Ad

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

உக்ரைனை கைவிட்ட நேட்டோ நாடுகள்... இந்தப் போரில் ரஷ்ய அதிபர் புதினின் உள்நோக்க அரசியல் என்ன?!

நீண்ட நாள்களாக உக்ரைன் எல்லையில் காத்திருந்த ரஷ்யப் படைகள், நேற்றுமுந்தினம் முதல் ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவுப்படி உக்ரைனுக்குள் நுழைந்துவிட்டன. வான்வழித் தாக்குதல்களையும், தரைவழித் தாக்குதல்களையும் நிகழ்த்தி உக்ரைனின் முக்கியப் பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது ரஷ்யா. `போரை நிறுத்திக்கொள்ளுமாறு' ஐ.நாவும், உலக நாடுகளும் முன்வைத்த கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, இரண்டாவது நாளாக உக்ரைனில் தாக்குதல்களை நிகழ்த்தியது ரஷ்யா.

`` விதிமுறைகளை மீறிக் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்களை நடத்திவருகிறது. ரஷ்யத் தாக்குதல்களை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. எந்த நாடும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. நேட்டோ படைகளையும் காணவில்லை. இரண்டாவது நாளாகத் தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்'' என்று வேதனை தெரிவித்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. மேலும், `தயவு செய்து உதவி செய்யுமாறு' உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

கைவிட்ட நேட்டோ!

உக்ரைன், நேட்டோ கூட்டமைப்பில் சேர நினைத்ததுதான் இந்தப் போருக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், நேட்டோ படைகளும் தற்போது உக்ரைனைக் கைவிட்டுவிட்டதால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துவருகிறது உக்ரைன். ஆரம்பக் கட்டத்தில், ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் நிறுத்தியபோது, பதிலுக்கு நேட்டோவும் தனது படைகளை போலாந்து, ஹங்கேரி, ருமேனியா ஆகிய ரஷ்யாவின் அண்டை நாடுகளுக்கு அனுப்பியது. ஆனால், போர் தொடங்கிய பிறகு நேட்டோ படைகள் உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை. நேட்டோ படைகள் உதவிக்கு வராதது ரஷ்யாவுக்கு பெரும் சாதகமாகிவிட்டது.

``உக்ரைன் எங்களது நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடு அல்ல; அதனால் எங்கள் படைகளை உக்ரைனுக்குள் அனுப்ப முடியாது. எங்களது உறுப்பு நாடுகளான போலாந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள்மீது ரஷ்யா கைவைத்தால், திருப்பி அடிக்க தயங்கமாட்டோம்'' என்றிருக்கிறது நேட்டோ.
உக்ரைன் - ரஷ்யா

நேட்டோ படைகளும், அமெரிக்காவும் தங்களது நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் என்ற தைரியத்தில், வலிமையான படைபலம் கொண்ட ரஷ்யாவுக்கு எதிராகச் சவால்விட்டு வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. ஆனால், தற்போது யாருடைய உதவியும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறது உக்ரைன். வரும் நாள்களில் ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்ந்தாலும் நேட்டோ நாடுகளின் படை, உக்ரைனுக்கு ஆதரவாகப் போர்க் களத்தில் இறங்காது என்றே சொல்லப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதினின் உள்நோக்க அரசியல் என்ன?

ஐரோப்பிய நாடுகளின்மீது அமெரிக்க தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், ரஷ்யாவின் வல்லரசு அந்தஸ்துக்குப் பாதிப்பு உண்டாகிவிடுமோ என்ற அச்சம் ரஷ்ய அதிபர் புதினிடம் இருக்கக்கூடும். ஏற்கெனவே சோவியத் யூனியனிலிருந்த லித்துவேனியா, எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்துவிட்டன. மீதமிருக்கும் சோவியத் நாடுகளும் நேட்டோவில் இணைந்துவிட்டால், உலக அரங்கில் ரஷ்யா பின்னுக்குத் தள்ளப்படும் என புதின் அஞ்சுவதாகத் தெரிகிறது. எனவே, ``உலக அரங்கில் ரஷ்யாவின் பலத்தை நிலைநாட்டவே இந்தப் போர் முடிவை புதின் எடுத்திருக்கிறார்'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ``ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் சோவியத் யூனியனை உருவாக்க முயற்சி செய்கிறார். அவரது இந்த எண்ணம், உலக நாடுகளுக்குப் பாதிப்புகளை உண்டாக்கும்'' என்றிருக்கிறார்.

விளாடிமிர் புதின்

``இந்தப் போரின் மூலம் சோவியத் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய நாடுகளுக்குப் பயம் காட்ட நினைக்கிறார் புதின். இதன் மூலம் உலக அரங்கில் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாகும் என அவர் நம்புகிறார். சீனாவும் ரஷ்யா பக்கம் இருப்பதால், அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் தருவதற்காகவும் இந்தப் போரை பயன்படுத்திக் கொள்வார் புதின். அடுத்ததாக, மீண்டும் சோவியத் யூனியனை கட்டமைக்கும் பணியைக்கூட, ரஷ்ய அதிபர் புதின் மேற்கொள்ளலாம்'' என்கிறார்கள் ரஷ்யா - உக்ரைன் போரை உற்று நோக்குபவர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/international/article-about-putins-international-politics-in-ukraine-war

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக