நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன... டீ ஆற்றுவது, வடை சுடுவதில் ஆரம்பித்து குப்பை பொறுக்குவது வரையிலாக வேட்பாளர்களும் கட்சித் தலைவர்களும் செய்துவரும் அதகளங்கள் வாக்காளர்களைப் புல்லரிக்க வைக்கின்றன.
இவர்களுக்கிடையே அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் அள்ளிவீசும் குற்றச்சாட்டுகளும், தேர்தல் வாக்குறுதிகளும் கவனம் ஈர்க்கின்றன. அண்மையில் கோவை மாநகராட்சியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தி.மு.க அரசு, நகைக் கடன் தள்ளுபடி செய்யாதது ஏன்? குடும்பப் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை அளிக்காதது ஏன்?' என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை அள்ளி வீசினார்.
இதற்குப் பதிலடியாக, தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், 'மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்ற மகளிர் உரிமைத் தொகையை விரைவில் வழங்கப்போகிறோம். நாங்கள் யாரையும் ஏமாற்றப்போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான். இது தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு நன்றாக தெரியும்' என்றார் உரத்த குரலில்.
'தமிழக அரசு கஜானா காலியாகிவிட்டது, மாநில அரசின் கடன் சுமை 5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது' என்றெல்லாம் வெள்ளை அறிக்கை வாசித்த தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, தற்போது தேர்தல் வாக்குறுதிகளாக மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி, ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என பேச ஆரம்பித்திருப்பது அரசியல் விமர்சகர்களிடையே பெரும் விவாத அலையை உருவாக்கிவருகிறது.
நிதிச்சுமையில் திண்டாடிவருகிறது தமிழக அரசு. எனவே, தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்தபடி மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாத நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது தி.மு.க தலைமையிலான தமிழக அரசு.
இந்தநிலையில், தி.மு.க-வின் திண்டாட்ட நிலையைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளத் துடிக்கும் எதிர்க்கட்சிகள், இன்னும் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடையே எடுத்துச்சொல்லி தி.மு.க வேட்பாளர்களைத் திணறடித்து வருகின்றன.
குறிப்பாக, தஞ்சாவூர் மாநகராட்சித் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி, 'நான் நகைக்கடன் வாங்கியிருந்தேன். ஆனால், தள்ளுபடி ஆகவில்லை' என ஒரு பெண்மணி கேட்டுவைக்க... 'எந்த பேங்கில் கடன் வாங்கினீர்கள், யார் யார் பெயர்களில் வாங்கினீர்கள், செல்லான் கொண்டு வந்தீர்களா' என்றெல்லாம் வரிசையாக பதில் கேள்விகள் கேட்டவர், 'தி.மு.க ஆட்சி வந்து எட்டு மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. கட்டாயம் கொடுத்துவிடுவார்கள்' என்று கூறி சமாளித்தார்.
Also Read: ``பிரதமர் மோடியின் ரூ.15 லட்சம் யாருக்காவது கிடைத்ததா?!” - ராகுல் காந்தி கேள்வி
இந்த சம்பவத்தையடுத்து, 'தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க அரசால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மக்களை நேரடியாக சந்தித்தால், கேள்விகள் கேட்பார்கள் என்று பயந்து, காணொலி காட்சி வழியாக பரப்புரை மேற்கொண்டுவருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்' என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
ஆனால், 'மக்களை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே நான் காணொலியில் பரப்புரை செய்துவருவதாக, மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிலர் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். எப்போதும் மக்களோடு மக்களாக இருந்துவரும் நாங்கள் யாரையும் ஏமாற்றப்போவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்' என பதிலடி கொடுத்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதற்கிடையே, கூட்டுறவு சங்கங்களில் ஐந்து பவுன் தங்கத்துக்கும் குறைவாக அடகு வைத்து பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு, 'நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி'யை நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி மீது அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடி விழாக்களை நடத்தலாமா? தேர்தல் நடைபெறும் பகுதி மக்களிடையே இதுபோன்ற செய்திகள் தாக்கத்தை ஏற்படுத்தாதா? தார்மீக அடிப்படையில் இது நியாயம்தானா?' என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதுகுறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது, ''தங்கநகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்துவிட்டது. மொத்தம் 13.5 லட்சம் பேர் நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கான உரிய தகுதிகொண்ட பயனாளிகளாக உள்ளனர். இந்தப் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேர்தல் விதிமுறை எதுவும் மீறப்படவில்லை.
Also Read: திண்டுக்கல்: கிழிந்த அதிமுக பேனர்; கொதித்து எழுந்த கட்சியினர்! -ட்விஸ்ட் வைத்த சிசிடிவி காட்சிகள்
ஏனெனில், இந்த நிகழ்ச்சிகள் ஊராட்சிப் பகுதிகளில்தான் நடைபெறுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாதபோது, இது எப்படி தேர்தல் விதிமுறை மீறலாகும்? புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினாலோ அல்லது அறிவித்தாலோ அதுதான் சட்டப்படி தவறு. ஆனால், நகைக்கடன் தள்ளுபடி என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டம்தானே.... எனவே அந்த நிகழ்ச்சியை நடத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?
கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திலேயே, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். புதிய மாவட்டப் பிரிப்புகளுக்கான அறிவிப்புகளை வெளிப்படையாக அறிவித்தார். இதுதான் தேர்தல் நடமுறை விதிகளை மீறிய செயல்.
அடுத்து, 'குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க அரசு செய்துதராது' என்று விஷமப் பிரசாரம் செய்துவருகின்றன எதிர்க்கட்சிகள். மக்கள் யாரும் இதை நம்பப் போவதில்லை. ஏனெனில், தி.மு.க அரசு, தேர்தல் வாக்குறுதிகளை அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில், எல்லா வாக்குறுதியையும் ஐந்தாண்டு காலத்துக்குள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எட்டு கோடி என்றால், அதில், நான்கு கோடி பெண்கள். இதில், ஒன்றரை கோடி பெண்கள் 18 வயதுக்குக் கீழானவர்கள். மீதம் உள்ள இரண்டரை கோடி பெண்களில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு கோடி பெண்கள் வருவார்கள். இதிலும்கூட, அரசு ஊழியர், தனியார் ஊழியர் என வகைப்படுத்திக்கொண்டு உரிய பயனாளிகள் எவ்வளவு பேர் என்று கணக்கெடுத்தால், 25 லட்சத்திலிருந்து 35 லட்சம் பேர் வரையில் வருவார்கள்.
இந்த எண்ணிக்கையிலும்கூட ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அத்தியாவசியமாகத் தேவைப்படுவோர் என்று கணக்கிட்டால், இன்னும் தெளிவான எண்ணிக்கை கிடைத்துவிடும். இப்படி முறைப்படி உரிய பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து உதவித் தொகை வழங்குவதென்பது தமிழக அரசுக்கு சாத்தியமே. எனவே, எதிர்க்கட்சிகளின் பொய் பரப்புரைகளை மக்கள் நம்பவேண்டாம். குடும்பத் தலைவிகளுக்கான மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை நிச்சயம் தி.மு.க அரசு வழங்கும்'' என்கிறார் உறுதியாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/gold-loan-waiver-certificate-rs1000-title-is-dmk-in-a-hurry-for-elections
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக