ராமாயணத்தில் முக்கிய இடம் வகிப்பது ராமேஸ்வரம். இங்கிருந்துதான் அனுமன் இலங்கைக்குச் சென்றார் என்பதால் அனுமனுக்கும் ராமேஸ்வரம் முக்கியத் தலமாக உள்ளது என்பார்கள் அனுமன் பக்தர்கள். இதனால் ராமேஸ்வரத்தில் அனுமனுக்கு என்று பல தலங்கள் இன்றும் உள்ளன.
அனுமனின் மகிமையை அனைவரும் அறிந்து கொள்ள மேலும் ஒரு சிறப்பம்சமாக பிரமாண்ட அனுமன் சிலை நிறுவ முடிவெடுக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று தொடங்கியது. அதாவது ரூ.100 கோடி செலவில், 108 அடி உயரத்தில் கட்டப்படும் அனுமன் சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று இராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இது இந்தியாவின் உயரமான 3-வது சிலை என்பது குறிப்பிடத்தக்கது. 2022-ல் சிலைக்கான பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் முழுமை பெற்று 2024-ம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்படும் என்று விழாக் குழுவினர் கூறினர்.
இந்தச் சிலை தயாரிக்கும் பணி மற்றும் நிறுவும் பணியை மேற்கொள்பவர் தொழிலதிபர் நிகில் நந்தா. அனுமன் பக்தரான இவர், ஹெச்சி நந்தா அறக்கட்டளை மூலம் இந்தியாவின் நான்கு திசைகளிலும் மிக பிரமாண்ட அனுமன் சிலையை நிறுவும் செயலில் ஈடுபட்டு உள்ளார்.
ஏற்கெனவே வடக்கே சிம்லா, கிழக்கே குஜராத் இடங்களில் நிறுவியுள்ள இவரது அறக்கட்டளை, தற்போது தெற்கே ராமேஸ்வரத்தில் பணியைத் தொடங்கி உள்ளது. அனுமன் சிலை பணிகள் முடிவடைந்ததும், இனி ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக இந்த அனுமன் சிலை விளங்கும் என்று அங்கு இருக்கும் பொதுமக்களும் பக்தர்களும் கூறி வருகின்றனர்.
source https://www.vikatan.com/spiritual/news/108-feet-hanuman-statue-to-be-built-in-rameswaram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக