Ad

சனி, 12 பிப்ரவரி, 2022

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக கனடா, நியூஸிலாந்து, ரஷ்ய மக்கள்.... என்ன நடக்கிறது?!

உலக மக்களைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் தொற்று. இந்தத் தொற்றிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாகத் தடுப்பூசிகளை மட்டுமே கை காட்டுகிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், தடுப்பூசிகள்தான் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், அனைத்து நாடுகளும் தங்களது மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்த வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது உலக சுகாதார நிறுவனம். அதன்படி உலக நாடுகளும், மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தின.

இந்த நிலையில், கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. குறிப்பாக, கனடாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகக் கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கனடா தலைநகர் ஒட்டாவாவில் லாரி ஓட்டுநர்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், தற்போது பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டு கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. `Freedom Convoy' அதாவது `சுதந்திர வாகன அணிவகுப்பு' என்ற பெயரில் ஒட்டாவாவின் வீதிகளில் லாரிகள் மூலம் பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பை லாரி ஓட்டுநர்கள் பதிவு செய்துவருகிறார்கள்.

கொரோனா தடுப்பூசி

Also Read: கட்டாய தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத போராட்டம்... கனடா பிரதமர் ட்ரூடோ என்ன செய்யப்போகிறார்?!

இந்த `சுதந்திர வாகன அணிவகுப்பு' கனடாவைத் தாண்டி மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே கடந்த 2021-ம் ஆண்டிலேயே, சில ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது கனடாவில் போராட்டங்கள் வீரியமடைந்த பின்னர், அமெரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

கடந்த மூன்று தினங்களாக, நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனில் அமைந்திருக்கும் நாடாளுமன்றத்துக்கு அருகே நூற்றுக்கணக்கான மக்கள் கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிராகப் போராடிவருகின்றனர். அதேபோல ரஷ்யாவில் நூற்றுக்கணக்கானோர் கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிராகப் போராட்ட நடத்திவருகிறார்கள். கனடாவைப் போலவே இங்கும், சுதந்திர வாகன அணிவகுப்பில் மக்கள் ஈடுபட்டுவருகிறார்கள். இப்படி உலகின் பல்வேறு நாடுகளிலும் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக மக்கள் போராடிவருவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் கட்டுரைகளில், ``தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவாலும், கொரோனா கட்டுப்பாடுகளாலும் தங்களது சுதந்திரம் பறிபோவதாகப் போராட்டக்காரர்கள் நினைக்கிறார்கள். தங்களின் சுதந்திரத்தில் அரசாங்கங்கள் தலையிடுகின்றன என்பதால் போராட்டம் செய்வதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும், `இது என்னுடைய உடம்பு. என் உடம்புக்குள் வற்புறுத்தி, எதையோ செலுத்த விரும்புவது எப்படிச் சரியாகும். நான் விரும்பாமல் எந்த மருந்தும் என் உடம்புக்குள் செலுத்தப்படக்கூடாது' என்பதே கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராகப் போராடிவரும் பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது.

Canada Protest

Also Read: அமெரிக்கா: தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுக்கும் ராணுவ வீரர்கள் - எச்சரித்த அமைச்சர்!

மேலும், சிலர் தடுப்பூசிகளை விஷமாகக் கருதுகிறார்கள். `உலகில் பல ஆண்டுகளாக இருந்துவரும் சில முக்கிய நோய்களுக்குக்கூட இன்றுவரை தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை. ஆனால், கொரோனா தொற்று பரவிய ஓரே ஆண்டில் எப்படி அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைச் செலுத்திக்கொண்டால் எங்களுக்கு எதுவும் ஆகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்' என்று கேள்வியெழுப்புகிறார்கள். நியூசிலாந்தில் கடந்த டிசம்பர் மாதம், ஃபைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூன்று பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக நியூஸிலாந்து நாட்டின் தடுப்பூசி கண்காணிப்பு வாரியம் தெரிவித்திருந்தது. அப்போதே சிலர் தடுப்பூசிக்கு எதிராகக் குரல்கொடுத்தனர். தற்போது கனடாவில் கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததும், உலகின் பல்வேறு நாடுகளிலும் இதே போன்ற போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன'' என்று சொல்லப்பட்டிருக்கின்றன.

இப்படியாக போராட்டங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஆதரவாகப் பேசிவருபவர்கள், ``தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்களால், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு வரக்கூடும். மற்றவர்கள் நலனும் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த விஷயத்தில், போராட்டக்காரர்கள் சுயநலமாக நடந்துகொள்வது தவறு. கொரோனாவிலிருந்து இந்த உலகம் தப்பிக்க, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்!'' என்கிறார்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/protest/why-people-of-canada-russia-newzealand-protesting-against-corona-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக