Ad

சனி, 26 பிப்ரவரி, 2022

யூரோ டூர் - 27: ஐரோப்பிய ஒன்றியம் உருவான கதையும், அதனால் உறுப்பு நாடுகள் அடைந்த வளர்ச்சியும்!

சோவியத் வீழ்ச்சியில் துளிர்த்த கிழக்கு ஐரோப்பா

20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி கிழக்கு ஐரோப்பாவில் பெரும் புவிசார் அரசியல் எழுச்சியின் முக்கிய காலகட்டமாக வரலாற்றில் பதியப்பட்டது. சிதைந்த சோவியத் சாம்பலிலிருந்து 15 புதிய நாடுகள் முளைத்தன.

பால்டிக் நாடுகளான லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா தமது சுயாட்சியை முதலில் அடைந்தன. அதைத்தொடர்ந்து மக்கள் வாக்கெடுப்பில் சுதந்திரத்திற்காகப் பெரும்பான்மையானவர்கள் வாக்களித்ததன் மூலம் உக்ரைன் அடுத்ததாக வெளியேறியது. இது சோவியத் ஒன்றியத்திற்கு மரண அடியாக இருந்தது. ஏனெனில் உக்ரைனின் வெளியேற்றம் சோவியத் எனும் ஆலவிருட்சத்தை வேரோடு அசைத்துப் பார்த்தது.

சோவியத் யூனியன்

பல பால்டிக் நாடுகள் சோவியத் சரிவை அடுத்து கம்யூனிசத்தை கைவிட்டு மேற்குலகோடு இணைந்து ஐரோப்பிய சமூக அங்கத்துவத்தை பெறுவதில் அக்கறை காட்டின. 1991-ல் முடிவுக்கு வந்த வார்சா உடன்படிக்கையைத் தொடர்ந்து நேட்டோவில் உறுப்பினராக இணைந்து கொள்ளவும் இவை ஆர்வம் கொண்டன. அதில் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக நேட்டோவில் இணைந்து கொண்டன. ஜோர்ஜியா, பெலரஸ், உக்ரைன் போன்ற சில முந்தைய சோவியத்தின் நாடுகள் மட்டும் மிஞ்சியுள்ள நிலையில், நேட்டோவில் இணைவதற்கான உக்ரைனின் முடிவுக்கு ரஷ்யா கடும் எதிர்பை தெரிவித்து வந்தது. அந்தப் பதற்றம் கடைசியில் யுத்தமாக இன்று வெடித்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐரோப்பாவில் வெடித்துள்ள ஒரு பெரிய போரின் முடிவு என்னவாகும் என்ற கேள்வி முழு உலகையுமே சூழ்ந்துள்ளது. கிழக்கு நோக்கி தன் எல்லையை விரிவுபடுத்த மாட்டோம் என நேட்டோ வழங்கிய வாக்குறுதியை மீறி தற்போது தனது எல்லையில் உட்புக முயல்வதைக் கடுமையாகத் கண்டிக்கும் ரஷ்யா, அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதி, காட்டமாக இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சரி, நிகழ்காலத்தை விடுத்து, வரலாற்றின் பக்கமே போவோம். சோவியத் ஒன்றியத்தின் எட்டாவது மற்றும் இறுதித் தலைவருமான Mikhail Sergeyevich Gorbachev-ன் ராஜினாமாவைத் தொடர்ந்து ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தம் புதிய சுயாட்சியை அறிவித்தன.

கம்யூனிசத்திற்குப் பிறகான ஐரோப்பா

என்னதான் சோவியத் வீழ்ந்தாலும் கம்யூனிசத்திலிருந்து விலகுவது ஒரே இரவில் நடக்கவில்லை. 1989 வரையிலான காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பியப் பொருளாதாரங்கள் பெரும்பாலும் தேக்கநிலையிலேயே இருந்தன. பல பகுதிகளில் உள்ள சந்தைகள், உணவகங்கள் மற்றும் கடைகள் சரக்குகளைப் பராமரிக்கவும் மறுசீரமைக்கவும் போராடியதால், பொருள்கள் பெரும்பாலும் பற்றாக்குறையாக இருந்தன. IMF மற்றும் உலக வங்கி போன்ற மேற்கத்திய நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பாவில் பொருளாதார மாற்றத்திற்கான பல விதிமுறைகளை வகுத்தன. ஐரோப்பியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பியப் பொருளாதாரத்தை உறுதியாகப் பேணவும், வர்த்தக சந்தைப்படுத்தல் சமநிலையை உருவாக்கவும், ஐரோப்பியர்களிடையே கட்டுப்பாடுகள் இல்லாத போக்குவரத்து முறைகளை உருவாக்கவும் பல சர்வதேச நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

நிலக்கரி மற்றும் எஃகு தொழிற்சாலைகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1951இல் பாரிஸ் உடன்படிக்கை மூலம் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய ஆறு நாடுகள் தங்கள் நிலக்கரி மற்றும் எஃகு தொழில்களை பொதுவான நிர்வாகத்தின் கீழ் நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் எந்த ஒரு நாடும் கடந்த காலத்தைப் போல மற்ற நாடுகளுக்கு எதிராகப் போர் ஆயுதங்களை உருவாக்க முடியாது என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் பிரகாரம் உருவான ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம் (European Coal and Steel Community) இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை (EU) உருவாக்க வழிவகுத்தது.

European Union and European Economic Area (EEA)

ஐரோப்பாவில் பல புதிய நாடுகள் முளைத்ததைத் தொடர்ந்து நாடுகளுக்கு இடையே மற்றுமொரு ரத்தக்களரி ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நிறுவனம் நிறுவப்பட்டது. அமைதியான, ஒன்றுபட்ட மற்றும் வளமான ஐரோப்பாவைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நவம்பர் 1, 1993, மாஸ்ட்ரிக்ட், நெதர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட European Union, 27 ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாக பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியத்தில் தன் தலைமைச் செயலகத்தைக் கொண்டு இன்று செயல்படுகிறது.

உண்மையில் பார்க்கப்போனால் ஹிட்லர் கண்ட கனவும் இதுதான். ஒன்றிணைந்த ஐரோப்பா, அதில் ஒற்றை நாணயம், ஒரே சட்டம், எல்லைகள் இல்லா வர்த்தகம் என ஹிட்லர் விரும்பியதும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு அமைப்பைத்தான். ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி சர்வாதிகாரத்தின் அடர்ந்த கூறுகளைக் கொண்டிருந்தது. பொதுவாக ஐரோப்பா என்று நோக்காமல் அனைத்தையும் ஜெர்மனியை மையமாக வைத்தே அவர் சிந்தித்தது தவறாகிப் போனது. ஹோலோகாஸ்ட், யூதப் படுகொலைகள், சோவியத் மீதான தாக்குதல் போன்ற சில விஷயங்களை மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் இன்று வரலாறு விதமாக மாறியிருக்கும். நாம் பார்க்கும் ஐரோப்பாவும் வேறு உருவம் பெற்றிருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பாவில் யூரோப்பியன் யூனியன் செயற்பாடுகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் ஐரோப்பிய ஒன்றியம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஐரோப்பாவில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி, ஐரோப்பியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பெருமளவில் உதவுகிறது. இது தன் உறுப்பு நாடுகளின் பொதுவான பொருளாதார, அரசியல், சமூக மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை நிர்வகிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய வலைதளத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கங்களாக, ஐரோப்பியக் குடியுரிமையை நிறுவுதல், சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல், ஐரோப்பியப் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் உலகில் ஐரோப்பாவின் பங்கை வலியுறுத்துதல் போன்றன வரையறுக்கப்பட்டுள்ளன. அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பொதுவான ஒரு ஐரோப்பிய நாணயத்தை இது அறிமுகப்படுத்தியது. ஆனால், இதில் ஸ்காண்டிநேவியா நாடுகள் மட்டும் இணைந்து கொள்ளவில்லை.

ஐரோப்பிய யூனியனில் 447.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் முக்கிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது. எந்தவொரு உறுப்பு நாடுகளும் அதன் சொந்த அரசியலமைப்பு தேவைகளுக்கு ஏற்ப யூனியனில் இருந்து விலகவோ வெளியேறவோ முடிவு செய்யலாம். ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் வகிக்கும் எந்தவொரு நாட்டின் குடிமகனும் வேலை அனுமதியோ அல்லது விசாவோ இல்லாமல் அதன் 27 உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக வாழவும் வேலை செய்யவும் முடியும். அதே வழியில், ஓர் உறுப்பு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேறு எந்த உறுப்பு நாட்டிலும் எந்த சிறப்பு அனுமதிகளோ அல்லது கூடுதல் வரிகளோ இல்லாமல் விற்கப்படலாம்.

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை ஐரோப்பியச் சுதந்திர வர்த்தகப் பகுதி (EFTA) நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்காக 1994ல் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். EEA 31 நாடுகளைக் கொண்டுள்ளது. அதில் 28 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனும் அடங்கும்.
யூரோ கரன்ஸி

ஐரோப்பிய ஒன்றியம் ஓர் அமைப்பாக உருவானதில் வர்த்தக ரீதியாக மிகப்பெரும் நன்மை அடைந்தது ஜெர்மனியும் பிரான்ஸுமே. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பது ஏனைய சிறிய நாடுகளுக்குக் கூட பெரியளவில் வரப்பிரசாதமாகவே போனது. European பாஸ்போர்ட், வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில் இலவசக் கல்வி, வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி, குழந்தைப் பாதுகாப்பு போன்ற பல சலுகைகள், கட்டுப்பாடு இல்லாத வர்த்தகம், எந்த ஐரோப்பிய நாட்டிலும் கட்டுப்பாடுகள் இல்லாமல் வேலை செய்யலாம் போன்ற பல காரணங்களினால் தற்போது அங்கத்துவம் பெறாத ஐரோப்பிய நாடுகளும் EU-வில் அங்கம் வகிக்க முட்டி மோதுகின்றன. அதேவேளை UK போன்ற நாடுகள் EU-விலிருந்து விலகவும் இதுவே காரணம். அது பற்றி நாம் மற்றுமொரு அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம். இந்தப் பணக்கார நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பது தமக்கு பெரும் சுமை எனக் கருதக் காரணம் அவர்களின் தனிநபர் வருமானத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் செலுத்த வேண்டிய அங்கத்துவக் கட்டணம் மற்றும் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளது என்பதுதான். இதுவே நார்வே, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளை அதிருப்தி அடையவும் செய்துள்ளன.

யூகோஸ்லாவியாவின் பிளவு

ஐரோப்பாவின் தெற்கு ஸ்லாவிக் மக்களுக்கு பால்கன் தீபகற்பத்தில் தமக்கான ஒரே மாநிலம் இருப்பது நல்ல யோசனையாக ஒரு காலத்தில் தோன்றியது. விளைவு, முதல் உலகப்போருக்குப் பின்னர் தெற்கு ஸ்லாவ்களின் நிலம் என்ற பொருள் தரும் யூகோஸ்லாவியா ஆறு முக்கிய ஸ்லாவிக் நாடுகளை ஒன்றாக இணைத்து உருவானது. இந்த மக்கள் Servo-Croatian எனும் ஒரு பொதுவான மொழியைப் பேசினாலும் வெவ்வேறு வரலாறுகள், வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் தமக்கான தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிருந்தனர். முதலாம் உலகப் போருக்குப் பிறகு, யூகோஸ்லாவியா எனும் பெரும் தேசம் சோவியத்தின் கம்யூனிஸ்ட் கொள்கைகளில் பலமாகக் கட்டுண்டிருந்தது. கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடு இந்தக் குடியரசும் வீழ்ந்தது.

சோவியத்தின் ஓர் அங்கமாக இல்லாவிட்டாலும் தீவிர கம்யூனிஸ்ட் தேசமாக இருந்த யூகோஸ்லாவியா சோசலிச பெடரல் குடியரசு ஜூன் 25, 1991 - ஏப்ரல் 28, 1992 வரையிலான காலப்பகுதிக்குள் ஐந்து மாநிலங்களாக உடைந்தது.
யூகோஸ்லாவியா

இன-தேசியவாதத்தின் எழுச்சி, தொடர்ச்சியான அரசியல் மோதல்கள் மற்றும் செர்பிய விரிவாக்கங்களால் உடைந்த யூகோஸ்லாவியா எனும் பரந்த தேசத்தின் துண்டுகளிலிருந்து போஸ்னியா, ஹெர்சகோவினா, குரோஷியா, மாசிடோனியா, ஸ்லோவேனியா, மற்றும் யூகோஸ்லாவியா ஃபெடரல் குடியரசு (பின்னர் செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ என அழைக்கப்பட்டது) எனும் ஐந்து புதிய தேசங்கள் மலர்ந்தன.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லையில்லா பயணத்தின் ஆரம்பம்

ஜூன் 14, 1985ல் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் பொதுவான எல்லைகளில் சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் படிப்படியாக ஒழிப்பது தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் எல்லையில் உள்ள லக்சம்பேர்க்கின் ஷெங்கன் எனும் ஒரு சிறிய நகரத்தில் இது கையெழுத்திடப்பட்டதால் அதன் நினைவாக இந்த ஒப்பந்தம் ஷெங்கன் ஒப்பந்தம் (Schengen Agreement) எனப் பெயரிடப்பட்டது.

ஜூன் 19, 1990 அன்று, ஐரோப்பா முழுவதும் ஷெங்கன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் முக்கிய விஷயங்களாக உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பொதுவான எல்லைச் சோதனைகள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் நீதிக்கான பொதுவான பகுதிகளை உருவாக்க வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன.

இதன் ஏனைய முக்கிய அம்சங்களாக EU அல்லாத குடிமக்கள் ஷெங்கன் பகுதிக்குள் நுழைவது மற்றும் குறுகிய காலம் தங்குவது தொடர்பான விதிகளை நிர்ணயித்தல், புகலிட விவகாரங்கள் (எந்த உறுப்பு நாட்டிலும் புகலிடத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படலாம்) தொடர்பான தீர்மானம், எல்லை தாண்டிய போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான போலீஸ் ஒத்துழைப்பு, மற்றும் நீதித்துறை விஷயங்களில் ஷெங்கன் நாடுகளிடையே ஒத்துழைப்பு போன்றவை முடிவு செய்யப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பியச் சமூகம் இதன் மூலம் கணிசமான நன்மையைப் பெற்றது. மார்ச் 1995-இல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நேரத்தில், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் கிரீஸ் ஆகியவை ஏற்கெனவே இருந்த ஐந்து உறுப்பினர்களுடன் புதிதாக இணைந்தன. அதைத் தொடர்ந்து ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் போன்றவை இதில் இணைந்தன. 2007-ம் ஆண்டில், செக் குடியரசு, எஸ்டோனியா, ஹங்கேரி, லாட்வியா, லிதுவேனியா, மால்டா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக ஷெங்கன் பகுதி விரிவடைந்தது. 2008-ல் சுவிட்சர்லாந்தையும் 2011-ல் லிச்சென்ஸ்டைனையும் சேர்த்ததன் மூலம் இப்பகுதி தற்போது மொத்தம் 26 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி ஐரோப்பாவின் வெற்றிகரமான ஒற்றை அங்கமாக மாறியது.

ஷெங்கன் பகுதியானது ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் வசிக்க, வேலை செய்ய மற்றும் உள் எல்லைகளில் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது. கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ஐரோப்பியர்கள் ஒரு ஷெங்கன் நாட்டிலிருந்து மற்றொரு ஷெங்கன் நாட்டில் பணி நிமித்தமாக வசிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 3.5 மில்லியன் மக்கள் ஷெங்கன் உள் எல்லைகளைக் கடக்கிறார்கள். ஐரோப்பியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஷெங்கன் பகுதிக்குள் 1.25 பில்லியன் பயணங்களை மேற்கொள்கின்றனர். இது ஐரோப்பியச் சுற்றுலாத் துறைக்கும் பெருமளவில் லாபம் சேர்க்கிறது.

அது மட்டுமல்ல, ஷெங்கன் பகுதி அதன் பங்கேற்பு மாநிலங்களுக்குக் குறிப்பிடத்தக்கப் பொருளாதார நன்மைகளையும் கொண்டு வருகிறது. அது நிறுவப்பட்டதிலிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் காலப்போக்கில் அதிகரித்து ஐரோப்பிய வணிகங்களின் வளர்ச்சியை எளிதாக்கியது. உதாரணத்துக்குக் கடந்த காலங்களில் லாரிகள் குறிப்பிட்ட ஷெங்கன் எல்லைகளைக் கடக்கப் பல மணிநேரம் ஆனது. ஆனால், இப்போது அது சில மணித்துளிகளாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இது ஐரோப்பா முழுவதும் பொருள்களை நகர்த்துவதை மிகவும் எளிதாகவும், விரைவாகவும், மலிவாகவும் ஆக்கியது.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பாவில் வணிகம் துளிர்க்கத் தொடங்கியது. இன்று நாம் நமது அன்றாட வாழக்கையில் ஒரு அங்கமாகிப் போன சில பிரம்மாண்டமான பிராண்ட்கள் இந்தக் காலகட்டத்தில்தான் பிறந்தன. பனிப் போரின் பின்னர் ஐரோப்பாவில் முளைத்து இன்று உலகளாவிய ரீதியில் ஆலவிருட்சமாய் விரிந்து வேர்விட்டு, சக்கை போடு போடும் ஐரோப்பிய கம்பெனிகள் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாமா?!

யூரோ டூர் போலாமா?!



source https://www.vikatan.com/social-affairs/international/euro-tour-27-the-formation-of-the-european-union-and-how-it-benefitted-the-nations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக