Ad

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

உக்ரைன் - ரஷ்ய போர்: `எங்கள் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்!’ - தமிழக பெற்றோர்கள் கண்ணீர்

``உக்ரைனில் படிக்க சென்றுள்ள எங்கள் பிள்ளைகளை மீட்டு தாருங்கள்" என்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெற்றோர்கள் பதறியபடி அரசிடம் முறையிட்டு வரும் சம்பவங்கள் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

மாவட்ட அதிகாரியிடம் மனு கொடுக்கிறார்கள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்குள்ள மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அங்கு கல்வி கற்க சென்ற இந்திய மாணவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் வந்துவிட்ட நிலையில் பலர் அங்கு சிக்கிக்கொண்டு உறவினர்களை தொடர்புகொண்டு பதற்றத்துடன் பேசி வருகிறார்கள்.

உக்ரைனில் படிக்கும் தங்கள் மகனை மீட்டுத்தர வேண்டி, மதுரை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த தெற்குவாசல் பகுதியை சேர்ந்த சகஜெயந்திரன்-விஜயலட்சுமி தம்பதியிடம் பேசினோம், ``எங்கள் மகன் பங்கஜநாபன், ஏரோநாட்டிக்கல் எஞ்சினியரிங் படிப்பை உக்ரைனில் படித்து வருகிறார். இதுதான் ஃபைனல் இயர்.

உக்ரைன் : தாக்குதல் நடைபெற்ற இடம்

இப்போது அங்கு போர் நடப்பதாக கேள்விப்பட்டதிலிருந்து பதறிப்போனோம். போர் வருவதற்கு சில நாள்களுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்துவிடு என்று அவனிடம் சொன்னோம். போர் வராது, கவலைப்பட வேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக சொன்னான்.

தற்போது அங்கு போர் தொடங்கி விட்டதால் அவனைப்போல் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள். ஆனால், எப்போது எப்படி வருவார்கள் என்று தெரியவில்லை.

பங்கஜ நாபன்

அவனிடம் போனில் பேசியபோது உயிரைக் காப்பாற்ற பதுங்கு குழியில் தங்கியிருப்பதாகவும் எங்களை எப்படியாவது மீட்க முயற்சி செய்யுங்கள் என்றும் சொன்னான். அதை கேட்டபோது எங்களுக்கு தூக்கிவாரி போட்டது.

அதற்குப்பிறகு அவனுடன் போனில் பேச முடியவில்லை. அதான் மகனை காப்பாற்றி தாருங்கள் என்று கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்." என்றார்.

சஜூ குமார்

மதுரை வில்லாபுரம் வைகை வீதி ராஜீவ்குமார் - லீலா தம்பதியினரின் மகன் சஜூ குமாரும் உக்ரைனில் எம்பிஏ படிக்க சென்று போர்ச்சூழலில் சிக்கியுள்ளார். அவரை மீட்டுத்தரவும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்கள். "எங்கள் மகன் ஊருக்கு வர விமான டிக்கெட் புக் செய்திருந்தான். போர் மூண்டுவிட்டதால் விமானம் ரத்தாகிவிட்டது. தற்போது உயிரை காப்பாற்றிக் கொள்ள நண்பர்களுடன் பதுங்கு குழியில் தங்கியுள்ளான்.

இந்திய தூதரகம் மூலம் நாடு திரும்ப ஏற்பாடு நடப்பதாக சொன்னான். ஆனால் அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதா என்று தெரியவில்லை. அங்கு ஏடிம் எல்லாம் முடங்கி விட்டதால் பணம் எடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறினான். அரசு எங்கள் மகனை மீட்டுத் தர வேண்டும்." என்றார்.

இதேபோல் உக்ரைனில் எம்பிபிஎஸ் படிக்க சென்ற உசிலம்பட்டியை சேர்ந்த தங்கள் மகன்கள் கபில்நாத், தீபன் சக்கரவர்த்தி இருவரையும் மீட்டுத்தரும்படி அவர்களின் பெற்றோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மனு கொடுத்த பெற்றோர்கள்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை விரைந்து மீட்டு வர மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் வெளியுறவுத்துறை மாணவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டுவர ஏற்பாடுகளை செய்து வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ukraine-tamil-students-parents-worries-about-the-war

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக