பால்யகாலங்களில் ஒரு தெருக்கம்பத்தின் மின்விளக்கு வெளிச்சத்தின் கீழ் எத்தனை விளையாட்டுகள் அரங்கேறின. எத்தனை சிறுவர் சிறுமிகள் ஓடியாடி மகிழ்ச்சியோடு விளையாடினார்கள். அந்த தெருக்கம்பம்தான் எத்தனை சிறுவர் சிறுமிகளை மகிழ்ச்சியோடு பார்த்தது. விளையாடும் சிறுவர் சிறுமிகளும் தெருக்கம்பத்தை எவ்வளவு பாசத்தோடு பார்த்தார்கள்.
இரவு 7 மணி ஆகிவிட்டால் போதும் சிறுவர் சிறுமிகள் எல்லோரும் ஒன்றுகூடி தெருக்கம்பத்தின் கீழ் ஒரே விளையாட்டு கொண்டாட்டம்தான். கம்பத்தில் முகத்தை வைத்து இரு கண்களை மூடிக்கொண்டு 1,2,3,4,5 என்று ஒருவன் எண்ணுவது,மற்றவர்கள் ஓடி இருளில் எங்கேயாவது மறைந்துகொள்வது... மறைந்திருப்பவர்களை கண்டுபிடிக்க ஓடிப்பிடித்து விளையாடுவது. ஆண் பெண் பேதமின்றி இருவரும் ஒன்றாக கலந்து கோகோ விளையாட்டு விளையாடுவது.
அதேபோல வட்டமாக எல்லோரும் உட்கார்ந்து துணியை பந்து போன்று சுற்றி ஒவ்வொருவர் கையிலும் மாற்றிமாற்றி தூக்கிப்போட்டு திரிதிரி பந்தம் பாடி விளையாடுவது. ஒருவன் முதுகு குனிந்து இருக்க,மற்றவர்கள் முதுகுமேல் இடிக்காமல் தாண்டும் இஸ்டாப்பிலியம் விளையாட்டு விளையாடுவது. மண்ணில் ஒவ்வொரு கட்டம் போட்டு,ஒரு காலை மடக்கி மறுகாலில் ஒவ்வொரு கட்டமாய் தாண்டி காலை கீழே தொட்டு விடாதபடி நொண்டி விளையாட்டு விளையாடுவது.
மண்ணைக் கூட்டி அதில் சிறுகுச்சியை மறைத்துவைத்து அதை கண்டுபிடிக்கும் விளையாட்டு விளையாடுவது.நொட்டாங்கல் விளையாட்டு விளையாடுவது. நூறாங்குச்சி விளையாட்டு விளையாடுவது. குரங்காட்டம் கழி தூக்கிப்போட்டு விளையாடுவது. திருடன் போலீஸ் ராஜா மந்திரி விளையாட்டு விளையாடுவது.
ஜில்லிக்கல் விளையாட்டு விளையாடுவது. கோலி விளையாட்டு விளையாடுவது. பம்பரம் விளையாட்டு விளையாடுவது. விடுகதை சொல்லி விளையாடுவது. பஸ் விளையாட்டு விளையாடுவது... இப்படி தெருக்கம்பத்தின் கீழ் விளையாடும் எண்ணற்ற விளையாட்டுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
இதற்கு மத்தியில் விளையாடிக்கொண்டிருக்கும் விளையாட்டுகளுக்கு இடையில், கரண்ட் போய்விட்டால் அந்த இருளை பார்த்து சந்தோஷத்தின் உச்சத்தில் எல்லோரும் விண்ணைப் பிளந்தவாறு கோரஸாக "ஓ" என்று கத்தி மகிழ்வது. பின் போன கரண்ட் சில நிமிடங்களிலோ நொடிகளிலோ வந்துவிட்டால் மீண்டும் விண்ணைப் பிளந்தவாறு "ஓ" என்று கத்தி மகிழ்வது. இப்படி எத்தனை விளையாட்டுகள் தெருக்கம்பத்தின் கீழ் பொக்கிஷமாக நிகழ்ந்தன.
ஆனால், இன்று தெருக் கம்பத்தின் கீழ் எத்தனை விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன? எத்தனை சிறுவர்கள் விளையாடுகிறார்கள்?
source https://www.vikatan.com/lifestyle/nostalgia/games-nostalgia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக