கோயில்களிலுள்ள தலவிருட்ச வழிபாடு என்பது நம்நாட்டின் தொன்மையான இயற்கை சார்ந்த வழிபாடுகளில் ஒன்று. ஆலயங்களில் இறையுருக்களுக்கு இணையாக அந்தந்தத் தலங்களுக்கு உரிய விருட்சங்களும் வழிபடப்பெறுவது தொன் மரபாகவே உள்ளது. அவ்வகையில் மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலம் எனும் தலத்தில் ஸ்ரீ அம்ருத முகிழாம்பிகா ஸமேத ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள 'உத்தாலமரம்' தெய்விகத் தன்மை உடைய விருட்சமாகப் போற்றப்படுகிறது.
'உத்தாலம்' என்பது 'ஆத்தி' எனச் சொல்லப்பெறும் தாவரக் குடும்பத்தினைச் சார்ந்த மரம். இம்மரம் ஏராளமான மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. குறு மரங்களாகப் படர்ந்து வளரும் தன்மை கொண்டது.
'கார்டியா சைனென்ஸிஸ்' (cordia sinensis) - (போரோஜினேசியே) எனும் தாவரவியல் பெயர் உடைய இத்தாவரம் ஆங்கிலத்தில் லாங் லீப் கார்டியா (long leaf cordia or long leaf saucer berry) என்றழைக்கப்பெறுகிறது. இதன் வெண்ணிற பூக்களை உட்கொள்வதால் சரும வியாதிகள் பறந்தோடி விடும் என்பது சித்தர் வாக்கு. மஞ்சளும் ஆரஞ்சு நிறமும் கலந்த நிறமுடைய பழங்கள் உண்பதற்கு சுவை மிகுந்தவை. உடலைத் தேற்றி பலம் அளிக்க வல்லவை. இதன் இலைகளும் பூக்களும் பூஜிப்பதற்கு உரியவை. தேவருலகினருக்கு உரிய விருட்சங்களில் இதுவும் ஒன்று.
இதனுடைய மலர்களைத் தொடர்ந்து உட்கொள்வதால் கடும் தோல் நோய்களும் அகலும் என்பது நம்பிக்கை.
வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட (கோடை) பருவத்தில் மட்டுமே மலர்களை உதிர்க்கும் தன்மை கொண்டது இம்மரம்.
தர்ம நெறிக்கு மட்டுமே கட்டுப்படுகின்ற சத்திய மரம் இது என்கின்றனர். இத்தலத்தில் முற்காலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரேயொரு காய் மட்டும் காய்த்து வந்துள்ளது இந்த உத்தால மரம். தற்போது காய்ப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
இதன் இலைப்பற்று படை, சொறி, சிரங்கு போன்ற சரும வியாதிகளுக்கு அருமருந்து என்கின்றனர். இத்தலத்து பதுமதீர்த்தத்தில் நீராடி வழிபட்ட பின்னரே சுந்தரமூர்த்தி நாயனார் தனது தோல்நோயைப் போக்கிக் கொண்ட வரலாறும் பேசப்படுகின்றது.
புராணகாலத்தில், உத்தால மரங்கள் நிறைந்த காடாக இருந்தமையால் 'உத்தால வனம்' என்று சொல்லப்பெற்றது இப்பகுதி. காலப்போக்கில் 'உத்தாலம்' எனும் பெயர் திரிந்து 'குத்தாலம்' என ஆயிற்று என்பர். இறையின் கட்டளைப்படி, பசுவுரு நீங்கிய பின்னர் பரத முனிவரின் மகளாகப் பிறந்த உமையம்மை காவிரிக் கரையில், உத்தால மரத்தின் அடியில் சிவபூஜை செய்தவண்ணம் தவமியற்ற, குறித்த காலத்தில் அம்மை பூஜித்த லிங்கத்திலிருந்து இறைவன் ஆவிர்பவிக்கிறார். அம்பிகையை காந்தர்வ விவாகம் புரிகிறார்.
ஆயினும் விண்ணவரும், மண்ணவரும் அறியத் திருமணம் செய்தருள வேண்டும் என்ற பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளை ஏற்று, குறிப்பிட்ட நாளில் திருமணக்கோலம் காட்டுவதாக அருளியபின் பெருமான் அந்தர்த்யானம் ஆகிவிடுகிறார். ஆயினும் சிவபெருமானைத் தொடர்ந்து நிழலாக வந்த அவரது திருக்குடை உத்தால மரமாகவும், அவரின் திருவடிகளைத் தாங்கியபடி வந்த வேதமானது திருப்பாதரக்ஷைகளாகவும், பெருமான் அந்தர்த்யானம் ஆகும்போது அவருடன் மீண்டும் செல்லாமல் இத்தலத்திலேயே தங்கிவிட்டன என்பது புராண வரலாறு. உலகினை உய்விக்க வல்லதோர் தெய்வத்திருமணம் நடைபெற்றதற்கு அடையாளமாக, இறையின் திருவுளப்படி தங்கிய இத்திருச்சின்னங்களை இன்றும் இக்கோயிலில் முன்பகுதியிலேயே தரிசிக்கலாம். அதுபோன்றே, கார்த்திகை மாதத்துக் கடைவெள்ளியில் இத்தலத்து உத்தால மரத்தினை வழிபடுவோர் திருமண தோஷங்கள் நீங்கப் பெறுவதும், சத்புத்திர ப்ராப்தி பெறுவதும் இன்றளவும் கண்கூடு.
அத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்தத் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுரம் ஆதீனம் ஏற்பாடு செய்து வருகிறார். 1960-ம் வருடம் கும்பாபிஷேகம் கண்ட 62 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது எதிர்வரும் 8.5.2022 அன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்பது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும்.
source https://www.vikatan.com/spiritual/temples/a-temple-that-is-believed-to-cure-skin-ailments-kuthalam-sri-uthavedeeswarar-temple-kumbabhishekam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக