ஐ.பி.எல் மெகா ஏலம் பெங்களூருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் சில இளம் வீரர்கள் எதிர்பாராத வகையில் ஆச்சர்யமளிக்கும் வகையில் அதிக தொகைக்கு அணிகளால் வாங்கப்பட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக பஞ்சாபை சேர்ந்த இளம் வீரரான அபிஷேக் சர்மா 6.5 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
21 வயதாகும் அபிஷேக் சர்மா Uncapped All Rounders எனும் பட்டியலில் ஏலத்திற்கு வந்திருந்தார். அவரின் அடிப்படை விலை 20 லட்சம் மட்டுமே. இவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே கடும்போட்டி நிலவியது. 5.25 கோடி வரை தாக்குப்பிடித்த பஞ்சாப் அணி அத்தோடு பின்வாங்கியது. 5.5 கோடிக்கு அபிஷேக்கை இழுத்துவிடலாம் என சன்ரைசர்ஸ் நினைக்க, திடீரென குஜராத் டைட்டன்ஸ் உள்ளே புகுந்து இன்னும் விலையை ஏற்றியது. ஆனாலும், சன்ரைசர்ஸ் அசரவில்லை. தொடர்ந்து முயன்றது. கடைசியில் சன்ரைசர்ஸே வென்றது.
அபிஷேக் தனது அடிப்படை விலையான 20 லட்சத்திலிருந்து ஏறக்குறைய 30 மடங்கிற்கும் அதிகமாக 6.5 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். டேவிட் வார்னரே 6.25 கோடிக்குதான் ஏலம் போயிருக்கும் நிலையில், பெரிதாக அறியப்படாத அபிஷேக் சர்மாவிற்கு இவ்வளவு மவுசு ஏன்? சன்ரைசர்ஸ் ஏன் விடாப்பிடியாக அவரை எடுப்பதில் உறுதியாக இருந்தது?
அபிஷேக் சர்மா பஞ்சாபைச் சேர்ந்தவர். இவருடைய அப்பாவும் ஒரு கிரிக்கெட்டரே. அப்பாவை போன்றே அபிஷேக் சர்மாவும் ஒரு இடதுகை ஸ்பின்னராகவே கிரிக்கெட் ஆடத் தொடங்கியிருக்கிறார். யுவராஜ் சிங்கின் ரசிகரான இவர், பின்னாட்களில் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி ஒரு ஆல்ரவுண்டராக கலக்கத் தொடங்கினார். 2018 U19 உலகக்கோப்பையில் ஆடிய இந்திய அணியில் அபிஷேக் சர்மாவும் இடம்பெற்றிருந்தார். அந்தத் தொடரில் 5 விக்கெட்டுகளை எடுத்ததோடு மிடில் ஆர்டரில் சில முக்கியமான இன்னிங்ஸ்களையும் ஆடியிருந்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி ஒன்றில் வெறும் 8 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருப்பார். வங்கதேசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தபோது நிலைத்து நின்று ஆடி ஓர் அரைசதத்தையும் அடித்திருப்பார். அந்த உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருக்கும்.
அந்த அணியில் ஆடிய ப்ரித்திவி ஷா, சுப்மன் கில், நாகர்கோட்டி எனப் பல வீரர்களும் அந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் பல அணிகளாலும் வாங்கப்பட்டனர். அபிஷேக் சர்மாவையும் டெல்லி அணி 55 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியிருந்தது.
அந்த 2018 ஐ.பி.எல் சீசனில் அபிஷேக் சர்மாவிற்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். ஆனால், தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் அவற்றில் பெர்ஃபார்ம் செய்திருந்தார்.
மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடிய அபிஷேக் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 190 க்கும் மேல் இருந்தது. பெங்களூருவிற்கு எதிரான ஒரு போட்டியில் 19 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அசத்தியிருப்பார்.
இந்த ஒரு இன்னிங்ஸ் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த சீசன் முடிந்த பிறகு டெல்லியிடம் தவானை டிரேடிங் செய்துவிட்டு அவருக்கு பதிலாக விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, சபாஷ் நதீம் ஆகியோரை சன்ரைசர்ஸ் வாங்கியிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக அபிஷேக் சர்மா சன்ரைசர்ஸ் அணிக்காகவே ஆடி வருகிறார். அத்தனை போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கிடைக்கின்ற ஒரு சில போட்டிகளில் அதிரடி சரவெடியாக வெடித்திருப்பார். கடைசியாக அபிஷேக் சர்மாவை சன்ரைசர்ஸ் அணி ஓப்பனராகவெல்லாம் ஆக்கியிருந்தது. மும்பைக்கு எதிரான ஒரு போட்டியில் 16 பந்துகளில் 33 ரன்களை அடித்திருப்பார்.
யுவராஜின் ரசிகரான அபிஷேக்கிற்கு யுவராஜே பல சமயங்களில் ஆலோசனை கூறி பயிற்சிகளை வழங்கியிருக்கிறார். அபிஷேக் அநாயாசமாக அடிக்கும் சில சிக்சர்களை பார்க்கும்போது யுவராஜின் சாயல் அப்படியே இருக்கும்.
ஐ.பி.எல் ஐ தாண்டி உள்ளூர் போட்டிகளிலும் கடந்த 2021-ம் ஆண்டில் சிறப்பாக ஆடியிருக்கிறார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் மத்தியபிரதேசத்திற்கு எதிராக 42 பந்துகளில் சதமடித்திருப்பார். உள்ளூர் போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது சதம் இதுவாகும். டிசம்பரில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் சர்வீஸஸிற்கு எதிராக 117 பந்துகளில் 169 ரன்களை அடித்து மிரட்டியிருந்தார். சையத் முஷ்தாக் அலி தொடரிலுமே அதிரடியாக ஆடியிருந்தார். புதுச்சேரிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 54 ரன்களை எடுத்திருப்பார். இந்தத் தொடரில் பேட்டிங்கோடு சேர்த்து இடது கை ஸ்பின்னராகவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராகவும் ஜொலித்திருப்பார்.
ஏற்கெனவே சன்ரைசர்ஸ் அணிக்கு ஆடியிருப்பதாலும் சமீபத்தில் நடந்த உள்ளூர் தொடர்களில் நன்றாக பெர்ஃபார்ம் செய்திருப்பதாலுமே சன்ரைசர்ஸ் அணி இவரை குறிவைத்தது. ஒரு ஆல்ரவுண்டராக பேட்டிங் பௌலிங் என இரண்டு பாக்ஸ்களிலும் டிக் அடிப்பதோடு மட்டுமல்லாமல் மேலிருந்து கீழ் வரை எங்கேயும் பேட்டிங் ஆடக்கூடியவர். வெளிநாட்டு வீரர்களால் நிரம்பியிருந்த டாப் ஆர்டர் மற்றும் உடைசலான மிடில் ஆர்டரை கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணிக்கு இப்படி ஒரு இந்திய வீரர் தேவைப்பட்டார். அணியின் தேவையை பொருட்டு எந்த ஆர்டரிலும் இவரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இவையெல்லாமும் சேர்ந்துதான் அபிஷேக் சர்மாவிற்கு சன்ரைசர்ஸை அத்தனை கோடி வரை தயக்கமின்றி செல்ல வைத்தது.
கோடீஸ்வரன் ஆகியிருக்கும் அபிஷேக்கிற்கு வாழ்த்துகள்!
source https://sports.vikatan.com/cricket/ipl-auction-2022-abhishek-sharma-the-youngster-gone-for-a-whopping-six-and-half-crore-to-srh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக