Ad

திங்கள், 21 பிப்ரவரி, 2022

மதுரை: நூற்றாண்டு வரலாறு கொண்ட புதுமண்டப கடைகள் அகற்றம்! -மாற்று இடத்தை ஏற்க மறுக்கும் கடைக்காரர்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சன்னதி எதிரே அமைந்துள்ள பாரம்பரியமான புது மண்டபத்து கடைகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

காலி செய்யப்படும் கடைகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 34,650 சதுர அடி பரப்பளவு கொண்ட உலகிம் முதல் ஷாப்பிங் மால் என்று புகழப்படும் புது மண்டபத்தில் பல ஆண்டுகளாக புத்தகக்கடைகள், வளையல்கடை, பூஜை பொருள்கள், அலங்காரப்பொருள்கள், தையல்கடைகள், பாத்திரக்கடைகள் என 300 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் புதுமண்டப கடைகளுக்கும் வருவார்கள். அந்தளவுக்கு பிரபலமானது.

2018-ல் மீனாட்சியம்மன் கோயில் வசந்தராயர் மண்டபம் அருகே தீப்பிடித்து பெரிய சேதாரம் ஏற்பட்டதை தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள கடைகள் மூடப்பட்டன. அதுபோல் புதுமண்டப கடைகளையும் காலி செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

புதுமண்டபம்

இதற்கு முன்பே புதுமண்டபத்தில் உள்ள சிற்பங்கள், அழகிய வேலைப்பாடுகளை, அதன் தொன்மையை சுற்றுலாப் பயணிகளால் ரசிக்க முடியவில்லை, அதனால் கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பலரால் வைக்கப்பட்டது.

ஆனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இதை எதிர்த்து புதுமண்டப வியாபாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குன்னத்தூர் சத்திரம் அருகே மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டது. அதில் புதுமண்டப கடைக்காரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் அங்கு செல்ல கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், செல்லாமல் புது மண்டபத்திலயே வியாபாரத்தை தொடர்ந்தார்கள்.

புதுமண்டபம்

பலமுறை அறிவிப்பு செய்தும் கடைக்காரர்கள் சில காரணங்களை கூறி காலி செய்யாமல் இருந்தார்கள். இந்நிலையில் நேற்று அறநிலையத்துறை ஊழியர்கள் காவல்துறை பாதுகாப்புடன் பூட்டப்பட்ட கடைகளை உடைத்து அகற்றினார்கள். சில கடைக்காரர்கள் தாங்களகாவே காலி செய்தார்கள்.

இது குறித்து பேசிய கடைக்காரர்கள், ``பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். திடீர்னு எங்களை இடம் மாற்றுவது எங்கள் வாழ்வாதாராத்தை பாதிக்கும். குன்னத்தூர் சத்திரம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்தில் மின் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் எங்களுக்கு கால அவகாசம் கொடுக்காமல் அதிரடியாக அங்கு செல்ல சொல்கிறார்கள். இது என்ன நியாயம்.? அரசு எங்களுக்கு உதவ வேண்டும்" என்றனர்.

அகற்றப்பட்ட பொருள்களுடன் கடைக்காரர்கள்

"பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதுவே போதுமானது. மாற்று இடம் கொடுத்தும் தேவையில்லாமல் ஒரு சிலர் பிரச்னை செய்து வருகிறார்கள்" என்கிறார்கள் கோயில் அலுவலர்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/meenakshi-amman-temple-shops-removed-with-police-security

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக