Ad

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

`பிராய்லர் கோழி புரட்சி'க்கு காரணமான அமெரிக்க பெண்மணி; ஒற்றை பூஜ்யத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்!

இன்று சிக்கன் என்றழைக்கப்படும் பிராய்லர் கோழி இறைச்சி நீக்கமற எல்லா ஊர்களிலும் இருக்கிறது. குக்கிராமங்களிலும் கறிக்கோழிக் கடைகளைக் காண முடிகிறது. நகரங்களில் கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், பிரியாணி, பெப்பர் சிக்கன் என்று பல வடிவங்களில் கோழி இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் கறிக்கோழி உற்பத்தியில் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்தக் கறிக்கோழி இறைச்சி மூலம் பல லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதற்கு முதன்முதலில் வித்திட்டவர் ஒரு பெண்மணி என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆக வேண்டும்.

இதற்கு அச்சாரமிட்டது ஓர் அமெரிக்கப் பெண்மணி. அவர் பெயர் சிசிலி லாங் ஸ்டீலே. அவர் அமெரிக்காவின் டீலாவர் மாகாணத்திலுள்ள ஓசியானா நகரத்தைச் சார்ந்தவர். 1923-ம் வருடம் சிசிலி ஸ்டீலே தன் வீட்டின் முட்டைத்தேவைக்காக 50 கோழிக் குஞ்சுகளைப் பண்ணையாளர் ஒருவரிடம் ஆர்டர் செய்திருந்தார். பின்னர், ஒருநாள் கோழிக் குஞ்சுகள் லாரியில் கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டன.

சிசிலி லாங் ஸ்டீலே

ஆனால் 50 குஞ்சுகள் அல்ல, 500 குஞ்சுகள். லாரி ஓட்டுநரிடம் விசாரித்தபோது ஆர்டர் ரசீதில் 500 என்று குறிப்பிடப் பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். சிசிலி ஸ்டீலேவுக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு குஞ்சுகளையும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். இன்று உள்ளது போல் அன்று கைப்பேசி தொழில்நுட்பம் இல்லாததால் பண்ணையாளருடன் உடனடியாகத் தொடர்புகொண்டு முறையிடவும் முடியவில்லை வேறு வழியில்லாமல் 500 கோழிக் குஞ்சுகளையும் வளர்க்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார் சிசிலி ஸ்டீலே.

ஒரு சிறிய கொட்டகையை அமைத்து அதில் 500 கோழிக் குஞ்சுகளையும் வளர்க்க ஆரம்பித்தார். 18-வது வாரத்தில் இறப்பு போக அவரிடம் 387 இளங்கோழிகள் உயிருடன் இருந்தன. இத்தனைக் கோழிகளையும் மேலும் வளர்த்தால் அவற்றில் இருந்து கிடைக்கும் முட்டையை விற்பதில் சிரமமிருக்கும் என எண்ணி தேவைக்கு அதிகமாக உள்ள வெடக்கோழிகளையும் இளஞ்சேவல்களையும் இறைச்சிக்காக விற்க முடிவெடுத்தார்.

அதன்படி, 1 பவுண்ட் (0.453 கிலோ) எடையுள்ள இளங்கோழியை 62 சென்ட்க்கு (இன்றைய மதிப்பில் 46 ரூபாய்) அருகிலிருந்த உணவகங்களுக்கு விற்றார். இதில் சிசிலி ஸ்டீலேவுக்குச் சொல்லத்தக்க அளவில் லாபம் கிடைத்தது. ஆகவே, அடுத்த வருடம் ஆர்டரை 1,000 கோழி குஞ்சுகளாகக் கூட்டினார். லாபத்தை ருசி கொண்ட சிசிலி ஸ்டீலே 1926-ம் வருடம் ஆர்டரை 10 மடங்காக உயர்த்தி 10,000 குஞ்சுகளை வரவழைத்து வளர்க்கத் தொடங்கினார்.

அந்த இறைச்சிக்கோழி பண்ணையத்தில் அவர் கணவர் டேவிட் வில்மர் ஸ்டீலேவும் இணைந்துக்கொண்டார். சிசிலி ஸ்டீலேவின் வெற்றி மெள்ள மெள்ள அந்த மாகாணம் முழுவதும் பரவியது. 1928-ம் ஆண்டு இறைச்சிக்கோழி உற்பத்தியில் 500 பேர் அம்மாகாணத்தில் ஈடுபட்டிருந்தார்கள் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இறைச்சிக் கோழி வளர்ப்பு மெள்ள மெள்ள பிரபலமடைந்து வந்த 1940-களின் மத்தியில்தான் அந்தப் போட்டி நடந்தேறியது. பின்னோக்கி பார்க்கும்போது இறைச்சிக்கோழி வரலாற்றில் அப்போட்டி ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததென்றால் அது மிகையில்லை. 1945-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற `நாளைக்கான இறைச்சிக்கோழித் திட்டம்' எனும் மூன்றாண்டு போட்டியே அது. அது தாய்க்கோழிப் பண்னையாளர்களுக்கான போட்டியாகும். போட்டியின் நோக்கம் இறைச்சிக் கோழிக்கான லட்சணங்களை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தும் வளர்ப்புக் குஞ்சுகளை உருவாக்குவதேயாகும். அந்தப் போட்டியானது மண்டல அளவில், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் என மூன்று நிலைகளில் நடத்தப்பெற்ற ஒன்றாகும்.

Broiler Chicken

இப்படித்தான் முதல் நாடளாவிய போட்டி 1948-ம் ஆண்டு டீலாவார் மாகாணத்தின் ஜார்ஜ்டவுன் எனும் இடத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலிடத்தை கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த வெண்ட்ரஸ் கோழி இனவிருத்திப் பண்ணையும், இரண்டாமிடத்தை கன்னெக்டிக்கட் மாகாணத்தைச் சேர்ந்த ஆர்பர் ஏக்கர்ஸ் பண்ணையும் பிடித்தன. முன்னதின் வெற்றிக்கு கலிஃபோர்னியா கார்னிஷ் - நியூ ஹாம்ப்ஷையர் கலப்பினமும், பின்னதின் வெற்றிக்கு வெள்ளை பிளைமவுத் இராக் வகையுமே காரணமாகும். இந்தத் தொடர் போட்டிக்கான நிதியை நல்கிய ஏ.பி. ஃபுட் ஸ்டோர்ஸ் எனும் அமெரிக்க நிறுவனத்தை இங்கு வாஞ்சையோடு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். `நாளைக்கான இறைச்சிக் கோழி திட்டம்' எனும் இப்போட்டி தாய்க்கோழிப் பண்ணையாளர் களிடையே வளர்ப்புக்குஞ்சு உற்பத்தி சார்ந்து ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் தாய்க்கோழிப் பண்ணையாளர்கள் பலர் பங்கு பெற்று பல புதிய கலப்பின வளர்ப்புக்குஞ்சு ரகங்களைப் பல்வேறு பெயர்களில் சந்தைக்கு அறிமுகப்படுத்தினர்.

வெண்ட்ரஸ் கிராஸ், இண்டியன் கிராஸ், ஒயிட் அமெரிக்கன்ஸ், ஐசென்பார்ஸ் போன்றவை குறிப்பிடத்தகுந்த சில பெயர்களாகும். இந்தப் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் கோழியினங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட இன விருத்தி முறைகள் போன்ற கம்பெனி ரகசியங்கள் ஆகும். 1950-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட மொத்த இறைச்சிக் கோழியில் 67 சதவிகிதம் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களின் ரகங்களைச் சேர்ந்தவையென ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. 1950-ம் ஆண்டுக்குப் பிந்தையக் காலகட்டத்தில் இறைச்சிக்கோழி வளர்ப்பு அலையலையாக உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. முதலில் ஐரோப்பிய நாடுகளில் பரவ ஆரம்பித்தன. பிறகு, மற்ற நாடுகளிலும் பரவ ஆரம்பித்தன. இதனால் வளர்ப்புக் குஞ்சுகளுக்கான கிராக்கி கிடுகிடுவென உயர்ந்தது.

இப்படி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக அதி தீவிர இனவிருத்தி முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கோழிகளின் மரபணுத் தொகுப்பு வெகுவாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மரபணுத் தொகுப்பில் ஏற்படுத்தப்பட்ட மேம்பாடுதான் 1957-ம் ஆண்டில் 6-வது வாரத்தில் 0.586 கிலோவாக இருந்த (நாட்டுக்) கோழியை 2014-ம் ஆண்டில் அதே 6-வது வாரத்தில் 2.2 கிலோவாக மாறியுள்ளது. அதே காலகட்டத்தில் கோழியின் தீவன மாற்றுத் திறனும் 2.8 கிலோவிலிருந்து 1.6 கிலோவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இறைச்சிக்கோழி உருவாக்க வரலாற்றில் கோழியின் மரபணுவியல் மற்றும் இனவிருத்தியல் துறைக்கு மட்டுமல்ல ஊட்டச்சத்தியல், நோய்த்தடுப்பியல், மேலாண்மையியல் உள்ளிட்ட துறைகளுக்கும் மிகப்பெரிய பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பி.வி.ராவ்

ஏவியேஜன், டைசன் மற்றும் ஹப்பார்ட் போன்றவை இறைச்சிக்கோழி உற்பத்தியில் உலக அளவில் கோலோச்சும் முதல் மூன்று தாய்க்கோழி இனவிருத்திக் கம்பெனிகள் ஆகும். இந்தியாவில் வெங்கடேஷ்வரா, சுகுணா போன்ற கம்பெனிகள் குறிப்பிடத் தகுந்தவை. இந்தியாவில் பிராய்லர் கோழி வளர்ப்புக்காக வித்திட்டவர் பி.வி.ராவ் ஆவார். ஒரு சராசரி குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்து பிராய்லர் கோழி வளர்ப்பை 1970-களில் அறிமுகப்படுத்தி இன்று இந்தியா முழுவதும் வியாபித்து நிற்பதற்குக் காரணமாக இருந்து வருகிறார். இவரின் பெயரில் கோழி வளர்ப்பு சம்பந்தமாக ஓர் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கல்லூரி புனேயில் செயல்பட்டு வருகிறது.

அது சரி 50 குஞ்சுகளுக்கு ஆர்டர் கொடுத்த சிசிலி ஸ்டீலேவுக்கு எப்படி 500 குஞ்சுகள் அனுப்பப்பட்டன? துப்புத்துலக்கியபோது கிடைத்த செய்தி அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆம் ஆர்டரை எடுத்த கிளார்க் ஒருவர் 50 என்பதற்குப் பதிலாக ஒரு சுழியத்தைத் தவறுதலாகச் சேர்த்து 500 எனக் குறித்ததே ஆகும். இன்றைய இறைச்சிக்கோழி தொழில்துறைக்கு அச்சாரமிட்டது தவறாகச் சேர்க்கப்பட்ட அந்த ஒற்றைச் சுழியம்தான் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? ஆனால், அது தான் உண்மை. ஒற்றைச் சுழியத்தில் உண்டானதுதான் இன்றைய இமாலய இறைச்சிக்கோழி உற்பத்தித்துறை. அதைப் பரவலாக்கிய பெருமை அந்த சிசிலி என்ற பெண்மணியையே சேரும்.

முனைவர் கி.ஜெகதீசன்

எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழும். `நாட்டுக்கோழி மெதுவாக வளரும்போது இறைச்சிக்கோழி மட்டும் எப்படி குபுகுபுவென ஊதிப்பெருக்கிறது? இயற்கைக்கு எதிராக ஊசி போட்டு வளர்ப்பதால்தான் இது சாத்தியப்படுகிறது. வளரிளம் பெண்கள் விரைவாகப் பருவமடைந்து விடுவதற்கும், ஆண்கள் பருமனாகி விடுவதற்கும், திருமணமானவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கும் இந்த நவீன இறைச்சிக்கோழிதான் காரணம் என்றெல்லாம்’ வாட்ஸ்அப் வதந்திகள் பரவி வருகின்றன.

இவற்றில் எதுவுமே முழு உண்மையில்லை. பிராய்லர் கோழிகள் விரைவில் வளர்வதற்குக் காரணம் அதன் ரகத்தேர்வுதான். பல ஆண்டுகளாக நன்றாக உடல் பெருக்கும் ரகங்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டவையே இன்றைய இறைச்சிக் கோழிகள். இந்தியாவின் புரதச்சத்து பற்றாக்குறையைத் தீர்ப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. ஒரு கிலோ ஆட்டிறைச்சி 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாமானியனால் இது வாங்க முடியாத விலை. அந்தக் குறையைத் தீர்க்க கிலோ 200 ரூபாயில் பிராய்லர் கோழிகள் கிடைக்கின்றன. சாமானிய மக்களின் புரதச் சத்து பற்றாக்குறையைப் போக்குவதில் பெரும் பங்காற்றி வருகிறது.

பிராய்லர் கோழிகளை உலகுக்கு அறிமுகப்படுத்திய அமெரிக்காவில் மாட்டிறைச்சிதான் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது என்பதுதான் ஆச்சர்யம். பிராய்லர் கோழியின் வளர்ப்புக் காலம் முன்பெல்லாம் 12 வாரங்களாக (120 நாள்கள்) இருந்தது. பின்னர் எட்டு, ஏழு எனக் குறைக்கப்பட்டு இன்று ஆறு வாரங்களாக (42 நாள்கள்) உள்ளது. அதி தீவிர அறிவியல் தொழில்நுட்பங்களால் எதிர் காலத்தில் இது நான்கு வாரங்களாகக் குறைக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

- முனைவர் கி.ஜெகதீசன்,
உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப்
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
பிள்ளையார்பட்டி அஞ்சல், தஞ்சாவூர்.



source https://www.vikatan.com/living-things/animals/how-did-a-mistake-during-an-order-paved-way-for-poultry-farming-evolution

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக