Ad

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

``மூணு மாசத்துல மூணு பேரும் ஒண்ணா இருக்கலாம்!” - வீடு கட்ட உதவிய கலெக்டர்; நெகிழ்ந்த சகோதரரர்கள்

பட்டுக்கோடை அருகே சிறு வயதில் பெற்றோரை இழந்தும், பின்னர் குடியிருக்க வீடு இல்லாமலும் தொடர் வறுமையை சந்தித்தபடி பாட்டியுடன் வாழ்ந்து வந்த சகோதரர்கள் இருவர் தங்களுக்கு வீடு கட்டி தர சொல்லி தஞ்சாவூர் கலெக்டரிடம் உதவி கேட்டனர். அவர்களது வலியை உணர்ந்த கலெக்டர் உடனடியாக அரசு சார்பில் அவர்களுக்கு வீடு கட்டி தருவதற்கான நடவடிக்கையினை எடுத்து அதற்கான பணியினையும் தொடங்கியிருக்கிறார். கலெக்டரின் செயலால் அந்த சகோதரரகளும், அவர்களது ஊரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

பட்டுக்கோட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ் (18), விஷ்ணுவர்தன் (16). சகோதரர்கள். பெற்றோர் இறந்த நிலையில் பாட்டி ரேணுகா (65) கூலி வேலை செய்து பேரன்களை கவனித்து வருகிறார். ரேணுகாவின் குடிசை வீடு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விட்டது. ரேணுகா கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானம் பேரன்களை படிக்க வைப்பதற்கும், சாப்பாட்டுக்குமே போதவில்லை. இதனால் வீட்டை பராமரிக்க முடியாமல் போனதில் வீடு இருந்த சுவடே தெரியாத அளவிற்கு கட்டாந்தரையாக மாறியது.

வசிக்க வீடு இல்லை, அன்பு காட்டி அரவணைக்க பெற்றோர் இல்லை என்பது போன்ற சிறு வயசில் அனுபவிக்க கூடாத கஷ்டங்கள் அனைத்தையும் சகோதரர்கள் இருவரும் அனுபவித்தனர். அவர்களுக்கு இருந்தே ஒரே ஆறுதல், அரவணைப்பு என எல்லாமே அவர்களது பாட்டி ரேணுகா மட்டுமே. வெவ்வேறு உறவினர்கள் வீடுகளில் தங்க வைத்து பேரப்பிளைகளை படிக்க வைத்து ஆளாக்கினார் பாட்டி ரேணுகா.

தற்போது சந்தோஷ் டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார். விஷ்ணுவர்தன் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறார். மூன்று பேரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து ஒவ்வொரு நாளையும் கடந்து வந்தனர். ஆனால் இருக்க வீடு இல்லாததால் மூன்று பேரும் தனி தனி இடத்தில் இருந்து வந்தனர். வீடு இருந்த இடத்தில் சின்ன குடிசை அமைத்து ஒன்றாக வாழலாம் என்றால் அந்த இடத்துக்கும் பட்டா இல்லை என்பது துயரமாக அமைந்தது.

களத்து மேட்டில் விவசாய கூலி வேலை செய்து விட்டு திரும்பிய பிறகு படுத்து ஓய்வெடுக்க வீடு இல்லாமல் பாட்டி ரேணுகா அனுபவித்த கஷ்டங்களை விஷ்ணுவர்தனால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து தன் ஊரை சேர்ந்த கார்த்தி என்பவர் உதவியுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், ``பொறந்ததுல இருந்தே நாங்க கஷ்டங்களை மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறோம். சின்ன வயசுலேயே பெற்றோரை இழந்து தவித்தோம் அதன் பின் குடியிருக்க வீடு இல்லாமல் போனது. எங்க பாட்டி மட்டும் இல்லைன்னா நாங்க என்னவாகியிருப்போம் என்றே தெரியாது.

வீடு கட்டும் இடத்தில் பாட்டி பேரன்

நாங்க மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக வாழனும் எங்களுக்கு பட்டா, கொடுத்து வீடு கட்டி தருவதற்கு உதவி செய்யுங்க” என விஷ்ணுவர்தன் மனு கொடுத்தார். மனுவை பார்த்த கலெக்டர் உடனடியாக அவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கையினை எடுத்தார். முதலில் ரேணுகா இடத்தில் உள்ள சிக்கல்களை தீர்த்து பட்டா வழங்கினார். பின்னர் களத்தூர் கிராமத்தில் உள்ள ரேணுகாவின் இடத்துக்கு சென்று பார்த்தார்.

விஷ்ணுவர்தனிடம், நல்ல வீடா கட்டி நீங்க இருப்பதற்கான ஏற்பாட்டை செய்வதாக கூறியவர், மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து, ரூ. 3 லட்சம் ரேணுகாவின் கையில் வழங்கினார். அத்துடன் அரசு சார்பில் கட்டித்தரப்படும் வீட்டுக்கும் ஏற்பாடு செய்தார். அப்போது இன்ஜீனியரை அழைத்து, எல்லாத்தையும் சேர்த்து சீக்கிரமா சூப்பரா ஒரு வீட கட்டி கொடுக்க சொல்லி கட்டளையிட்டார். நடப்பது கனவு மாதிரியே இருக்குனு கலங்கிய பாட்டியும், பேரன்களும் தெய்வம் வந்து கூட நிக்குற மாதிரி இருக்குதுனு கலெக்டரிடம் உருகினர்.

தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

``உங்கள மாதிரி தவிச்சு நிக்குற ஆளுங்கள தாங்கி பிடிச்சு காப்பத்தனும். அதான் அரசோட வேலை அதை தான் செஞ்சிருக்கேன்” என்று சொல்லிட்டு புது வீடு குடி போறப்ப வருவதாக சொல்லிட்டு கிளம்பினார். இது குறித்து விஷ்ணுவர்தனிடம் பேசினோம், ``நான் சின்ன வயசுல இருக்கும் போது அப்பா கருணாநிதி விபத்தில் இறந்துட்டார். அடுத்த சில வருடங்களில் அம்மா சரளா கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

அம்மா, அப்பா இல்லாம தவிச்சு நின்ன எங்களை ரெண்டுமா இருந்து பாட்டி கவனிச்சுக்கிட்டார். எங்களுக்குனு இருக்க ஒரு வீடு இல்லாம போனது எங்களோட துயரமா தொடர்ந்தது. ஒவ்வொருத்தர் மேல பாசத்த வச்சுக்கிட்டு ஆளுக்கொரு இடத்துல இருந்தோம். எங்க கஷ்டத்தை சொல்லி வீடு கட்ட உதவி செய்யுங்க சார்னு கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். அதப்படிக்கும் போதே கலெக்டர் சாரின் கண்கள் கசிந்தது. சரிப்பா நல்லது நடக்குமுனு சொல்லி எங்களை அனுப்பி வைத்தவர் அடுத்த வாரமே எங்க ஊருக்கு வந்து வீடு கட்டுவதற்கான நிதி உதவி செய்தார்.

மேலும் உடனடியாக வீடு கட்டும் வேலையை தொடங்க வச்சார். பொருள் எல்லாம் வந்து இப்போ வேலை ஆரம்பமாகி விட்டது. மூன்று மாசத்துல புது வீடு கட்டு முடிச்சுடுவாங்க குடி போயிரலாம் மூன்று பேரும் இரே இடத்துல ஒண்ணா இருக்கலாமுனு கலெக்டர் சொன்னார். அது நடக்க போறத நெனச்சா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு மனுவுல இத எங்களுக்கு சாத்தியமாக்கி காட்டிய கலெக்டர் சாருக்கு காலத்துக்கும் கடன் பட்டிருக்கோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/collector-helped-the-poor-family-who-were-struggle-to-live

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக