கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பரிசுப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு மணி நேரம் மேற்கொண்ட அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவர்களின் சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது.
கரூர் மாநகராட்சிக்கான தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 17 - ம் தேதியோடு பிரசாரம் காலம் முடிவடைந்த நிலையில், 18 - ம் தேதி பிரதானக் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக புகார் வந்தது. அந்த வகையில், கரூர் அ.தி.மு.க அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசுப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக, புகார் சென்றிருக்கிறது.
அதனைத்தொடர்ந்து, கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் திடீரென்று அ.தி.மு.க அலுவலகத்திற்குள் சென்று சோதனை மேற்கொண்டார். அவர்களோடு தேர்தல் பறக்கும் படையினரும் சென்றனர். அப்போது, பறக்கும் படையினர், காவல் துறையினரிடம் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.கவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சோதனையில், எதுவும் கிடைக்காததால், கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் மற்றும் காவல் துறையினர் அ.தி.மு.க அலுவலகத்தை விட்டு உடனடியாக திரும்பி வேகமாக சென்றனர். ஆய்வாளரை பின்தொடர்ந்த அ.தி.மு.கவினர், 'எதற்காக எங்கள் அலுவலகத்தில் வந்தீங்க, தி.மு.க அமைச்சர் ஒரு ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்து வருகிறார். நாங்கள் புகார் தருகிறோம். உங்களால் அதை தடுக்க முடியுமா?' எனக் கேள்வி கேட்டதால், காவல் ஆய்வாளர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அதன்பிறகு, ஒருவழியாக அங்கிருந்த ஆய்வாளர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், சென்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2 லட்சம் ஹாட் பாக்ஸ் மற்றும் ஓட்டுக்கு 2,000 ரூபாய் என ஆளும் தி.மு.க கட்சியினர் கொடுத்து வருகின்றனர். கரூரிலும், கோயம்புத்தூரிலும் பண மழை கொட்டுகிறது. அதை எந்த தேர்தல் பறக்கும் படையும் பிடிக்கவில்லை. கோவை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்ததை போல், கரூரிலும் தேவையற்ற வதந்திகளை பரப்பி கைது செய்ய தி.மு.கவினர் முயற்சி செய்கின்றனர்.
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் உள்ள ஒரு வார்டு ஒரு அ.தி.மு.க வேட்பாளரை ஏற்கனவே விலைக்கு வாங்கியது போல் மற்ற வேட்பாளர்களையும் விலைக்கு வாங்க பார்த்தார்கள். எவரும் போகாததால் அனைத்து அ.தி.மு.க வேட்பாளர்களையும் மிரட்டி தேர்தல் வேலை பார்க்கவிடாமல் செய்ய முயற்சி செய்கின்றனர். திருட்டு தி.மு.க கரூரில் திருட்டு தனமாக வெற்றி பெற முயற்சி செய்கிறது. கரூர் மண்டல தேர்தல் பொறுப்பாளர் மந்திராச்சலம், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தமாட்டார். அவர், கட்சி வேட்டி வேட்டி கட்டாத தி.மு.க புள்ளி போல செயல்படுகிறார். அதேபோல், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சி பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே, அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது. ஏற்கனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க மிக அமைதியாக நடத்தியது. தற்போது, தி.மு.க ஆட்சியில் கோவையிலும் கரூரில் மட்டும் இதுபோன்ற அராஜகங்கள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக, காவல்துறையினர் அ.தி.மு.கவினர் மீது பொய் வழக்குகள் பதிந்து, தி.மு.கவுக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் துவங்கிய நாள் முதல் அ.தி.மு.க வேட்பாளர்கள் மிரட்டப்பட்டனர். தற்போது, வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்குச் செல்லும் அ.தி.மு.க முகவர்களை, தி.மு.கவினர் மிரட்டி வருகின்றனர். திமுகவினருக்கு தோல்வி பயம் இருப்பதால் பண பட்டுவாடா மேற்கொண்டு வருகின்றனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றால் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தி.மு.க கட்சியின் மாவட்ட செயலாளர் போல செயல்பட்டு வருகிறார். நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றி, கரூரில் குறிப்பாக மேயர் பதவியை கைப்பற்றும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/mrvijayabaskar-press-meet-against-karur-police
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக