Ad

திங்கள், 21 பிப்ரவரி, 2022

பிரமாண்டம் காட்டி பெருமை சேர்த்த காவியம்! #MyVikatan

‘காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை’

இந்தப் பாடல் எக்காலத்திலும் பிரபலம். வசந்தம், வாலிப வயதினரால் மட்டுமல்ல; வயோதிகர்களாலும் விரும்பப்படும் பருவ காலம். 50 ஆண்டுகளுக்கு முந்தையதோ, இந்த ஆண்டு வருவதோ, எதுவாக இருந்தாலும் வசந்தம் நிரந்தரமானதுதானே! அந்த வசந்தத்தையே உள்ளே அடைத்து மாளிகையாக்கி விட்டால், அது எல்லாக் காலத்திலும் நிலைத்து நிற்கும்தானே? ஐம்பதாவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் ’வசந்த மாளிகை’ என்ற பிரமாண்ட காவியத்தைச் சற்றே நினைவு கூர்வோமே.

ஆனந்த், பணத்தில் புரளும், பகட்டான ஜமீன் குடும்ப இளைஞர். பாசத்திற்காக ஏங்கி, பாட்டிலில் அடைக்கலமானவர். விமான பணிப்பெண்ணான லதாவை ஒரு விமானப்பயணத்தில் சந்திக்கிறார். பெரும் குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் லதா, நேரங்காலம் பார்க்காமல் வானத்தில் பறப்பதை அவளுடைய தாய் விரும்பவில்லை. தாயின் ஆசையை நிறைவேற்றவேலை தேடிப்போக, அந்த ஆடம்பர ஓட்டலில் நேர்காணல் நடத்துவதாக அழைத்த தொழிலதிபர், லதாவைப் பலாத்காரம் செய்ய, பிறந்த நாளைக் கொண்டாடும் ஆனந்த் தன் கோட்டைக் கழற்றிக் கொடுத்து லதாவின் மானத்தையும், மான பங்கத்திலிருந்து லதாவையும் காப்பாற்றுகிறார். அடுத்த நாள் கோட்டைக் கொடுக்க வரும் லதாவைத் தன் செக்ரடரி ஆக்கிக் கொள்கிறார். மொடாக்குடிகாரர் என்று அறிந்த லதா வேலையை விட்டுவிட எத்தணிக்க, ஆனந்த்தை நன்கறிந்த வேலைக்காரரும், ஆனந்தின் தாயாரும் லதாவை வேண்டிக் கேட்டுக் கொள்ள, லதாபணியைத் தொடர்கிறார். குடிக்கக் கூடாது என்று தடுக்கும் செக்ரடரியை, கோபத்தில் பாட்டிலால் அடிக்க, அது லதாவின் நெற்றியில் ரத்தக்காயம் ஏற்படுத்த, எல்லாப் பாட்டில்களையும் ஆனந்த் நொறுக்கிவிட்டு, குடிக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆனந்த்தின் முழு மனத்தையும் லதா ஆக்கிரமித்துக்கொள்ள, லதாவுக்கென்று வசந்த மாளிகையை ஆனந்த் எழுப்ப, லதா விலகிப்போக, ஆனந்த் விஷம் சாப்பிடவென்று கதை நகர, படம் முழுமைக்கும் ஜனரஞ்சகத்திற்குக் குறைவிருக்காது. முதலில், ஆனந்த் சாவதாக இருந்த க்ளைமாக்ஸ், பின்னர் பிழைத்துக் கொள்வதாகத் திருத்தியமைக்கப்பட்டதாம்.

வசந்த மாளிகை

கதை, வசனம், பாடல்கள், பிரமாண்டக் காட்சிகள், நடிப்பு என்று தூள் கிளப்பிற்று வசந்த மாளிகை. ஓட்டலில் லதாவைக் கற்பழிக்க முயலும் தொழிலதிபரை அடித்துத் தடுத்து விட்டு, ’சரின்னு சொன்னா எந்தப் பெண்ணையும் விடக்கூடாது. வேண்டாம்னு சொன்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது’என்ற ஆனந்தின் கூற்றில்தான் எவ்வளவு ஆழமான கருத்து. இந்தக் கருத்துக்கு ஆண்கள் அனைவரும் செவி சாய்த்தால் பாலியல் குற்றங்களே பாரில் இல்லாது போய் விடுமல்லவா?எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களும் இதனை நடைமுறைப்படுத்தாமல் எப்படியெல்லாம் தலை குனிவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். நான் சிறுவனாக இருந்தபோது சினிமாவுக்கு, பக்கத்து ஊர்த் திருவிழாவுக்கென்று எனது மூத்த சகோதரர்களுடன் போகையில், அவர்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு வருவதை மௌனமாகக் கவனித்திருக்கிறேன். அங்கே, இங்கே என்று சுற்றி இறுதியாகப் பெண்கள் குறித்துப் பேசுகையில், மழைக்குக்கூடப் பள்ளிக் கூடத்தில் ஒதுங்காத சிலர், சில பெண்களின் குண நலன்களைக் கணித்தது, அப்படியே நடந்திருக்கிறது. இன்று வரை அந்த ஆச்சரியம் மனதை விட்டு அகன்றபாடில்லை. அந்த அறிவு, படித்த பலருக்கும் இப்போது இல்லாது போவது ஆச்சரியமே. அந்தக் கருத்தை வலியுறுத்தும் வசந்த மாளிகை வசனம், மானுடம் வாழும் வரை சிறப்புற்று வாழும். லதாவுக்காக வசந்த மாளிகையை நிர்மாணித்து விட்டு, அவளையழைத்து சுற்றிக்காட்டும் ஆனந்த், ’பார் லதா பார்!’என்று ஆரம்பித்து, ’இறைவன் மட்டும் எனக்குப் பறக்கும் சக்தியைப் படைத்திருந்தால் வானத்திலுள்ள நட்சத்திரங்களையெல்லாம் கொண்டு வந்து இங்கே தோரணம் கட்டித் தொங்க விட்டிருப்பேன். அந்த வட்ட நிலவைப் பறித்து வந்து இங்கு வண்ண விளக்காக்கி வைத்திருப்பேன். அந்தச் சக்தி எனக்கில்லையே…என்ன செய்வேன்!என்ன செய்வேன்?’என்ற சிவாஜியின் ஆற்றாமைக்குரல், அனைத்துப் பிறவிகளிலும் நம் கூடவே வரும். காதலின் ஆழத்தையும், காதலனின் தீவிரத்தையும் காட்டும் அந்தக்காட்சியை மறக்கவே முடியாது.

விஷத்தைச் சாப்பிட்டு விட்ட சிவாஜியைத் தேடி ஓடி வரும் வாணிஶ்ரீ ‘நான் வந்துட்டேன்’ என்க, ’நீ வந்துட்டே…நான் போய்க்கிட்டே இருக்கேன்’ என்பது க்லாசிக் வசனம் என்றால், ’லதா! நீ விஸ்கியைத்தானே குடிக்கக்கூடாதுன்னு சொன்னே. . விஷத்தைக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லலையே!’ என்பது, அதற்கும் மேலே. ’உன் வார்த்தைகளை எந்த நிலையிலும் நான் உதாசீனப்படுத்தவில்லை’என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் வேதம். என்னவோ தெரியவில்லை. மதுவுக்கும் மாதருக்கும் எப்பொழுதுமே ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் மாதர்களால் திருந்துவதும், விரும்பிய மாதர்கள் கிடைக்காத பட்சத்தில், ஆண்கள் மதுவுக்கு அடிமையாவதும் காலங்காலமாக நடந்து வரும் வழக்கமாகி விட்டது.

கதையும், வசனமும் சிறந்தவை என்றால் பாடல்கள் அதற்கும் மேலே. ’குடி மகனே…பெருங்குடி மகனே’ என்ற பாடலிலேயே நாயகனின் குணம் சித்தரிக்கப்பட்டு விடும். குடியும் குமரிகளுமே கொண்டாட்டமும், தனிமையின் உள்ளுணர்வுக்கு உரித்தான மருந்து என்றும் எண்ணம் கொண்ட சிவாஜி, பிறகு காதலுக்காகக் குடியை விடுவதும், காதலிக்காக விஷத்தை அருந்துவதும் இயல்பே. ’ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…பல எண்ணத்தில் நீந்துகிறேன்….

’சொர்க்கம் இருப்பது உண்மையென்றால் அது பக்கத்தில் நிற்கட்டுமே…’ என்ற பாட்டில், மேலும் கதா நாயகனின் மதுப்பழக்கம் வலியுறுத்தப்படும். ’கலை மகள் கைப் பொருளே உன்னைக் கவனிக்க ஆளில்லையோ? விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ!’என்ற பாடல் மிகப் பொருத்தமானது. ’வரும். ஆனா வராது!’ என்பது போல, ’எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போல் மனம் நொந்து வாழும் எத்தனையோ பேர், நிஜ வாழ்க்கையில் உண்மையில் அதிகம்-ஆனந்த்தைப் போல. ’மயக்கமென்ன… இந்த மௌனமென்ன… மணி மாளிகைதான் கண்ணே’ என்ற பாடலில் உற்சாகம்

கொப்பளிக்க, ’அன்னத்தைத் தொட்ட கைகளினாலே மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்’ என்று வாக்கு மூலம் கொடுப்பது அருமை. விலகிப் போகும் காதலியை நினைத்து ஏங்கும் போது, அவளை மறப்பதற்காகக் கூட குடிக்காமல் இருப்பதும், ’இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்பேன்…நினைத்து வாட ஒன்று…மறந்து வாழ ஒன்று! ‘ என்று பிரார்த்திப்பது அன்பின் ஆழத்தைப் பறை சாற்றும். ’உறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே’என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு என்றுமில்லை அழிவு. ஆனாலும் என்ன செய்வது?ஒரே உள்ளத்தோடுதானே உலகில் காலந்தள்ள வேண்டியிருக்கிறது? இறுதியாக, ‘யாருக்காக இது யாருக்காக?இந்த மாளிகை…வசந்த மாளிகை…காதல் ஓவியம் களைந்த மாளிகை…யாருக்காக?’ என்று நடிகர் திலகம் புலம்புகையில், எல்லோர் கண்களிலும் ஈரம்! உள்ளத்தில் உணர்ச்சிக் கசிவு!மலரைப் பறிக்கையில் சிலரின் கைகள் முள்ளைக் குத்திக் கொள்வது நடைமுறைதானே. உறவு என்றாலே அதில் பிரிவும் அடக்கம்தானே. ’எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவளென்று. பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரனென்று’ என்ற வரிகளை, அப்போது ஏகப்பட்ட இதழ்கள் உச்சரித்துப் புலம்பியதை நானறிவேன். அதுவுங்கூட அப்படத்தின் மாபெரும் வெற்றி எனக் கொள்ளலாமே.

வசந்த மாளிகை

ஆரம்பமே ஆகாய விமானத்தில் களைகட்ட, அலங்கார வீடு, ஆடம்பர ஹோட்டல் என்று பிரமாண்டத்திற்குப் படத்தில் குறைவிருக்காது. ஆனந்த் ஆகவே சிவாஜி வாழ, லதாவாகவே வாணிஶ்ரீ மாற, பாலாஜி, நாகேஷ் என்று பெரும்பட்டாளமே தங்கள் தங்கள் பாத்திரங்களில் ஜொலிக்க, வண்ணக் கலவையில் ரசிகர்களைத் திக்கு முக்காட வைத்த படம் வசந்த மாளிகை என்றால் அது மிகையில்லை.

1971ல் வெளிவந்த தெலுங்குப்படமான’பிரேம நகர்’என்பதன் தமிழ்ப்பதிப்பே இப்படம். ராமா நாயுடு தயாரிப்பில், கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளியான இப்படம், 750 நாட்கள் வரை ஓடியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் இது வெளியான சாந்தி, க்ரவுன் மற்றும் புவனேஸ்வரி ஆகிய மூன்று தியேட்டர்களிலும், தொடர்ந்து 271 காட்சிகள் ஹவுஸ் புல்லாம். அப்புறம், கலெக்‌ஷன் குறித்துப் பேசவா வேண்டும்?

கண்ணதாசனும், கே.வி.மகாதேவனும் பாடல்களின் புகழைப் பகிர்ந்து கொண்டனர். அண்டை நாடான இலங்கையில் 250 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது வசந்த மாளிகை.

‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி மகிழ்வோம்’ என்பார் முண்டாசுக் கவிஞர் பாரதியார். அதன் பொருளை முழுமையாக என்னை உணரச் செய்தது கோல்கொண்டா கோட்டையின் ஒலி-ஒளிக் காட்சிதான். ஐதராபாத்திலுள்ள தேசீய ஊரக வளர்ச்சி நிறுவனத்திற்கு அலுவலகப் பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அவர்கள் அந்த ஒலி-ஒளிக்காட்சிக்கு அழைத்துச் சென்றார்கள். அக்காட்சியில் இடம் பெற்ற பாடல்கள்தான், பாரதியின் வாக்கை மெய்யாக்கிக் காட்டி, எம்மை உணரச்செய்தது. தெலுங்கும், தமிழும் தென்னக மொழிகள்தானே. எனவேதான்

அவர்களாலும் ஆற்றல் வாய்ந்த திரைப்படங்களைத் தமிழிலும் தயாரித்து வழங்க முடிகிறது போலும். நன்றாகத் தமிழையறிந்த வாணிஶ்ரீ, சிகை அலங்காரத்திலும் வல்லவராம். விதம் விதமான கொண்டைகளால் அனைவரையும் கவரக் கூடியவராம்.

ம். . . எத்தனையோ திரைப்படங்கள் நல்ல கதைகளுடனும், கருத்துள்ள பாடல்களுடனும், காதலிக்காகவும், காதலனுக்காகவும் உயிரையும் தியாகம் செய்யும் உயரிய புனிதத்துடனும் வெளியாகி ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் ஒரு பக்கம், பிடிக்காமல் போன காதலியின் முகத்தில் திராவகம் வீசுவதும், வெட்டிக் கொல்வதும், சித்ரவதை செய்வதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த முரண்பாட்டைக் களைய நாம் முயல்வோம். காதல்தானே வாழ்க்கை. காதல்தானே மகிழ்ச்சி. காதலால்தானே அனைத்தும். காதலை வாழ வைப்போமே!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி


source https://www.vikatan.com/arts/nostalgia/vasantha-maligai-nostalgia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக