எந்த சக்தி நம்மைக் காக்கிறதோ அதுவே கடவுளாக வணங்கப்படுகிறது! தன்னால் ஒரு குலமே காப்பாற்றப்படுமானால், அதற்காக தன்னையே அழித்துக்கொண்ட மனிதர்கள் கடவுளாக வணங்கப்படுகிறார்கள். போரைத் தவிர்க்கவோ, பெரும் ஆபத்தில் இருந்து மக்களைக் காக்கவோ பலரும் உயிர்விட்டு இன்றும் தியாக தெய்வங்களாக கிராமங்களில் வணங்கப்படுகிறார்கள். அந்தவகை தெய்வங்களுள் முதன்மையானவள் கன்னிகா பரமேஸ்வரி எனும் வாசவி தேவி. இவள் தன்னையே எரித்துக்கொண்டு தனது பெரும் கூட்டத்தைக் காப்பாற்றிய வீர தெய்வம். இன்றும் தென்னகம் எங்கும் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் என்ற பெயரில் இவள் வணங்கப்படுகிறார்.
ஆந்திர மக்களில் வைஸ்ய குல பிரிவினரின் குலதெய்வமாகவே போற்றப்படும் ஸ்ரீவாசவி அன்னை தனது இன்னுயிரை தீயில் மாய்த்துக் கொண்ட தினம் இன்று! 2-2-22 ஆகிய இந்த நாளில் இந்த அம்மனைப் போற்றி வணங்குவதில் பெருமை கொள்வோம்!
அன்னை சக்தி தேவி ஈசனின் சாபத்தால் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்க வேண்டிய நிலை உருவானது. அதன்படி ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரிக் கரையருகே இருக்கும் பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டி - கௌசும்பா தம்பதிகளுக்கு சித்திரை மாத வளர்பிறை தசமியில் தெய்வத்திருமகளாக அவதரித்தார் ஸ்ரீவாசவி எனும் குசுமாம்பிகா. இவளோடு ஒரு ஆண் மகவும் பிறந்து விஷ்ணு அம்சத்தில் வளர்ந்தது. பெண் வளர்ந்து குமரியானாள். அன்னையின் அழகும் புத்திசாலித்தனமும் அந்த கூட்டத்தை மகிழ வைத்தது.
அந்த நேரத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது! ஆந்திர தேசத்தை ஆண்ட ஸ்ரீவிஷ்ணுவர்த்தன், போரில் வென்று, திரும்பும் வழியில் பெனுகொண்டா நகருக்கு வந்தான். அங்கு அவனுக்கு வணிகச் சீலர்கள் வரவேற்பு அளித்து, ஒவ்வொரு வீட்டிலும் மரியாதை செய்தார்கள். இப்படி அவன் வரும்வேளையில் குசும ஸ்ரேஷ்டியின் வீட்டுக்கும் வந்தான். அங்கிருந்த அன்னை வாசவியைக் கண்டான். மானிடப் பெண் என்று கருதி அன்னையின் அழகில் மயங்கினான். அந்த ஊரை விட்டு மன்னன் விலகினாலும் வாசவியின் அழகில் சொக்கியேக் கிடந்தான். அதனால் தனது பரிவாரங்களை அனுப்பி வாசவியின் வீட்டில் பெண் கேட்கச் செய்தான். வாசவியின் பெற்றோரும் உற்றோரும் இந்த சம்பந்தத்தை எதிர்த்தனர். தெய்வ வடிவான அன்னையை மன்னனின் அந்தப்புரப் பெண்களில் ஒருத்தியாக அனுப்ப மனமில்லை என்று மறுத்தனர். மன்னன் சினம் கொண்டான்.
'தனக்குத் திருமணம் செய்து தராவிட்டால் அந்த ஊரையே அழித்து விடுவதாகவும்' மன்னன் மிரட்டினான். வாசவி அன்னையின் ஊரும் உறவும் தவித்தது. இது என்ன சோதனை என்று அன்னையிடம் புலம்பியது. வாசவி தாய் சிந்தித்தாள். தன் பொருட்டு யாரும் உயிர் விடக் கூடாது என்று எண்ணினாள். இந்த நிலையில் விஷ்ணுவர்த்தன் பெனுகொண்டா நோக்கிப் போரிட புறப்பட்டான். இதனால் கலங்கிப்போன மக்கள், திருமகளை அவனுக்குத் திருமணம் செய்து தரக் கூடாது என்று எண்ணி எல்லோரும் அக்னிப் பிரவேசம் செய்வது என்று தீர்மானித்தனர்.
மக்களின் வருத்தத்தை அறிந்த வாசவி புன்னகை பூத்தாள். “நான் சக்தியின் அம்சம்! அதனால் நான் யாரையுமே மணாளனாகக் கொள்ள முடியாது. இப்பிறவியில் நான் கன்னி என்பதால்தான் எனக்கு 'கன்யகா' என்ற திருநாமம் உருவானது. எனவே என்னைப் பற்றி கலங்க வேண்டாம். என்று கூறி, சக்தி வடிவம் கொண்டாள் தேவி! 'என் மறைவின் வழியே இந்த பூலோகத்தில் பல நன்மைகள் அடைய இருக்கிறது. எனவே நடப்பதைப் பாருங்கள்!' என்று கூறி தீயில் தன்னைப் புகுவித்துக் கொண்டாள் தேவி. அவளோடு அவள் உறவும் ஊருமென 102 பேர்களும் சேர்ந்து தீயில் புகுந்தனர். அந்த ஊரையே காக்க தன்னையே தியாகம் செய்த வாசவி தேவி அந்த மக்களின் குலதெய்வமானார். அவளைத் தீப்புகச் செய்த மன்னன் சுக்கு நூறாக வெடித்து அந்த ஊரின் எல்லையிலேயே மாண்டான். (வாசவி தேவியால் தலை கொய்யப்பட்டான் என்ற தகவலும் உண்டு) பிறகு வாசவி தேவியின் சகோதரனே பெனுகொண்டாவின் மன்னரானான்.
பெனுகொண்டா மக்கள், வாசவி அன்னையின் ஆணைப்படி அங்கு பிரமாண்ட ஆலயத்தை எழுப்பினர். தென்னகம் எங்கும் பரவிய இந்த மக்களால், தென்னாடெங்கும் கன்னிகா பரமேஸ்வரியாக அன்னை வாசவி வணங்கப்படுகிறார். தேவியின் வழிபாடு தொடங்கியதும் அப்போது தென்னாட்டில் நிலவி வந்த பஞ்சமும் கொடும் நோய்களும் முடிவுக்கு வந்தனவாம். எங்கும் செழிப்பும் அமைதியும் நிலவ மக்கள் நிம்மதி கொண்டார்கள் என வரலாறு கூறுகிறது. 10-ம் நூற்றாண்டில் அன்னை தென்னகம் எங்கும் நிலை கொள்ள, அமைதியான நிலையான அரசுகள் உருவாகின என்றும் வரலாறு கூறுகிறது.
பெண்களின் விருப்பத்துக்குரிய கன்னிகா பரமேஸ்வரியை இந்த நாளில் வணங்க மாங்கல்ய பலம் பெறுவார்கள் என்கிறார்கள். விருப்பமான வரனை அடைய பெண்கள் இவரை வணங்க வேண்டும் என்பார்கள். ஊரின் நலனுக்காக தன்னுயிரை இந்த தியாக தெய்வத்தை வணங்கினால் நாட்டில் நல்ல மழையும் செழிப்பும் உண்டாகும் என்பதும் நம்பிக்கை. தேவியின் அம்சமான அன்னை வாசவி தேவியை இந்நாளில் வணங்கி வளம் பெறுவோம்!
source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-and-the-great-sacrifice-of-sri-vasavi-kanyaka-parameswari-amman
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக