Ad

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

`திறமை இருந்தும் வெற்றியை நோக்கி நகர்வதில் பிரச்னையா?' ஜெஸ்ஸி ஓவன்ஸ் வாழ்க்கை சொல்வதைக் கேளுங்கள்!

ஜெஸ்ஸி ஓவன்ஸ் ஒரு அமெரிக்க தடகள வீரர். 1936 - ல் பெர்லின் ஒலிம்பிக்ஸில் 100 மீட்டர், 200 மீட்டர், 4 x 100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய அனைத்திலும் தங்கப்பதக்கம் வென்றவர். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை பெற்ற முதல் அமெரிக்கர் அவர்தான். ஆனால் தனது மிகப்பெரிய ஒலிம்பிக் பரிசு என்று அவர் குறிப்பிடுவது வேறொன்றை. அது நாம் ஒவ்வொருவரும் கைவசப்படுத்த வேண்டிய பரிசு. இதோ அவர் கூறும் ஃப்ளாஷ்பேக்.

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

"அது 1936 - ன் கோடைக்காலம். ஒலிம்பிக் பந்தயங்கள் ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் நடந்து கொண்டிருந்தன. நான் இதற்காக ஆறு வருடங்களாகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். சொந்த நாட்டுக்கு ஓரிரு தங்கப்பதக்கங்களோடுதான் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன்.

நீளம் தாண்டுதல் போட்டியில் உலக சாதனை படைத்திருந்தேன். எனவே ஒலிம்பிக்ஸில் நான் மிக எளிதாக தங்கப் பதக்கம் வெல்வேன் என்று ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்கான பயிற்சிகளில் அங்கு நான் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உயரமான ஒரு இளைஞன் 26 அடி நீளத்தைத் தாண்டினான். அவன் ஜெர்மனியைச் சேர்ந்தவன். லுஸ் லாங் என்ற பெயர் கொண்ட அவனை ஹிட்லர் வேண்டுமென்றே புகழ் வெளிச்சத்துக்கு வராமல் கொஞ்சம் மறைத்து வைத்திருந்தார். அவன்தான் நீளம் தாண்டுதலில் வெற்றி பெறுவான் என்று நம்பியிருந்தார். அவன் வெற்றி பெற்றால் ஹிட்லர் 'நாஜி இனம்தான் உயர்ந்தது' என்று கூறுவார். அதுவும் நான் நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவன். இதை நினைத்த போது எனக்குக் கோபம் ஏற்பட்டது. யார் உயர்ந்தவர், யார் உயர்ந்தவர் இல்லை என்பதை ஹிட்லருக்கு நிரூபித்துக்காட்ட வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டது.

ஒரு தடகள வீரருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர் நிறைய தவறுகளைச் செய்வார் என்பதை எந்தப் பயிற்சியாளரை கேட்டாலும் சொல்வார். நானும் விதிவிலக்கல்ல. மூன்று தகுதிச்சுற்றுகளில் முதலாம் தகுதிச்சுற்றில் நான் தவறு செய்தேன். இரண்டாவதிலும் தவறினேன்.

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

'மூவாயிரம் மைல்களைக் கடந்து இதற்காகவா வந்தேன்?' என்று கசப்புடன் என்னை நானே கேட்டுக் கொண்டேன். அடுத்த தகுதிச்சுற்றிலும் என்னை ஒரு முட்டாளாகக் காட்டிக் கொள்வேனோ... வேகமாக நிலத்தை உதைத்தேன்.

அப்போது ஒரு கை என் தோளின் மீது அமர்ந்தது. திரும்பிப் பார்த்தேன். அது அந்த உயரமான ஜெர்மானிய இளைஞன். தன் முதல் முயற்சியிலேயே இறுதிச்சுற்றுக்கு அவன் தேர்வாகி இருந்தான். எனது கைகளைக் குலுக்கினான்.

"மிஸ்டர் ஜெஸ்ஸி ஓவன்ஸ், என் பெயர் லுஸ் லாங். நாம் இதற்கு முன் சந்தித்ததில்லை என்று நினைக்கிறேன்" என்றான். சரளமான ஆங்கிலம் என்றாலும் அவனது பேச்சில் ஒருவித ஜெர்மானிய நெடி அடித்தது.

"உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று சொன்னேன். கூடவே என் பயத்தை மறைத்துக்கொண்டு "எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"நான் நலமாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி" என்றான்.

"எதை மனதில் கொண்டு கேட்கிறீர்கள்?" என்றேன்.

"உங்கள் மனதை ஏதோ அரித்துக் கொண்டிருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு போட்டியில் கலந்து கொண்டால் கூட நீங்கள் தகுதி பெற்று இருப்பீர்கள்" என்றான்.

ஜெஸ்ஸி ஓவன்ஸ்

அடுத்த சில நிமிடங்களுக்கு இருவரும் நடக்கத் தொடங்கினோம். என் மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயம் எது என்பதை அந்த இளைஞனிடம் நான் கூறவில்லை. ஆனால் அவன் என் கோபத்தைப் புரிந்து கொண்டதாக தெரிந்தது. எனக்கு உற்சாகம் ஏற்படும் வகையில் பேசிக்கொண்டிருந்தான். நாஜி இளைஞர்கள் இயக்கத்தில் பங்கு கொண்டிருந்தாலும் அவனுக்கு இன மேன்மை குறித்த பார்வையில்லை.

இறுதியில் அவன் கூறினான்.

"நீங்கள் தாண்டத் தொடங்க வேண்டிய பகுதியைக் கொஞ்சம் முன்னதாகவே இருப்பதாக மனதில் கொண்டு தாண்டத் தொடங்குங்கள். அப்போது தவறு செய்ய மாட்டீர்கள். தகுதிச்சுற்றில் முதலாவதாக வரவில்லை என்றால் என்ன? இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அது மட்டும்தானே இப்போதைய தேவை..." என்றான்.

என் மனதில் இருந்த டென்ஷன் மறைந்துவிட்டது. அவன் கூறிய உண்மை என் மனதில் தைத்தது. அதே போல் செய்தேன். தகுதித் தேர்வை எளிதாகக் தாண்டினேன். அன்று இரவு அந்த இளைஞனின் அறைக்குச் சென்று அவனுக்கு நன்றி கூறினேன். ஒருவேளை அவனது அறிவுரையை நான் பின்பற்றவில்லை என்றால் நான் அடுத்த நாள் நடக்க இருந்த இறுதிச்சுற்றுக்குத் தேர்வு ஆகாமலேயே போயிருக்கக் கூடும்.

நாங்கள் இருவரும் சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு பேசினோம். தடகளத்தைப் பற்றி, எங்களைப் பற்றி, உலக விவகாரங்களைப் பற்றி என்று எங்கள் பேச்சு நீண்டது.

அடுத்த நாள் அந்த இளைஞன் தனது பழைய சாதனையை முறியடித்தான். இதன் காரணமாக நான் என்னுடைய மிக உச்ச முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது. நான் ஒலிம்பிக் சாதனையை செய்தேன். லுஸ் லாங் என்னைப் பாராட்டினான். அருகிலிருந்து ஹிட்லர் எங்கள் இருவரையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் பெற்ற தங்கப்பதக்கங்களை விட அந்த 24 கேரட் தங்கமான நட்பு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக எனக்கு பட்டது.

ஜெஸ்ஸி ஓவன்ஸ் ஃபோர்டுடன்

"வாழ்க்கையின் முக்கியமான நோக்கம் என்பது வெல்வதல்ல. மிகச் சிறப்பாக போட்டியிடுவதுதான்" என்கிறார் ஜெஸ்ஸி ஓவன்ஸ்

அதுதான் நமக்குமான பாடம். நமது திறமை என்ன என்பதை இனம் கண்டு கொள்வது, அதில் மிக அதிகமான அளவு எப்படி உயரத்துக்குச் செல்லலாம் என்பதற்கான முயற்சிகள் எடுப்பது ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். உரிய வெற்றிகள் வந்து சேரும். போட்டிகளைப் பார்த்து மனம் குமைந்து கொண்டே இருந்தால் கவனம் சிதறும். லட்சியத்தை அடையும் தூரம் அதிகமாகும்.



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/secret-of-success-the-inspiring-story-of-jesse-owens-a-fierce-athlete

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக