புதுநகர் காவல் நிலையத்திலிருந்து எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷ்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்னொரு சம்பவம்:

சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் 20.8.2021-ம் தேதி 17 வயது சிறுமியைக் காணவில்லை என அந்தச் சிறுமியின் அம்மா கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சிறுமியை இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் (21) என்ற இளைஞரும் சிறுமியும் காதலித்த தகவல் தெரியவந்தது.

Also Read: ஆவடி: திருமண ஆசைகாட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர்! -போக்சோ சட்டத்தில் கைதுசெய்த மகளிர் போலீஸ்

திருமணம்

அதனால் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சதீஷ், அவரை அழைத்துச் சென்று கோயிலில் வைத்து தாலி கட்டியிருக்கிறார். பிறகு வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சிறுமியை மீட்டு கவுன்சலிங் அளித்ததோடு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற கிண்டி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையில் வெவ்வேறு இடங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/two-chennai-youths-arrested-in-pocso-case-in-two-incidents

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக