Ad

வியாழன், 24 பிப்ரவரி, 2022

மாயாவதியுடன் நட்பு காட்டும் அமித் ஷா... உ.பி.யில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு அச்சாரமா?!

`உத்தரப்பிரதேச தேர்தலில் மாயாவதியின் முக்கியத்தும் இன்னும் குறையவில்லை' என்கிறார் அமித் ஷா. `உண்மையைக் கூறிய அமித் ஷாவின் பெருந்தன்மைக்கு நன்றி!' என பதிலளித்திருக்கிறார் மாயாவதி. உத்தரப்பிரதேச தேர்தல்களம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இவர்களின் பேச்சு தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு அச்சாரமா அமையுமோ? என்கிற கணிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

உத்தரப்பிரதேசம் தேர்தல்

அமித் ஷாவின் பாராட்டு:

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தனியார் செய்தி சேனலுக்கு பா.ஜ.க உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ``உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதின் பி.எஸ்.பி-க்கு மாநிலத்தில் இருந்த அரசியல் செல்வாக்கு முடிவுக்கு வந்துவிட்டதா?' என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமித் ஷா, ``உத்தரப்பிரதேச அரசியலில் மாயாவதியின் முக்கியத்துவம் இன்னும் குறைந்துவிடவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி மக்களிடையே தனது செல்வாக்கை இழந்துவிட்டதாக கூறுவது தவறு. பட்டியலின சமூகத்தின் வாக்கு மற்றும் கணிசமான முஸ்லீம் மக்களின் வாக்குகளும் பி.எஸ்.பி.க்கு இருக்கிறது. மாயாவதியின் பிரசாரத்தில் தீவிரம் குறைந்ததை வைத்து உ.பி-யில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்று கூறி விடமுடியாது!" என தெரிவித்திருந்தார்.

அமித்ஷா

மாயாவதியின் நெகிழ்ச்சி:

இந்த நிலையில், நேற்று முந்தினம் (23-02-2022) உ.பி. சட்டசபைக்கான 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில், வாக்களிப்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள அவரின் வாக்குச் சாவடிக்கு வந்தார். வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம், அமித் ஷா தெரிவித்த கருத்துகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப்பேசிய மாயாவதி, ``பகுஜன் சமாஜ் இன்னும் தனக்கான ஆதரவை தக்கவைத்திருக்கிறது என்ற உண்மையை அமித் ஷா ஒப்புக்கொண்டது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. இதற்காக நான் அமித் ஷா ஜி-க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலில் பட்டிலின மக்கள், முஸ்லீம் மக்கள் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்டடோர், உயர் சாதியினரும் எங்களுக்கு வாக்களித்திருக்கின்றனர். அனைவரின் ஆதரவும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது" என்றார்.

மாயாவதி!

மேலும், ``பா.ஜ.க, இந்தத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றுவோம் எனக் கூறுகிறது. ஆனால், இதற்கு காலம்தான் பதில் சொல்லும். பா.ஜ.க, சமாஜ்வாதிக்குப் பதிலாக பகுஜன் சமாஜ் கட்சியும் கூட வெற்றி பெறலாமே. உ.பி.யில் உள்ள 403 தொகுதிகளில் பி.எஸ்.பி-க்கு 300 தொகுதிகள் கிடைக்கும் என நம்புகிறேன். கடந்த 2007-ல் ஆட்சியமைத்தது போல, இந்தமுறையும் பி.எஸ்.பி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதை வரும் மார்ச் 10-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது நீங்கள் பார்த்து தெரிந்துகொள்வீர்கள்!" எனப் பேசினார்.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கான அச்சாரமா?

உத்தரப்பிரதேசத்தில் தீவிரமாக தேர்தல் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், பா.ஜ.க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் பரஸ்பரம் ஒருவரையொருவர் பாராட்டிப் பேசியிருப்பது, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கான அச்சாரமாகக்கூட இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம் தேர்தல்

காரணம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தமுறை உத்தரப்பிரதேசத் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் தேசியக் கட்சியான பா.ஜ.க, அப்னா தளம், நிஷாத் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியானது, ராஷ்ட்ரீய லோக்தளம், பிரகதிஷீல் சமாஜவாதி கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க-வுக்கு ட்ஃப் கொடுக்கும் வலுவான போட்டியாளராக இருக்கிறது. இது தவிர, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்து தேர்தலில் போட்டியிடுகிறது. பா.ஜ.க ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறினாலும், விவசாயப் போராட்டங்கள், தலித், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் பா.ஜ.க-வுக்கு மாநிலத்தின் சில இடங்களில் அதிருப்தி அலை வீசுகிறது. இதனால் பின்னடைவு ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

பாஜக

இந்த நிலையில், ஒருவேளை தொங்குசபை ஏற்பட்டால், பி.எஸ்.பி-யின் ஆதரவைப் பெற பா.ஜ.க முன்வரலாம். அதற்கான முன்முயற்சியாகக் கூட இது இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், சமாஜ்வாதியையும், காங்கிரஸையும் விமர்சிக்கும் அளவுக்கு மாயாவதி பா.ஜ.க-வை விமர்சிக்காமல் இருப்பதும் இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது. ஏற்கெனவே, உத்தரப்பிரதேசத்தில் கடந்த 1995, 1997, 2002 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க-வின் ஆதரவுடன்தான் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆட்சியமைத்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mayawati-amit-shah-praise-each-other-raises-speculations-about-post-poll-tie-up

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக