நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:
தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக, நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்காகத் தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கண்டறியப்பட்ட 5,920 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த தேர்தல் பணியில் 1.33 லட்சம் அலுவலர்களும், பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் காவலர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 6 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 6 வரை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். மேலும், 5 மணிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டார்கள். காலை 6 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியிருந்தாலும் மதியம் 1 மணி வரை வாக்குப் பதிவு மிகவும் மந்தமாகவே காணப்பட்டது. சென்னை போன்ற மாநகரங்களில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வாக்காளர்கள் யாருமின்றி காலியாகவே காணப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட 200 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 5,794 மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்த வாக்குச்சாவடிகளில், 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு அதிகப்படியான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 27,800-க்கும் அதிகமான அதிகாரிகளும், 18,000 அதிகமான காவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னையில் வாக்குப்பதிவு தொடங்கிய காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையும் 3.96 விழுக்காடு வாக்கு மட்டுமே பதிவாகியிருந்தது. 11 மணி அளவில் 17.73 விழுக்காடு, 1 மணி நிலவரப்படி 23.42 விழுக்காடு வாக்கு மட்டுமே பதிவாகியிருந்தது. மாலை 6 மணிக்கு நிலவரப்படியும் வெறும் 43.65 விழுக்காடு வாக்கு மட்டுமே பதிவாகியிருந்தது. அதாவது மொத்தமுள்ள 61,71,112 வாக்காளர்களில், வெறும் 26,94,785 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு செலுத்தியிருந்தனர். குறைந்த அளவாக 133-வது வார்டில் 31.01 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தல் நிலவரம்:
தலைநகர் சென்னையில் மட்டும் 16 சட்டமன்றத் தொகுதிகளும், மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, இதற்கு முன்பு நடந்த பல்வேறு தேர்தல்களிலும் சென்னையில் குறைந்தளவு தான் வாக்குகள் பதிவாகியுள்ளன. உதாரணமாக, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும் பதிவான வாக்கு சதவிகிதம் 71.79. ஆனால், சென்னையில் 59.40 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. தமிழகத்திலேயே சென்னையில் தான் குறைந்தளவு வாக்குப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், தென் சென்னை தொகுதியிலும் 57.07 சதவிகிதமும், மத்திய சென்னையில் 58.98 சதவிகிதமும் வாக்குப் பதிவாகியிருந்தது. இந்த தேர்தலிலும் தமிழகத்தில் சென்னையில் தான் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியிருந்தது. மேலும், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சென்னையில் 60.47 சதவிகித வாக்குகள் தான் பதிவாகியிருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் 52.67 சதவிகிதமும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 52.67 சதவிகித வாக்குகளும் மட்டுமே பதிவாகியிருந்தது. குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகக் குறைந்த அளவாக 43.59 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
வாக்குப்பதிவு குறையக் காரணம் என்ன?
இந்தியத் தேர்தல் ஆணையமும் சரி, தமிழக தேர்தல் ஆணையமும் சரி, வாக்குப்பதிவை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும், சென்னையில் தொடர்ந்து வாக்குப் பதிவு குறைவதற்கான காரணத்தை அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பல்வேறு தரப்பினரிடம் பேசினோம். ``சென்னையைப் பொறுத்தவரை இம்முறை வழக்கத்தை விட பத்து முதல் பதினைந்து சதவிகிதம் வாக்குப் பதிவு குறைந்துள்ளது. கொரோனா பேரிடரில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் சென்ற பலரும் இன்னும் ஊர் திரும்பவில்லை. அவர்களால் ஒரு சிறியளவு வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது" என்று கூறினார்கள்.
மேலும், ``இந்த முறை சென்னை மாநகர வாக்காளர்கள் பலருக்கும் பூத் சிலிப் சென்றடையவில்லை. அதுமட்டுமின்றி, இந்த முறை வாக்காளர்கள் வாக்குச்சாவடியைக் கண்டுபிடிக்கப் படாத பாடுபட்டனர். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வாக்கு செலுத்தியவர்கள் சிலர். அலைந்து களைத்துப்போய் வீட்டிற்குத் திரும்பியவர்கள் பலர். அதிகாரிகளின் அலட்சியம் இந்த தேர்தலின் வாக்கு சதவிகிதம் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்கிறார்கள்.
முக்கியமாக, சென்னையில் வசிப்பவர்கள் சிலருக்கு இரண்டு ஒட்டுகள் இருக்கிறது. அதாவது, முன்னர் ஊரிலே வாக்கு இருக்கும். சென்னை வந்து செட்டில் ஆன பிறகு இங்கு வாக்கு உரிமை வாங்கி இருப்பார்கள். எனினும் ஊரியில் உள்ள பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சிலருக்கு நீக்கப்படாமல் இருக்கிறது. இப்படி இரண்டு வாக்குகள் வைத்திருப்பவர்களின் பெயர்களை நீக்கினால், கண்டிப்பாகச் சென்னையின் வாக்கு சதவிகிதம் சற்று அதிகரிக்கலாம். இப்போது இரண்டு ஓட்டுகள் இருக்குல் சிலர், வாக்குப்பதிவு நாளை விடுமுறையாக எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்று விடுக்கிறார்கள். அங்கு தங்களின் வாக்குகளை பதிவு செய்கிறார்கள். மேலும் சென்னையில் புதிதாக வாக்களிக்க உரிமை பெற்ற பலருக்கும் உள்ளுர் நபர்கள் அறிமுகம் இல்லை. அதனாலும் பெரிய அளவில் வாக்களிக்க வராமல் இருக்கிறார்கள். ஒருவேளை இது மறைமுக தேர்தலாக இல்லாமல், மேயரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருந்திருந்தால், வாக்குஇ சதவிகிதம் சற்று அதிகரித்திருக்கும்" என்று பேசினார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/election/what-is-the-reason-for-the-low-vote-turnout-in-chennai-as-usual
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக