Ad

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

Doctor Vikatan: கருத்தடை முறைகளைப் பின்பற்றினால் எதிர்காலத்தில் கர்ப்பம் சிக்கலாகுமா?

கர்ப்பத்தைத் தள்ளிப்போடும் கருத்தடை முறைகளால் பிற்காலத்தில் கர்ப்பம் தரிப்பதில் பிரச்னைகள் வருமா? கருத்தடை முறைகளைப் பின்பற்றுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

-ஷன்மதி (விகடன் இணையத்திலிருந்து)

விஜயா கணேஷ்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்.

``கருத்தடை முறைகளைப் பொறுத்தவரை ஆண்களுக்கானது, பெண்களுக்கானது என தனித்தனியே உண்டு. ஆண்களுக்கான கருத்தடையில் ஆணுறை எனப்படும் காண்டம் பற்றி நாம் அறிவோம்.

பெண்களுக்கான கருத்தடை முறையில் ஹார்மோன் மாத்திரைகள் முக்கியமானவை. எமர்ஜென்சி கான்ட்ரசெப்ட்டிவ் பில்ஸ் எனப்படும் அவசரகால கருத்தடை மாத்திரைகள், 21 நாள்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மாத்திரைகள், கருத்தடை ஊசி, கர்ப்பப்பையின் உள்ளே பொருத்தக்கூடிய காப்பர்-டி போன்ற சாதனம் என கருத்தடை முறையில் நிறைய உள்ளன. குழந்தை வேண்டாம் என்பவர்கள் அவரவர் விருப்பம் மற்றும் உடல்நலத்துக்கேற்ப இவற்றில் ஒன்றைப் பின்பற்றலாம். மறுபடி குழந்தை வேண்டும் என முடிவு செய்யும்போது இதை நிறுத்திவிட்டு, குழந்தைக்கு முயற்சி செய்வதில் எந்தப் பிரச்னையும் வராது.

கர்ப்பத்தடை முறையைப் பின்பற்றுவது என முடிவு செய்துவிட்டால் மருத்துவ ஆலோசனையோடு தேர்ந்தெடுப்பதுதான் பாதுகாப்பானது. ஏனெனில் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தடை முறைக்கு ஒவ்வொருவிதமாக ரியாக்ட் செய்வார். எல்லோருக்கும் எல்லா முறையும் ஏற்றுக்கொளளும் என்றும் சொல்ல முடியாது. தவிர, குடும்பப் பின்னணியில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தம் உறைதல் பிரச்னை போன்றவை இருந்தாலோ, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே இந்தப் பிரச்னைகள் இருந்தாலோ, அவர்கள் மருத்துவ ஆலோசனையோடு கருத்தடை முறையைத் தேர்வுசெய்வதுதான் பாதுகாப்பானது. கர்ப்பத்தடை மாத்திரைகள் எடுக்கும்போது பக்கவிளைவுகள் வரும். அவற்றையும் முன்கூட்டியே மருத்துவரிடம் பேசித் தெளிவுபெறுவது நல்லது.

கருத்தடை மாத்திரைகளைப் பொறுத்தவரை ஒருநாள் தவறாமல் குறிப்பிட்ட நாள்களுக்கு எடுக்க வேண்டியது அவசியம். ஒருநாள் எடுக்கத் தவறினால், அடுத்த நாள், அந்த நாளைக்கும், எடுக்கத் தவறிய முந்தைய நாளுக்கும் என இரண்டு டோஸ் சேர்த்து எடுக்க வேண்டியிருக்கும். இடையிடையே தவறவிட்டால் கருத்தரிக்க வாய்ப்புண்டு.

கர்ப்பிணி (Representational Image)

காப்பர்-டி பாதுகாப்பான கருத்தடை முறை என்றாலும், 3 மாதங்களுக்கொருமுறை மருத்துவரை அணுகி, அது சரியான இடத்தில்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் பிறகு 6 மாதங்களுக்கொரு முறையோ, வருடம் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டால் போதும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/will-contraceptives-become-a-problem-to-get-pregnant-in-future

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக