புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டு பதவிக்கு திமுக சார்பில் பரூக், அதிமுக சார்பில் முகமது இப்ராம்ஷா, சுயேச்சையாக பிரதிவிராஜா மற்றும் இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கினர். இதில், சுயேச்சையாகக் களமிறங்கிய பிரிதிவிராஜா 175 வாக்குகள் பெற்று வெற்றியை வசப்படுத்தினார். 149 வாக்குகள் வாங்கிய திமுக பரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இப்ராம்ஷாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்தே அவருக்குப் பதிவான வாக்குகள் எண்ணிக்கை "0" ஆகவே இருந்தது. இப்ராம்ஷா, அவரின் மனைவி உட்பட குடும்பத்தினருக்கும் அந்த வார்டிலேயே ஓட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
அதே நேரத்தில் வார்டில் மொத்தமாக 463 வாக்குகள் பதிவாகியிருந்தும், இப்ராம்ஷாவிற்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவரே அவருக்குப் போடாமல் மாற்றுக் கட்சியினருக்கு ஓட்டு போட்டிருக்கிறாரா என்றும் விவாதிக்கிறார்கள் அப்பகுதியினர். தேர்தல் பரப்புரையின் கடைசி நாள் வரையிலும் தனக்காகச் சுற்றிச் சுழன்று பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் அதே வார்டில் மற்றொரு சுயேச்சை வேட்பாளரான தர்மராஜ் என்பவருக்கும் வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``மற்ற வார்டுகளை விட இந்த வார்டுல மட்டும் தேர்தல் நேரத்துல பணப்புழக்கம் ரொம்பவே அதிக்மா இருந்துச்சு. 7வது வார்டுல அதிமுக சார்பில் இப்ராம்ஷா போட்டியிட்டாரு. அவரோட மருமகன் ஃபாரூக் திமுக சார்பில போட்டியிட்டாரு. ஆரம்பத்துல் பாரூக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்துச்சு. ஆனா, கடைசி நேரத்துல. இவங்களோட ஓட்டு பிரியும் பட்சத்துல சுயேச்சை வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம்ங்கிற நிலை உருவானுச்சு. உடனே, வாக்கு பதிவுக்கு மொத நாளே திமுக, அதிமுக வேட்பாளர்களுக்குள்ள லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டதாக சொல்றாங்க.. அதனால பெரும்பாலும் அவர்களை சார்ந்த சமூகத்தினர் கண்டிப்பா ஃபாரூக்குத் தான் ஓட்டு போட்டிருப்பாங்க.
இப்ராம்ஷா மட்டுமில்லாம, அவரின் குடும்பத்தினர் எல்லாரும் இப்ராம்ஷாவோட மருமகனான ஃபாரூக்குக்குத் தான் ஓட்டு போட்டியிருப்பாங்க.
அதனால தான் ஒரு ஓட்டுக்கூட கிடைக்காம போயிருக்கு. கடைசியா இத்தனை பண்ணியும் திமுகவுல 7வது வார்டுல ஜெயிக்க முடிலை. சுயேச்சையா போட்டியிட்ட பிரிதிவிராஜா வெற்றி பெற்றிருக்காரு. யாரு ஜெயிச்சா என்ன எங்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி நல்லது செஞ்சா அது போதும்" என்றனர்.
அதிமுக வேட்பாளரை ஒரு ஓட்டுகள் கூட வாங்கவிடாமல் செய்து சுயேச்சையாக வெற்றி பெற்ற பிரிதிவிராஜா, அவரது தந்தை அமமுக நகர பொருளாளராக இருந்த பரமசிவம், உட்பட இன்னும் சிலர் அமமுகவிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து தொண்டர்கள் பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/independent-candidate-who-defeated-aiadmk-and-joined-aiadmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக