``கற்பனையில் கோட்டை கட்டிக் கொண்டு பா.ஜ.க-விற்கு டப்பிங் பேசும் பழனிசாமியின் பொறுப்பற்ற ஆணவப் பேச்சுக்களுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்படும்.'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரப்புரைக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ``சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மண்ணில், கண்ணகி நீதிகேட்டு முழங்கிய மண்ணில், கலைஞர் நீதிகேட்டு நெடும்பயணம் தொடங்கிய மண்ணில், என்னுடைய பொதுவாழ்வுப் பயணத்தில் இளைஞரணிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட மண்ணில் கலந்துகொண்டு, உங்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றவர், மதுரையின் வளர்ச்சிக்காக திமுக ஆட்சியில் அப்போதும் இப்போதும் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பேசியவர், அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
''அதிமுக ஆட்சியில் மதுரையை லண்டன் ஆக்கப்போகிறோம், சிங்கப்பூராக்கப் போகிறோம் என்று அப்போதைய அமைச்சர்கள் சிலர் தினமும் பேட்டி கொடுத்தார்கள். ஆனால், ஏற்கெனவே இருந்த மதுரையை இன்னும் கொஞ்சம் சீரழித்து விட்டுப்போனார்கள். அதிமுக ஆட்சியில், ஊராட்சி, நகராட்சியில் நிர்வாகம் இல்லை. ஏன், மாநகராட்சியிலும் நிர்வாகம் இல்லை. இதே மதுரை மாநகராட்சியின் ஊழல் நாற்றம் ஊர் பூராவும் வீசியது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் எப்படி சென்னையை வெள்ளத்தில் மூழ்க வைத்தார்களோ, அதுபோல ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையை ஊழலில் மூழ்கடித்தார்கள். மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி நடைபாதை அமைப்பதில், வைகை ஆற்றுக் கரை அமைப்பதில் ஊழல் செய்தார்கள். ஸ்மார்ட் சிட்டிக்காகப் பள்ளம் தோண்டினால் கிடைக்கிற மண்ணையும் விற்றார்கள். இதையெல்லாம் கண்டுபிடித்துவிடக் கூடாதென்று திட்டத்தைக் கண்காணிக்கும் சிறப்பு அதிகாரியைப் போடாமல் இருந்தார்கள். அதற்கென்று ஆலோசனைக் குழுவைக் கூட நியமிக்காமல் இருந்தார்கள். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அதற்காக எவ்வளவோ போராடிப் பார்த்தார். அதெல்லாம் மதுரை மக்களுக்குத் தெரியும்.
நம் நிதியமைச்சர் கூட ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்த்துவிட்டு பதவியேற்றதும் எப்படி எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என்று பேட்டி கொடுத்திருக்கிறார். நீங்களும் அதைப் படித்திருப்பீர்கள். ஓ.பி.எஸ் - பழனிசாமி வேண்டுமென்றால் மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழலை மறந்திருக்கலாம். ஆனால், மதுரை மக்கள் மறக்கவில்லை.
ஏற்கனவே சென்னை ஸ்மார்ட் சிட்டி ஊழல்களை விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறேன். அதில், மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழலும் சேர்த்து விசாரிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதுபோல் மாநகராட்சிகள் நிர்வாகத்தை எல்லாம் ஊழல் மயமாக்கிய அதிமுகவுக்கு, நகர்ப்புறத் தேர்தலில் நிற்கும் யோக்கியதை இல்லை என்பதுதான் உண்மை. மீடியா மைக்கை நீட்டினாலே எதையாவது காமெடியாகச் சொல்வார்கள். அது மட்டும்தான் அ.தி.மு.க.வினருக்குத் தெரியும்.
Also Read: ஸ்டாலின் Vs பழனிசாமி: `டெம்ப்ளேட் பிரசாரம்... மாவட்ட விவகாரங்கள்’ - பிரசார களத்தில் முந்துவது யார்?!
தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கிறது என்று புதிதாக ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் அமாவாசைகள் யார் என்று தெரிந்துதான் தமிழக மக்கள் அமைதிப்படையாக வாக்களித்து, அவர்களை இன்றைக்கு புலம்ப விட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. தற்போது அஸ்தமனத்தில் இருக்கிறது.
2024 முதல் `நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல்’ வரப்போகிறது என்று ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. இவருடைய ஞானதிருஷ்டிக்கு மட்டும்தான் இதெல்லாம் தெரியும்போல. கற்பனையில் கோட்டை கட்டிக்கொண்டு, பாஜகவிற்கு டப்பிங் பேசும் பழனிசாமி யாரை மிரட்டுகிறார்? மிசாவையே பார்த்த ஸ்டாலினை உங்களால் மிரட்ட முடியுமா? கற்பனையில்கூட அவ்வாறு கனவு காணாதீர்கள். கூவத்தூரில் தவழ்ந்து போய் ஆட்சியைப் பிடித்தவர் என்று நினைக்கிறீர்களா?
Also Read: ``பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு... ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா?!" - ஓ.பி.எஸ் காட்டம்
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றும், சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியையும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்த கட்சிதான் அதிமுக. அடுத்து நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுத்தமாகக் காணாமல் போன கட்சி.
இப்படி பழனிசாமி - பன்னீர்செல்வம் தலைமையில் முடங்கிப்போன கட்சி முடக்கத்தப் பற்றி பேசலாமா? இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்திக்கப்போகிறது. அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் தெரியாது அடிமைத்தனம்தான் தெரியும். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அமாவாசை அரசியல்தான்.
ஆட்சியை விட்டு இறங்கி ஒன்பது மாதம் ஆனதால் இவர்கள் ஆட்சியில் நடந்த கோமாளிக் கூத்துகளை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து, திமுக ஆட்சி சட்டம் ஒழுங்கு பற்றிப் பாடம் எடுக்கிறார் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்று கொஞ்சம் நினைவூட்டவா?''என்று இன்னும் பல விஷயங்களை குறிப்பிட்டு பேசினார் மு.க.ஸ்டாலின்.
திமுக அரசுக்கு நாள் குறிக்கும் வகையிலும், சட்டசபையை ஆளுநர் மூலம் முடக்கிவிடுவோம் என்ற தொனியிலும் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்தையும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/politics/mk-stalin-slams-admk-in-madurai-election-campaign
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக