Ad

புதன், 23 பிப்ரவரி, 2022

இலங்கை: பறிபோகும் 13வது திருத்தச்சட்டம்! -மோடி, ஸ்டாலினுக்கு அவசரக் கடிதம் எழுதிய ஈழத்தமிழ் கட்சிகள்

` 13-வது திருத்தச் சட்டம்! இலங்கைத் தமிழர் இனப்பிரச்னையை தீர்க்கும் முயற்சியாக, 1987-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில் உருவானது. சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட சட்டத்தை, தற்போது முழுவதுமாக நடைமுறைப் படுத்தவேண்டும், இந்தியா தலையிட்டு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் எனக்கோரி பிரதமர் மோடிக்கும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஈழத் தமிழ்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதியிருக்கின்றனர்.'

இந்தியா - இலங்கை

கடந்த ஜனவரி 18-ம் தேதி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்மந்தன் தலைமையில், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஏழு தமிழ்க்கட்சித் தலைவர்கள், இலங்கைக்கான இந்தியத்தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து, 13-வது திருத்தத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்த, இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தவேண்டும் என இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை ஒப்படைத்தனர். இந்த விவகாரம் இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமல்லாமல், சக தமிழ் கட்சிகளுக்குமிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். ``இந்தியாவிடம் தமிழ்க் கட்சியினர் முன்வைத்திருக்கும் கோரிக்கையானது, கடந்த 70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைக் கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை தீர்வாக அவர்கள் ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்துகிறது எனவும், இந்தியாவின் கைக்குள்ளேயும், சிங்கள தலைவர்களின் வழிநடத்தலிலும் செயல்படும் அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்!" எனவும் த.தே.ம.க செயலாளரும், எம்.பி.யுமான செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டினார்.

இலங்கைக்கான இந்தியத்தூதர் கோபால் பாக்லேவை சந்தித்த தமிழ்க்கட்சித் தலைவர்கள்

அதேபோல அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், ``13-வது திருத்தச் சட்டத்தில், நிலம், நிதி, காவல்துறை என எந்த அதிகாரமும் மாகாண சபைக்கு கிடையாது. ஜனதிபதியால் மாகாணத்திற்கு நியமிக்கப்படும் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் உள்ளன. மேலும், மத்திய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி, மாகணங்களுக்கு இருக்கிற அதிகாரங்களையும் பறித்துக்கொள்ள முடியும்!

கஜேந்திரக்குமார் பொன்னம்பலம்

சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், மாகாணசபை அதிகாரத்தின்மூலம், முதலமைச்சருக்கான இருக்கையை வாங்குவதற்கும், தேநீர் குடிப்பதற்குமான செலவை ஈடுசெய்வதற்குக்கூட, ஆளுநரின் அனுமதியை பெறவேண்டிய நிலையிலேயே முதலமைச்சருக்கான அதிகாரங்கள் இருக்கும். ஆகையால், 13-வது திருத்தம் ஒருபோதும் தமிழர்களின் இனப்பிரச்னைக்கு தீர்வாக இருக்க முடியாது!" என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13-ஐ எதிர்த்து போராட்டம்

இந்த நிலையில், கடந்த ஜனவரி 30-ம் தேதி, யாழ்ப்பாணத்தில், ``13-ஐ நிராகரிப்போம், ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வாக வடக்கு கிழக்கு தாயகப்பகுதிகளை இணைக்கவும், அங்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சி(சமஸ்டி) அமைப்பை ஏற்படுத்தவும் அரசை வலியுறுத்துவோம்" எனக்கோரி மிகப்பெரிய அளவிலான பேரணி-போராட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டம், மோடிக்கு கடிதம் எழுதிய தமிழ்க்கட்சிகளிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தப் போராட்டம் குறித்து பேசிய வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான சி.வி.விக்னேஸ்வரன், `13வது திருத்தம், தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடையாது! அரசியலமைப்பில் தற்போதுள்ள சட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் கூறினோம். ஆனால், நாங்கள் முழுமையாக ஆதரவு தெரிவித்தது போன்ற மாயையை உருவாக்கும் நோக்கில் த.தே.ம.மு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்' என குற்றம்சாட்டினார்.

இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

அதேபோல, தமிழ் ஈழ விடுதலை இயக்க செயலாளரும், எம்.பி.யுமான கோவிந்தன் கருணாகரன், ``தனித்தமிழ் ஈழம் கேட்டுப் போராடிய நாங்கள், 13-வது திருத்தத்தை இறுதித் தீர்வாக எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேசமயம், 2009 இறுதி யுத்தத்திற்குப்பிறகு தமிழர்களின் தாயகப்பகுதிகளான வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம், பௌத்த விகாரங்கள் அமைத்தல், எல்லைக்குறைப்பு, ராணுவக் கட்டுப்பாடு என நம்மை முற்றாக சிதைக்கும் வேலையில் சிங்கள அரசாங்கம் வேகமாக ஈடுபட்டுவருவதை எண்ணிப்பார்க்க வேண்டும். கோத்தபய ராஜபக்சே செல்லும் இடமெல்லாம் `இந்த நாடு, பௌத்த நாடு அவர்களுக்கே எனது முன்னுரிமை' என்கிறார்.

13 வது சட்ட திருத்தம்

இன்னும் 3 மாதத்தில் இலங்கையில் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வரவிருக்கின்றது. அதில், நிச்சயம் தமிழர்களுக்கான தீர்வு வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, 13-வது திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற உரிமைகளையாவது தக்கவைத்துக்கொள்ளமுடியும் என நினைக்கிறோம். ஆனால், எங்களை இந்திய முகர்வர்களாக த.தே.ம முன்னணியினர் சித்தரிக்கிறார்கள், அப்படியென்றால் அவர்கள் சீன முகவர்களா?" என கேள்வி எழுப்பினார்.

தமிழ் கட்சியினரின் இந்த செயல்பாட்டைக் கண்டிக்கும் வகையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ``இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில், அந்நியநாடுகள் தலையிடத் தேவையில்லை, நமது நாட்டுக்குள் இருக்கும் கட்டமைப்பு முறையிலேயே தீர்வு காண முயற்சிக்க வேண்டும்" என எச்சரிக்கையாகக் கேட்டுக்கொண்டார்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையைத் திக்குமுக்காட வைத்திருக்கும் இந்த விவகாரம் குறித்து ஈழ எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நிலாந்தனிடம் பேசினோம். ``இலங்கை அரசாங்கம் இன்னும் சில மாதங்களில் புதிய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டுவர இருக்கிறது. அந்த புதிய அரசியலமைப்பில், 13வது சட்டதிருத்தம் அகற்றப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில்தான், குறிப்பிட்ட அந்த ஏழு தமிழ்க்கட்சிளும் இணைந்து இந்தியாவுக்கு அப்படியான கோரிக்கையை வைத்தன. ஆனால், இந்த 13வது திருத்தம், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மாகாண கவுன்சில் என்றும், அது இந்தியாவில் இருப்பதுபோன்ற அரைசமஸ்டி (மாநில கூட்டாட்சி) அளவுக்குக்கூட உரிமை இல்லை என்றும்கூறி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் எதிர்ப்புதெரிவித்து போராடுகின்றனர்.

நிலாந்தன்

மேலும், ஏழு தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே 13-வது திருத்தத்தை புதிய அரசியலமைப்பில் இலங்கை அரசாங்கம் இடம்பெறச்செய்தாலும், தமிழ்க்கட்சிகளின் ஆதரவு இருக்கிறது என்றபெயரில் தமிழர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய சட்டங்களையும் அந்த அரசியலமைப்பில் உள்ளடக்கும் எனவும் எதிர்ப்பாளர்கள் சந்தேகிக்கின்றனர். இப்படியாக தமிழ்க்கட்சிகளுக்குள் இந்தியா பக்கம் சென்றும், செல்லாமலும் இருவேறுபோக்கு நிலவுகிறது.

உண்மையில், தமிழர் பிரச்னைக்கு உரியத் தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனக்கருதினால், தமிழ்க்கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் உள்முரண்பாடுகளைக் களைந்து, மீண்டும் இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொண்டுவருவதற்கு ஒருகொள்கை முடிவை எடுக்கவேண்டும். ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அனைத்துலக சமூகம் என்பது இந்தியாதான். இந்தியாவை மீறி எந்தவொரு வெளிச்சக்தியும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கைத்தீவில் தலையிட முன்வராது. ஆகவே, அது 13-வது திருத்தமாக இருந்தாலும் சரி, கூட்டாட்சி, பொதுவாக்கெடுப்பு என எதுவாகஇருந்தாலும் சரி, அரசற்ற தரப்பாக இருக்கும் ஈழத்தமிழர்கள் இந்தியாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

இந்த நிலையில், 7 ஈழத்தமிழ்க் கட்சியினர் கடிதம் மூலம் முன்வைத்த கோரிக்கைக்கு, இந்திய அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில், தற்போது, ``13வது திருத்த சட்டத்தை அமல்படுத்த, இலங்கையை வலியுறுத்துமாறு, இந்திய அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும்" எனக்கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ்த் தேசிய கட்சியினர் கடிதம் எழுதியிருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

அந்தக் கடிதத்தில், ``இலங்கையில் உள்நாட்டு போர் முடிவு பெற்று 12 ஆண்டுகளான பிறகும் தமிழா் பகுதிகளில் பொருளாதார வளா்ச்சி ஏற்படவில்லை. போர் குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் குறித்த விவகாரம் அவல நிலையில் உள்ளது. இலங்கைத் தமிழா்கள் மீண்டும் அபாயகரமான சூழலில் உள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலத்தையும், வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழா்கள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகின்றனர்.

பிதமர் மோடி

இலங்கையின் மாகாண கவுன்சில் முறையை முழுவதும் அழிக்க வேண்டும் என்று ஆளும் இலங்கை மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான இலங்கை அரசியலமைப்பு சட்டத் திருத்த வரைவு மசோதா தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இலங்கைக்கான இந்திய வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. அதன்படி, 1987-ஆம் ஆண்டு இந்திய பிரதமா் ராஜீவ் காந்தி, இலங்கை அதிபா் ஜெயவா்த்தன மேற்கொண்ட 13-ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இந்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்!" எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sri-lankan-tamil-party-leaders-letter-to-pm-modi-and-cm-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக