பசியின்மை என்பது வயிற்றில் பூச்சிகள் இருப்பதன் அறிகுறியா? பூச்சி மாத்திரை வாங்கிச் சாப்பிடலாமா? குழந்தைகளுக்கு கொடுக்கும் அதே டீவேர்மிங் மாத்திரைகளை பெரியவர்களும் எடுத்துக்கொள்ளலாமா? எத்தனை நாள்களுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? இந்த மாத்திரை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படுமா?
- முகுந்தன் (இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த பொதுமருத்துவர் ஆதித்யன் குகன்.
``பசியின்மை என்பது வயிற்றில் பூச்சிகள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அதற்கு பூச்சி மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒரே மாதிரியான மாத்திரைதான் என்றாலும் அளவு வேறுபடும். அதற்கேற்ப மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கொரு முறை எடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக பூச்சி மாத்திரையை இரவில் எடுத்துக்கொள்ளலாம். அப்படியே மென்று தின்னக்கூடிய மாத்திரையாகக் கிடைக்கிறது. பூச்சி மாத்திரை எடுத்துக்கொள்வதால் வயிற்றுப்போக்கெல்லாம் ஏற்படாது. ஒரு சிலர் ஒன்றுக்கு இரண்டு முறை மலம் கழிக்க நேரலாம், அவ்வளவுதான்.
பூச்சி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் பசியின்மை சரியாவது மட்டுமன்றி, `அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா' எனப்படும் ரத்தச்சோகையும் குணமாகும். உடலில் இரும்புச்சத்தைச் சேரவிடாமல் தடுப்பவை இந்தப் பூச்சிகள். அவற்றுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது ஹீமோகுளோபின் அளவு சரியாகத் தக்கவைக்கப்படும். கல்லீரல் ஆரோக்கியமும் மேம்படும்.
வெறும் கால்களில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி நடப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வரும். அதேபோல வீட்டில் ஒரே கழிவறையைப் பயன்படுத்துவோருக்கும் இந்தப் பிரச்னை வரலாம் என்பதால் இவர்களும் ஆறு மாதங்களுக்கொரு முறை பூச்சி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/can-old-age-people-take-deworming-tablets
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக