Ad

புதன், 23 பிப்ரவரி, 2022

கரூர்: ரூ.9 லட்சம் செக் மோசடி வழக்கு; குளித்தலை திமுக எல்.எல்.ஏ-வுக்கு பிடிவாரன்ட்! -நடந்தது என்ன?

குளித்தலை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மீது, பெண் ஒருவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், கரூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குளித்தலை

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், இரா.மாணிக்கம். இவர், இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்தநிலையில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கரூரைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரிடம், கடந்த ஆண்டு ரூ. 9 லட்சம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, மாணிக்கம் வங்கி காசோலையை ராஜம்மாளிடம் கொடுத்தாராம்.

அதை ராஜம்மாள் வங்கியில் செலுத்தியபோது, சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் பெயரில் உரிய தொகை இல்லாமல் காசோலை பவுன்ஸ் ஆனதாக தெரிகிறது. இதனால், ராஜம்மாள், மாணிக்கத்திடம் கேட்டபோது, மாணிக்கம் முறையான பதிலை சொல்லவில்லையாம். இதனால் கோபமான ராஜம்மாள், இதுகுறித்து கரூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தக்கொண்ட கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கத்தை நேரில் ஆஜராக, கடந்த அக்டோபர் மாதம் 18 - ம் தேதி உத்தரவிட்டார்.

வழக்கு

அன்று அவர் ஆஜராகாததால், மறுபடியும் கடந்த டிசம்பர் மாதம் 2 - ம் தேதி, அதன்பிறகு ஜனவரி மாதம் 24 - ம் தேதி என 3 முறை நீதிபதி சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, மாணிக்கத்தை நேற்று நான்காவது முறையாக ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டும், குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரன்டு பிறப்பித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார். ஆளுங்கட்சியான தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மீது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ள சம்பவம், குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/arrest-warrant-for-kulithalai-dmk-mla-in-money-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக