Ad

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

``அதிமுக-வை கலைத்துவிட்டு, பாஜக-வில் இணைந்துவிடுங்கள்!" - கரூரில் வெளுத்து வாங்கிய ஜோதிமணி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசார களம், கரூர் மாநகராட்சியில் களைகட்டியுள்ளது. கரூர் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. அதில், மூன்று வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் எம்.பி ஜோதிமணி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கரூர் பசுபதிபாளையம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிருத்திகா பாலகிருஷ்ணனை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் ஜோதிமணி

Also Read: `சுயேச்சையாக போனேன்; மக்கள் நீதி மய்ய வேட்பாளராகி வந்தேன்!' - நாமக்கல் தேர்தல் சுவாரஸ்யம்

அப்போது பேசிய அவர், ``தமிழகத்தில் சிறந்த ஆட்சியை நடத்திவரும் திமுக அரசு கடந்த எட்டு மாதங்களில் 250 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தில் வெள்ளத்தில் மக்கள் தத்தளித்த போதும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் மருத்துவமனையில் நிரம்பி வழிந்த போது தமிழக முதலமைச்சரை நேரில் சென்று மக்களை காப்பாற்றிட களப்பணியாற்றிவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு தயங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் பாஜக மோடி அரசுக்கு எதிராக தமிழக முதல்வர் ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தின் ஒட்டுமொத்த தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்றால் மக்கள் மன்றத்துக்கு ஜனநாயகத்தில் என்ன மதிப்பு உள்ளது. நீட் தேர்வு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாஜக புறக்கணித்த ஒரு மணி நேரத்தில் அதிமுகவும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறது என்றால் அதிமுக என்ற கட்சி எதற்கு, அதிமுகவை கலைத்துவிட்டு பாஜகவில் கட்சியை இணைத்துவிடலாம் அதிமுகவும் பாஜகவும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக கூறுகின்றனர். நீங்கள் அதிமுகவுக்கு செலுத்தும் வாக்கு பாஜகவுக்கு செலுத்தும் வாக்கு தான் எனவே நீங்கள் இருவரும் புறக்கணிக்க வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 500 வாக்குறுதிகளில் 250 வாக்குறுதிகளை வெறும் எட்டு மாதத்தில் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு கண்டு கொள்ளாத போது பதவியேற்ற 30 நாட்களுக்குள் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து, தங்க நகை கடன் ரத்து, கொரோனா நிவாரண தொகை ரூபாய் நான்கு ஆயிரம் போன்ற திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இதனால் கல்லூரி சென்று படிக்கும் பெண்களுக்கு பணிக்கு செல்லும் பெண்களுக்கு வருமானத்தின் பெரும் பகுதி பேருந்து கட்டணமாக செலவிட வேண்டிய சூழல் இருந்தது. அதனை மாற்றி நகர பேருந்துகளில் மகளிருக்கு அரசு இலவச பயணம் மேற்கொள்ள வழி ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் என்னைப் போன்று எளிய குடும்பத்தில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்று வாய்ப்பு வழங்கியது போல, மாநகராட்சி தேர்தலிலும் அதுபோன்று இளம் வேட்பாளர்களுக்கு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற கட்சியிலுள்ள வேட்பாளர்களைப் போல, பணம் படைத்தவர்களாகவும், அரசியலை வைத்து பணம் சம்பாதிப்பவர்களாகவும் இல்லாமல், நேர்மை ஒன்றை மட்டுமே மூலதனமாக கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நல்ல வாய்ப்பை காங்கிரஸ் கட்சி உருவாக்கி வருகிறது.

பிரசாரத்தில் ஜோதிமணி

கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களின் வீட்டின் கதவுகள் எப்பொழுதும் ஏழைகளுக்காக திறக்காது. அங்கு சென்று அமரவும் முடியாது. எனது எம்.பி அலுவலகத்துக்கு வருகை தரும் ஏழை மக்களின் மனுக்களை பரிசீலனை செய்யும் எனது உதவியாளர் கிருத்திகா, மாநகராட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கூடியவர். 24 வயதில் நேர்மையான அரசியிலில் களம் காணும் அவருக்கு, நீங்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.

Also Read: ``கூட்டணிக்குள் சங்கடம் வந்துவிடக் கூடாது..!" - ஜோதிமணி விவகாரம் குறித்து செந்தில் பாலாஜி

உள்ளாட்சித் தேர்தல் ஏன் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடத்தப்படவில்லை என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மூன்று முறை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தலை நடத்தாத அ.தி.மு.க அரசு போல இல்லாமல், தி.மு.க அரசு பதவியேற்றவுடன் உச்சநீதிமன்றம் தெரிவித்த தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே உள்ளாட்சித் தேர்தலை நடத்திட மிகத்தீவிரமாக தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது. மேற்கு வங்காளம் போன்ற மற்ற மாநிலங்கள் கொரோனா மூன்றாம் அலை மிக தீவிரமாக உள்ளது என்று தயக்கம் காட்டிய நிலையில், தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்திட தீவிரம் காட்டியது. சிறப்பான அரசாங்கம் தமிழகத்தில் நடத்திட உள்ளாட்சி பிரதிநிதிகள் அவசியம் என்பதை தமிழக முதல்வர் உணர்ந்துள்ளார்.

அதனால், தொடர்ந்து உங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட, மாநகராட்சி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/jothimani-slams-bjp-admk-in-karur-campaign

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக