Ad

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

"அந்த சந்நிதிக்குப் போனால் இரண்டே நாளில் வாழ்க்கை மாறும்!"- பாடகர் வேல்முருகன் பகிரும் ஆன்மிகம்

பாடகர் வேல்முருகன், நாடறிந்த நாட்டுப்புறப் பாடகர். தமிழ்த்திரை உலகில் பல முக்கியமான பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர். 'சுப்ரமணியபுரம்' படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமான வேல்முருகன், 'நாடோடிகள்', 'அசுரன்' போன்ற பல படங்களில் பாடியுள்ளார். இவரது பாடல்கள் பல புகழ்பெற்றவை. இவர் பாடி வெளியிட்ட கந்த சஷ்டிக் கவசம் இணையத்தில் வைரலானது. விஜய் டிவியில் வெளியாகும் பிக் பாஸ் மூலம் பலருக்கும் அறிமுகமானார். இன்று கோயில் விழாக்கள் என்றால் வேல்முருகனின் இசைக் கச்சேரி என்பது கூடுதல் சிறப்பாகக் கருதப்படும் அளவுக்கு ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
பாடகர் வேல்முருகன்

இவரின் புகழுக்கும் திறமைக்கும் மகுடம் வைக்கும் வகையில் மற்றுமொரு பெருமை தேடிவந்திருக்கிறது. அது 'கிராமிய இசை கலாநிதி' என்னும் பட்டத்தை தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் திருக்கரங்களால் சமீபத்தில் பெற்றது. மேலும் தருமபுரம் ஆதீனத்தின் ஆஸ்தான பாடகராகவும் வேல்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு சீர்காழி கோவிந்தராஜன், யேசுதாஸ் போன்ற ஜாம்பவான்கள் இந்தப் பதவியை அலங்கரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தியும் பண்பும் நிறைந்த பாடகர் வேல் முருகனிடம் அவரின் ஆன்மிகம் குறித்துக் கேட்டோம். அருகில் இருந்த முருகப் பெருமானின் படத்தை வணங்கிப் பேசத் தொடங்கினார்.

"எங்க ஊரு விருத்தாசலம் பக்கத்துல முதனை கிராமம். அதாவது திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு எங்க ஊர்ல இருந்துதான் முதல் நெய் போகும். அந்த நெய்யைக் கொப்பரையில் விட்ட பிறகுதான் பிற பக்தர்கள் மற்றும் கோயிலில் இருந்து கொண்டு வரும் நெய்யை விடுவார்கள். அதனாலேயே எங்க ஊருக்கு முதல் நெய்ன்னு பேர் ஆச்சு. அதுதான் முதனைன்னு இன்னைக்கு சொல்றோம்.

எங்க குலதெய்வம் செமை ஐயனார் கோயிலுக்கு எங்க அம்மா அப்பா செவ்வாய், வெள்ளி போவாங்க. அவங்க கிட்ட இருந்துதான் எனக்கு பக்தி வர ஆரம்பிச்சது. தவறாமக் கோயிலுக்குப் போவேன். எங்க பாட்டி என்கிட்ட அடிக்கடி சொல்லும். 'நீ தைப்பூசத்தன்னைக்கு வேலுக்கு முழுக்காட்டும்போது பிறந்தவன். அதான் உனக்கு வேல்முருகன்னு பேர் வச்சதே. அதனால உனக்கு முருகப்பெருமானோட அருள் எப்பவும் உண்டு'ன்னு சொல்லுவாங்க. எனவே எனக்கு முருகபக்தி இயல்பாவே இருக்கு. பிற சாமிகளைக் கும்பிட்டாலும் முருகன்னா தனி இஷ்டம்.

கனகம்பட்டி சித்தர்

எப்பவும் முருகப்பெருமானோட நாமம் என் நாவுல இருந்துக்கிட்டே இருக்கும். திருச்செந்தூர் முருகன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒண்ணு அவரை தரிசனம் பண்றதுக்காகப் போவேன். இல்லை அந்தப் பகுதில ஏதாவது நிகழ்ச்சி இருந்தாலும் தவறாமப் போயிருவேன்.

என்னோட குருநாதரா நான் நினைக்கிறது கனகம்பட்டி சித்தர் ஐயாவத்தான். பழநி போனாலே சித்தர் சந்நிதிக்குப்போகாம வரமாட்டேன். அங்க போனாலே ஒரு எனர்ஜி கிடைக்கும். அங்க அவர் ஜீவசமாதியைச் சுத்தி சூரியகாந்திப்பூ தோட்டம் இருக்கும். அந்த இடத்துக்குள்ள நுழைஞ்சதுமே அந்த வைப்ரேஷன் நமக்கு ஃபீல் ஆகும். ஒவ்வொரு தடவையும் அங்க போய்ட்டு வந்த பிறகு இரண்டே நாள்ல எனக்கு நல்ல செய்தி வந்துசேரும். வாழ்க்கைல பெரிய நல்ல மாற்றங்கள் தன்னால வரும். வாய்ப்புக் கிடைக்கிறவங்க, பழநிக்குப் போறவங்க முடிஞ்சா ஒரு முறை அங்க போய்ட்டு வாங்க. ரொம்ப சக்தி வாய்ந்த சந்நிதி.

மத்தபடி எல்லாக் கோயிலுக்கும் போவேன். எந்த ஊருக்குப் போனாலும் அங்க இருக்கிற கோயிலுக்குப் போறது என்னோட வழக்கம். விருத்தாசலத்துல பல கோயில்கள் உண்டு. அதுல ஒரு கோயில் கொளஞ்சியப்பர் கோயில். என்னோட திருமணம் கூட அங்கதான் நடந்தது. கொளஞ்சியப்பர் சுயம்பு மூர்த்தி. அங்க நம்ம கோரிக்கையை எழுதி சீட்டுக் கட்டிட்டா அந்தக் கோரிக்கை உடனே நிறைவேறிடும்னு நம்பிக்கை. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த கோயில். அங்கேயும் அடிக்கடிப்போவேன்.

விருத்தாசலத்தோட பெருமை விருத்தகிரீஸ்வரர் கோயில். அங்க இந்த மாதம்தான் கும்பாபிஷேகம் நடந்தது. அங்கே நான் பாடுற பாக்கியமும் கிடைச்சது. அந்த சந்தர்ப்பத்துலதான் தருமை ஆதினத்தின் கையால 'கிராமிய இசைக் கலாநிதி'ங்கிற பட்டம் கிடைச்சது. அது என் வாழ்க்கைல எனக்குக் கிடைச்ச ஆகப்பெரிய பாக்கியமா கருதுறேன். அத்தோடு தருமை ஆதினத்தின் ஆஸ்தானப் பாடகராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன். இது எல்லாமே குருவருளும் முருகப்பெருமானின் திருவருளும் இல்லாம நடக்குமா சொல்லுங்க?

பாடகர் வேல்முருகன்

அதுக்கு நன்றி சொல்லத்தான் ஒரு வருடத்தில் 5 முறையாவது மாலைபோட்டு விரதம் இருப்பேன். ஒருமுறை மாலை போட்டா கட்டாயம் 48 நாள் விரதம் தவறாம இருப்பேன். அதுல எந்த விதமான சமரசமும் கிடையாது. அந்த அளவுக்கு பக்தியோட இருப்பேன். இப்படி நான் என் ஆன்மிகம் பத்திச் சொல்ல பல விஷயங்கள் இருக்கு. குறிப்பா நான் திருப்பதி போய் வந்த அனுபவம் ஒன்றைப் பற்றி உங்களோட பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன். அது என்னென்னா..." என்று அந்த அனுபவத்தையும் தன் பிற ஆன்மிகப் பழக்க வழக்கங்கள் குறித்தும் சக்தி விகடன் வாசகர்களோடு பகிர்ந்துகொண்டார் பாடகர் வேல்முருகன். அவற்றை அறிந்துகொள்ளக் கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.



source https://www.vikatan.com/spiritual/celebrity/singer-velmurugan-talks-about-his-spiritual-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக