Ad

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

நெல்லை: உடலில் கல்லைக் கட்டி ஆற்றில் வீசி கொலை செய்யபட்ட நபர்! - திருமணம் மீறிய உறவு காரணமா?!

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் செல்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதனால் அந்த கால்வாயில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. அதில் ஆண் ஒருவரின் உடல் மிதந்தபடி கிடப்பதை அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த இடம்

முன்னீர்பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் கிடந்துள்ளது. அவரின் உடலில் துண்டு மூலம் கற்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் ஓரிரு நாள் ஆனதால் உடல் மிதந்து வெளியே வந்திருக்கிறது. உடலைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

தொடக்கத்தில், அந்த வழியாகச் சென்ற யாராவது நீச்சல் தெரியாமலோ அல்லது கால்வாயில் தவறி விழுந்தோ உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியபோதிலும், சாதாரணமானவர்கள் அந்த காட்டுப் பகுதிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால் கொலை செய்யப்பட்டு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்திலும் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்தப் பகுதியில் கிடைத்த செல்போன் உதவியுடனும் விசாரணை விரிவடைந்தது.

முதல்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அக்கமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாராக இருக்கலாம் என்பது தெரியவந்தது. பா.ஜ.க-வில் முக்கிய பொறுப்பு வகித்த அவர், கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். அதற்காக நெல்லை வந்த அவரை யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரித்தனர்.

காவல்துறை விசாரணையில் செந்தில்குமார், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. அத்துடன் அவருக்கு கரூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதும் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்ததும் தெரியவந்தது. சமீபத்தில் அந்தப் பெண், செந்தில்குமாரை ஆபாசமாக திட்டிய ஆடியோவும் போலீஸாருக்கு கிடைத்தது.

கொலை நடந்த கால்வாய்

நெல்லையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடனும் செந்தில்குமாருக்கு தொடர்பு இருந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள். அதனால் திருமணம் மீறிய உறவு காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இருப்பினும், இறந்தது செந்தில்குமார் தானா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரின் மனைவியும் சகோதரரும் நெல்லைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உறுதிப்படுத்திய பின்னரே அடுத்தகட்ட விசாரணை நடக்கும் என்றும் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/man-murdered-and-tied-with-stone-and-thrown-in-river

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக