Ad

சனி, 26 பிப்ரவரி, 2022

முளைத்த வெந்தய சாலட் | பொட்டுக்கடலை ஓட்ஸ் லட்டு | கீரை தரிவால் - ஹெல்தி வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்களுக்கு ரத்தச்சோகை பிரச்னை இருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் அடக்கம். 'நல்லாதான் சாப்பிடறோம்...' எனச் சொல்லிக்கொள்பவர்களுக்கும் ரத்தச்சோகை இருக்கலாம். எப்படிச் சாப்பிடுகிறீர்கள் என்பதைவிடவும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம்.

இந்த வார வீக் எண்டுக்கு ரத்தச்சோகையை விரட்டும், அயர்ன்ரிச் உணவுகளை முயற்சி செய்யலாமே...

தேவையானவை:

முளைகட்டிய வெந்தயம் - 100 கிராம்
குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
வறுத்த எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - சிறிதளவு (விரும்பினால்)
வறுத்த வேர்க்கடலை - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
வறுத்த ஆளி விதை - சிறிதளவு
வறுத்த மோர் மிளகாய் - ஒன்று
எலுமிச்சைச்சாறு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

முளைத்த வெந்தய சாலட்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முளைத்த வெந்தயத்துடன் குடமிளகாய், வறுத்த எள், தேங்காய்த்துருவல், வறுத்த வேர்க்கடலை, வறுத்த ஆளி விதை, உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, மோர் மிளகாயைத் தாளித்து சாலட்டுடன் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறலாம்.

குறிப்பு: வெந்தயம் மற்றும் ஆளி விதையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.

தேவையானவை:

பொட்டுக்கடலை, ஓட்ஸ் - தலா அரை கப்
துருவிய வெல்லம் - ஒரு கப்
நெய் - தேவையான அளவு
கொப்பரைத்துருவல் - சிறிதளவு
முந்திரி, பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
(பொடியாக நறுக்கவும்)
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை

பொட்டுக்கடலை ஓட்ஸ் லட்டு

செய்முறை:

வெறும் வாணலியில் ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அரைத்துப் பொடித்து எடுக்கவும்.

வாணலியில் நெய்விட்டு உருக்கி முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள் சேர்த்து வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதனுடன் கொப்பரைத்துருவல், ஏலக்காய்த்தூள், அரைத்த ஓட்ஸ், பொட்டுக்கடலைப் பொடி சேர்த்துக் கலக்கவும். மாவைச் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: பொட்டுக்கடலை, ஓட்ஸில் இரும்புச்சத்து உள்ளது.

தேவையானவை:

கம்பு அவல் - 2 கப்
பிரியாணி இலை, மராட்டி மொக்கு - தலா ஒன்று
ஏலக்காய், கிராம்பு - தலா 2
அன்னாசிப்பூ - ஒன்று
பட்டை - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 100 கிராம் (தோலுரித்தது)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
வேகவைத்த கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம்
சிறிய சோயா உருண்டைகள் - 20 கிராம்
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

அரைக்க:

பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
வதக்கிய புதினா இலைகள் - அரை கப்
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு
தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்

புதினா கம்பு அவல் பிரியாணி

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். தண்ணீரில் கம்பு அவலை போட்டு அலசி உடனே பிழிந்தெடுக்கவும். சோயா உருண்டைகளைச் சூடான தண்ணீரில் போட்டு பிழிந்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, மராட்டி மொக்கு, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பட்டை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கொண்டைக்கடலை, சோயா அரைத்த விழுதைச் சேர்க்கவும். நல்ல வாசனை வந்த பிறகு அவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு கலந்தால் பிரியாணி ரெடி.

குறிப்பு: கொண்டைக்கடலை, புதினா, சோயா, கம்பில் இரும்புச்சத்து உள்ளது.

தேவையானவை:

முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்
அரைக்கீரை - அரை கட்டு
(ஆய்ந்து அலசி பொடியாக நறுக்கவும்)
சீரகம் - அரை டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
உரித்த பூண்டு - 5 பல்
மஞ்சள்தூள், சர்க்கரை, கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

கீரை தரிவால்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். குக்கரில் பாசிப்பயறு, கீரை சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் தக்காளி, வேகவைத்த கீரை, பயறு கலவை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிச் சுவைக்கலாம்.



source https://www.vikatan.com/food/recipes/fenugreek-salad-peanut-oats-laddu-mint-millet-poha-biriyani-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக