Ad

திங்கள், 21 பிப்ரவரி, 2022

ஜெயக்குமார் கைது: ரகசிய இடத்தில் நீண்ட விசாரணை; நள்ளிரவில் ஆஜர், நீதிமன்ற காவல்! -நடந்தது என்ன?!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே சில இடங்களில் பிரச்னைகள் வெடித்தன. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக-வினர் ராயபுரத்தில் கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி, திமுக நிர்வாகி ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் பகுதியில் 49-வது வார்டில் மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள், ஒருவரை ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி சுற்றிவளைத்தனர். இந்த தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர், அங்கிருந்த அதிமுக-வினரிடம் அந்த நபரை காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார். அதையடுத்து, அதிமுக-வினர் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர். அதிமுகவினர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்திலும் பரவியது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 40 பேர் மீது, தாக்குதலுக்கு உள்ளான நரேஷ் அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலைவெறி தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஜெயக்குமார்

தொடர்ந்து, நேற்றிரவு இரவு 8 மணிக்கு பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜெயக்குமார் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சுமார் 12 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில், ஜார்ஜ்டவுன் 15-வது நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முரளிகிருஷ்ணா முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது, முறையான சட்ட விதிகளை பின்பற்றி கைது செய்யப்படவில்லை என ஜெயக்குமார் தரப்பு வாதாட, அரசு தரப்பு வழக்கறிஞர்கள், அரை நிர்வாணப்படுத்தி தாக்குவது போன்ற வீடியோ இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தூண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து நீதிபதி, ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து உடனடியாக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். எனினும் அரசு தரப்பு, இன்று நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை காரணம் காட்டி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர், இதனையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/former-minister-jayakumar-arrest-and-presented-in-front-or-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக