போர் தீவிரம் அடைந்துள்ள உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்கள் எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இந்தியாவிற்கு வர துடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மாணவர்கள் சிலர் உக்ரைன் எல்லையில் சிக்கிக்கொண்டுள்ளனர். உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ரிஷப் கவுசிக் என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு ரேடியோ எலக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இவர் தன்னுடன் ஆசையாக வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்திய மாணவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு செல்வதால் ரிஷப்பும் இந்தியா செல்ல விரும்புகிறார். ஆனால் தன்னுடன் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து செல்லவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
நாய் இல்லாமல் வாருங்கள் என்று அதிகாரிகள் கேட்டதற்கு அப்படி வர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ``எனது வளர்ப்பு நாயை இந்தியாவுக்கு கொண்டு செல்ல என்ன ஆவணங்கள் தேவையோ சொல்லுங்கள், ஏற்பாடு செய்கிறேன்” என்று ரிஷப் கூறிக்கொண்டிருக்கிறார்.
இது குறித்து ரிஷப் கூறுகையில், ``எனது வளர்ப்பு நாயை என்னுடன் அழைத்து செல்ல அனைத்து ஆவணங்களையும் தயார் செய்கிறேன். ஆனால் புதிது புதிதாக ஆவணங்களை கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். ஆனால் அவர்கள் உதவ முன்வரவில்லை. டெல்லி விமான நிலைய அதிகாரி ஒருவருக்கு போன் செய்து பேசியபோது, அந்த அதிகாரி கண்டபடி திட்டிவிட்டு உதவி செய்ய மறுத்துவிட்டார்.
அரசு எனக்கு சட்டப்படி தேவையான ஆவணங்களை வழங்கி இருந்தால், நான் இந்நேரம் இந்தியாவில் இருந்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அதோடு தனது நாயுடன் சேர்த்து வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது கீவ்-ல் இருக்கும் பதுங்கு குழியில் ரிஷப் தனது வளர்ப்பு நாயுடன் பதுங்கி இருக்கிறார். அடிக்கடி வெடிகுண்டு சத்தம் கேட்பதால் தனது வளர்ப்பு நாய் அடிக்கடி அழுதுகொண்டே இருப்பதாக ரிஷப் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய அரசு எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ரிஷப்பிற்கு தனக்கு வளர்ப்பு நாய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/news/india/student-refusing-to-return-from-ukraine-without-a-pet-dog
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக