Ad

வியாழன், 17 பிப்ரவரி, 2022

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை புதிய 'தேர்தல் ஃபார்முலா' ஆக்குகிறதா முக்கிய கட்சிகள்?!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பரப்புரை பிப்ரவரி 17-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடைசி நேரப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். “தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் தகுதியைத் தாண்டி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பு அவர் சார்ந்த சாதியும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பணமும் தான் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் இந்த விதி இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே பின்பற்றப்படுகிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். திருமங்கலம் ஃபார்முலா என வாக்குக்குப் பணம் வழங்குவதற்காகவே தமிழ்நாடு தேர்தல் களத்தில் ஒரு விதியே அமைக்கப்பட்டதாகத் தேர்தல் காலத்தில் எப்போதும் ஒரு பேச்சு எழுந்து கொண்டே இருக்கும்.

பத்து ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் கவுரவப் பிரச்னையாகப் பார்க்கப்படுவதால் இந்த தேர்தலில் பல்வேறு இடங்களில் வாக்குகளுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் அள்ளி இறைக்கப்படுவதாக எழும் புகார்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு பணம் கொடுப்பது இன்னும் தீவிரமாகும் என்றும் சொல்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரைப் பதவி ஏற்கும் நாள் வரை பணம் அதிகமாகப் புழங்கும் என்பதால் இந்தச் சிக்கலைத் தேர்தல் ஆணையம் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

பணம்

தொழில்நுட்பம் வளர, வளர பல்வேறு துறைகளில் ஏற்படும் மாற்றங்களைப் போல வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன அரசியல் கட்சிகள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணம் கொடுக்க அரசியல் கட்சிகள் செய்யும் புதிய உத்திகள் என்னவென்ற விசாரணையில் இறங்கினோம்... கிடைத்த தகவல்கள் எல்லாம் அடடே ரகங்கள்தான்...

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வீடுகள் தோறும் வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு ஆதரவு கேட்கும் நோட்டீஸ் வேட்பாளர்கள் கொடுத்தாலும், முன்போல் அதிகளவு அச்சடிப்பதில்லை. தற்போது எல்லோர் கைகளிலும் ஆன்ட்ராய்டு செல்போன் இருப்பதால் டிஜிட்டல் பிரசாரம் பெரும்பாலான வேட்பாளர்களின் உத்தியாக இருக்கிறது. ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள தங்கள் ஆதரவாளர்கள், கட்சியினர் குடும்ப உறுப்பினர் செல்போன் வாட்ஸ் அப்புகளுக்கு ஆதரவு திரட்டி பேசும் வீடியோ மற்றும் வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு பிரசார வாசகங்களையும் அனுப்புகின்றனர். பணம் கொடுப்பதிலும் இந்த டிஜிட்டல் உத்தியையே பயன்படுத்துகிறார்கள்” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

“இந்தப் பணப்பட்டுவாடாவை வாக்குப்பதிவுக்கு முந்தைய இறுதி நாள்களில் செய்ய முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். தற்போது வீடுகளுக்கு நேடியாகச் சென்று பணம் வழங்கினால் யாராவது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதால் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு வேட்பாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்” என்கிறர் அரசியல் வட்டாரத்தில்...

Digital payment | டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

“கடந்த 10 நாள்களாகச் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இந்த டிஜிட்டல் பணப்பரிமாற்றம் ஓசையின்றி நடைபெற்று வருகிறது. மாநில தேர்தல் ஆணையத்தால் இந்த ஆன்லைன் பணப்பரிமாற்றத்தைத் தடுக்க இயலாத நிலை உள்ளதாம். 10-க்கும் மேற்பட்ட ஓட்டுகள் ஒரு வீட்டிலிருந்தால் அந்த வீட்டுக்கு முதன்மையாக இருப்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பணப்பரிமாற்றம் செய்கிறார்கள்.” எனவும் தகவல்கள் வருகின்றன.

டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை தவிர “மூக்குத்தி, குக்கர், அரிசி மூட்டை, பட்டுப் புடவை, மளிகைப் பொருட்கள் என விதவிதமாக வாக்காளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. “சில இடங்களில் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை மதிப்புடைய பரிசு கூப்பனும் கொடுக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு இந்தக் கூப்பன்களை வைத்துக்கொண்டு மொபைல் ரீசார்ச், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மளிகை பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அந்த மளிகை பொருட்களை வாங்க மறுப்பவர்களின் வீடுகள் முன்பு அதை வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். தாம்பரம், ஆவடி பகுதிகளில் இப்படி மளிகை பொருட்களை வாங்கி கொடுக்கும் கலாசாரம் அதிகமாக உள்ளது. சில பகுதிகளில் வேட்பாளர்கள் ஒவ்வொரு குடியிருப்புகளாகச் சென்று அந்தக் குடியிருப்பு சங்க நிர்வாகிகளைச் சந்தித்து மொத்தமாகப் பேசிப் பணத்தைப் பட்டுவாடா செய்கிறார்கள். அந்த வகையில் பல்வேறு குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் லட்சக்கணக்கில் பணத்தை வேட்பாளர்களிடமிருந்து கறந்துள்ளனர் என்கின்றனர். “சிட்லபாக்கம் உள்படச் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இப்படிப் பணம் கைமாறி உள்ளது.” என்றவர்கள் சில இடங்களில் பெரிய கட்சி வேட்பாளர்களும் சுயேச்சைகளும் பூத் சிலிப் கொடுப்பதாகக் கூறி அதனுடன் பரிசுப் பொருள்களையும், பணத்தையும் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.” என்கின்றனர்.

ஹாட் பாக்ஸ்

பறக்கும் படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டாலும் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க இயலவில்லை. சென்னை உள்பட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் பணப்பட்டுவாடா வினியோகம் இன்றும், நாளையும் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/money-transfer-through-digital-for-vote-in-local-body-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக