Ad

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

`ஒரே ஆண்டில் 8.70 லட்சம் பேர் மரணம்!' - தமிழ்நாட்டில் குறைந்துவரும் பிறப்பு - இறப்பு இடைவெளி!

தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டில், பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளி மிக மிகக் குறைந்திருப்பதாகத் தரவுகள் வெளியாகியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், தமிழக வரலாற்றிலேயே 2021-ம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 8.70 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளி என்பது அதிகமாக இருக்கும். ஆனால் 2021-ல் இந்த இடைவெளி என்பது வெறும் 3.69 சதவிகிதமே இருக்கிறது.

இறப்பு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் இறப்பைவிடப் பிறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமென்பதால், மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகும். 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 6.24 கோடி மக்கள் வாழ்ந்துவந்தனர். அதுவே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, 7.21 கோடியாக உயர்ந்தது. 2021-ம் ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும், 2021-ல் தமிழக மக்கள்தொகை 8 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டிருக்கும் பிறப்பு, இறப்பு இடைவெளி விகிதம் பற்றிய தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

தமிழ்நாட்டில், கடந்த நான்கு ஆண்டுகளில் பிறப்புக்கும், இறப்புக்குமான இடைவெளி!

2018: பிறப்பு - 8,73,361 | இறப்பு - 5,49,259 | இடைவெளி விகிதம் - 59%
2019: பிறப்பு - 9,45,122 | இறப்பு - 6,37,564 | இடைவெளி விகிதம் - 48.23%
2020: பிறப்பு - 9,37,959 | இறப்பு - 6,90,004 | இடைவெளி விகிதம் - 35.93%
2021: பிறப்பு - 9,02,367 | இறப்பு - 8,70,192 | இடைவெளி விகிதம் - 3.69%

தமிழகத்தில் 2021-ம் ஆண்டில், அதிகபட்சமாக 8,70,192 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது 2018-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 58.4 சதவிகிதமும், 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 36.5 சதவிகிதமும், 2020-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 26.1 சதவிகிதமும் அதிகம்.

2021-ல் உயிரிழப்புகள் ஒருபுறம் அதிகரித்திருக்க, பிறப்புகளும் குறைந்திருக்கின்றன. கடந்த ஆண்டு 9,02,367 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இது 2019-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 4.52 சதவிகிதமும், 2020-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 3.79 சதவிகிதமும் குறைவாக இருக்கிறது!



source https://www.vikatan.com/news/tamilnadu/8-70-lakh-people-died-on-tamilnadu-in-2021-says-government-reports

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக