நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே, கூட்டணி நட்பில் விமர்சனக் கல்லெறிந்து கீறலை ஏற்படுத்திவிட்டது தமிழக பா.ஜ.க. பதிலுக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்தும் 'பா.ஜ.க-வுக்கு ஓட்டு கேட்டுச் செல்ல நாங்கள் தயார் இல்லை' என தலைவர்கள் சிலர் முறுக்குக்காட்ட.... கூட்டணியே சிதறிப்போய்விட்டது.
பரபரப்பான இந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் விந்தியாவிடம் பேசினேன்....
''அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து ரெய்டு செல்கிறதே?''
''வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க-வுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தி அதன் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தி.மு.க அரசு, இந்த ரெய்டுகளை நடத்திவருகிறது; இதுதான் உண்மை. ஆனாலும்கூட நாங்கள் பயந்துவிடவில்லை. வழக்கை தைரியமாக எதிர்கொண்டுதான் வருகிறோம்.''
''பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களில் தரமற்றப் பொருட்களை விநியோகித்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என முதல்வரே முன்வந்து அறிவித்தது பாராட்டுக்குரியதுதானே?''
''பொங்கல் பரிசுத் தொகுப்பில் கலப்படம் என்பது புகைப்படம், வீடியோ ஆதாரங்களோடு வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஆனாலும்கூட 'கலப்படம் நடந்திருப்பதாக தெரியவந்தால், கருப்புப் பட்டியலில் சேர்ப்போம்' என்றுதான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், எங்கேனும் ஒரு பல்பு ப்யூஸாகியிருந்தால்கூட, 'எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும்', 'அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்கவேண்டும்' என்றெல்லாம் ஸ்டாலின் பேசிவந்தார்.
அவரைப்போல் நாங்கள் கேட்கவில்லை... பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்றுள்ள ஊழலுக்குப் பொறுப்பேற்று குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சராவது ராஜினாமா செய்வாரா.... செய்யமாட்டார்! எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கருப்புப் பட்டியலில் முதல்வர் சேர்க்கிறாரோ இல்லையோ... விரைவிலேயே தி.மு.க-வை கருப்புப் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் மக்கள்!''
''கூட்டுறவுத்துறையில் உள்ள அ.தி.மு.க ஆதரவாளர்கள்தான், 'தி.மு.க அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தவேண்டும்' என்ற நோக்கில், குளறுபடிகள் செய்துவருகின்றனர் என்று அமைச்சர் சக்கரபாணி கூறுகிறாரே?''
''இப்போதைய தி.மு.க அரசு, பல்வேறு இடங்களில் கூட்டுறவு சங்கங்களை உடைத்துவிட்டது. ஆனாலும்கூட துறையில் எப்போதுமே அரசு அதிகாரிகள்தான் பணி செய்துவருவார்கள். அந்த அதிகாரிகள், பொருட்களை எங்கே கொள்முதல் செய்கிறார்கள், எந்தத் தரத்தில் கொள்முதல் செய்கிறார்கள் என்பதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு தி.மு.க-வினருக்குத்தான் உண்டு.
ஆக, அதிகாரிகள் தவறு செய்கிறார்கள் என்றால், அதைக் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள இவர்கள் கண்காணிப்புப் பணியில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். ஆக, தி.மு.க தவறு செய்துவிட்டது என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்!
பத்து வருடங்களாக எதிர்க்கட்சியாகவே இருந்தவர்கள்தான் என்றாலும்கூட இந்த எட்டு மாதத்திலாவது ஆட்சி செய்யக் கற்றுக்கொண்டிருக்க வேண்டாமா தி.மு.க-வினர்?''
''அ.தி.மு.க உட்கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் முடிவுற்றபிறகும் வெற்றிபெற்ற நிர்வாகிகள் பட்டியலை அறிவிக்காததற்கு உள்கட்சித் தகராறுகள்தான் காரணம் என்கிறார்களே?''
''அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உள்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் எல்லாம் தயாராகிவிட்டது. விரைவில் நேரம் பார்த்து அறிவிப்பை வெளியிடுவோம். மற்றபடி கட்சிக்குள் எந்தக் குளறுபடியும் இல்லை.''
''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் அ.தி.மு.க போன்ற பெரிய கட்சியைவிடவும் ம.நீ.ம., தே.மு.தி.க போன்ற சிறிய கட்சிகள் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனவே?''
''பிக்பாஸ் சீஸன் முடிந்துவிட்டதால் கமல்ஹாசனுக்குப் போரடிக்கிறதுபோல... எனவே, ம.நீ.ம வேட்பாளர் பட்டியலை முதல் ஆளாக அறிவித்துவிட்டார். தே.மு.தி.க-வுக்கு எந்தவிதப் பொறுப்பும் இல்லை. ஏதோ அரசியல் செய்யவேண்டுமே என்பதற்காக அவர்கள் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களோடெல்லாம் எங்களை ஒப்பிடாதீர்கள்.
அ.தி.மு.க என்பது பிரதான எதிர்க்கட்சி. ஒட்டுமொத்த தமிழக மக்களும் எங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். நாங்களும் அந்த பொறுப்பை உணர்ந்திருக்கிறோம். எனவே, எங்கள் கட்சியில் எல்லா வேலைகளுமே ஒழுங்குமுறையோடுதான் நடைபெறும்.''
'' 'எதிரிகளோடு கைகோத்து, பா.ம.க-வைத் தோற்கடித்துவிட்டது அ.தி.மு.க. இது வெங்காய கூட்டணி' என்றெல்லாம் மருத்துவர் ராமதாஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளாரே?''
''இப்படியொரு வருத்தம் அ.தி.மு.க மீது அவர்களுக்கு இருந்திருந்தால், தேர்தல் நடந்தபோதே அதை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கவேண்டும் அல்லது தேர்தல் முடிவு வெளிவந்த உடனேயேகூட இதுபற்றி பேசியிருக்க வேண்டும். இப்போது வந்து இதுபற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கக்கூடாது.''
''அ.தி.மு.க-வில் மகளிர் அணியினருக்கு மரியாதை இல்லை என முக்கிய பெண் நிர்வாகிகள் சிலர் கட்சியை விட்டு வெளியேறிவந்த சூழலில், 'பாலியல் தொல்லை'கள் குறித்தான ஆடியோவும் அண்மையில் வெளியாகியிருக்கிறதே?''
''50 லட்சம் உறுப்பினர்களைக்கொண்ட அ.தி.மு.க மகளிர் அணியில் யாரோ ஐந்துபேர் கட்சி மாறிவிட்டார்கள் என்பதற்காக அ.தி.மு.க பலம் இழந்துவிட்டது என்றோ, கட்சியில் மகளிருக்கு மரியாதை இல்லை என்றோ சொல்லிவிட முடியாது. தி.மு.க-வில் வேண்டுமானால், மகளிருக்கு உரிய மரியாதை இல்லாமல் இருக்கலாம்.
2021 தேர்தலுக்காக நான் திருநெல்வேலி பிரசாரத்துக்குச் செல்லும்போதுகூட, என்னுடன் விஜிலா சத்யானந்த், புவனேஸ்வரி இருவரும் பிரசாரத்துக்கு வந்தனர். ஆனால், தேர்தலில் அ.தி.மு.க தோற்றுவிட்டது என்பதால், இவர்கள் எல்லாம் தி.மு.க-வுக்கு கட்சி மாறிவிட்டார்கள்... அவ்வளவுதான். மற்றபடி நீங்கள் சொல்வது மாதிரியான ஆடியோ எதுவும் என் கவனத்துக்கு வரவில்லை.''
''அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிவந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தானே 'பொள்ளாச்சியல் பாலியல் வன்கொடுமை' அரங்கேறியதுதானே?''
''நம்மையெல்லாம் தலைகுனிய வைக்கிற அளவுக்கு மோசமான சம்பவம் பொள்ளாச்சியில் நடந்துவிட்டதுதான். ஆனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசியலாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், அ.தி.மு.க அரசுதான் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. அதனால்தான் சட்டமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தைத் தாண்டியும் கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.''
''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50% இடங்களை மகளிருக்கு ஒதுக்கி அறிவித்திருப்பது தி.மு.க-வின் சாதனைதானே?''
''ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்துத் தொகுதிகளிலும் ஆளுங்கட்சியினர்தான் வெற்றிபெற வேண்டும் என தி.மு.க நினைக்கிறது. எனவே, அ.தி.மு.க-வில் ஆண் வேட்பாளர்கள் எங்கெல்லாம் வலுவான செல்வாக்கோடு இருக்கிறார்களோ அந்த இடங்களை எல்லாம் பெண் வேட்பாளர்களுக்கான தொகுதியாக மாற்றி அறிவித்திருக்கிறார்கள். எனவே, இது தி.மு.க-வின் அரசியல் வியூகம்தானே தவிர, பெண்கள் மீதான மரியாதையோ அக்கறையோ கிடையாது. நீங்கள் சொல்வதுபோல், உண்மையிலேயே பெண்கள் மீதான அக்கறையில்தான் இந்த இட ஒதுக்கீட்டை தி.மு.க அறிவித்திருக்கிறது என்றால், அதை நானும் வரவேற்கிறேன்.''
''அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமையினால் எந்தவொரு முடிவையும் உடனடியாக - உறுதியாக அறிவிக்கமுடியாமல் சிக்கல் நீடிப்பதாக சொல்கிறார்களே?''
''இரட்டைத் தலைமையில் என்ன தவறு இருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. காமராஜர் - ராஜாஜி, கருணாநிதி - அன்பழகன், ராகுல் - சோனியா, மோடி - அமித் ஷா என எல்லாக் கட்சிகளிலுமே இரண்டு பவர் சென்டர்ஸ் இருந்தன... இருக்கின்றன. இன்றைய தி.மு.க-விலோ மகன் ஒரு தலைமை, மருமகன் ஒரு தலைமை, கிச்சன் கேபினட் ஒரு தலைமை என திரும்புகிற பக்கமெல்லாம் தலைமைகள் இருக்கின்றன. மாறாக, காங்கிரஸ் கட்சியிலோ தலைமையே இல்லை... இந்தச் சூழலில், அ.தி.மு.க தொண்டர்களாகிய நாங்கள் அனைவருமே எங்களது இரட்டைத்தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டோம். இதில் அடுத்தவர்களுக்கு என்ன பிரச்னை என்று புரியவில்லை!''
Also Read: ஜோதிமணியை முன்வைத்து உச்சம் தொடும் களேபரம் - என்ன நடக்கிறது கரூர் காங்கிரஸில்?!
''அண்மையில்கூட, சசிகலாவை கட்சியில் இணைத்துக்கொள்வது குறித்து ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இடையே வெளிப்படையாக கருத்து மோதல் நிகழ்ந்ததே?''
''இதை நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டேன். கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பி.எஸ் பேசிய பேச்சை, சசிகலாவோடு ஒப்பிட்டு ஊடகத்தினர்தான் கேள்வி எழுப்பிவிட்டனர்.
ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது வேண்டுமென்றால், எதிர்க்கட்சித் தலைவர், ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் தனித்தனியே அறிக்கைகள் வெளியிடுவார்களே தவிர.... அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ முடிவுகளில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஒருமித்த கருத்தோடுதான் கையெழுத்திடுகின்றனர்''
''சசிகலாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தவர்களே இன்று, சசிகலாவை துரோகி என்று குற்றம் சாட்டுவது எந்தவகையில் நியாயம்?''
''ஜெயலலிதா மறைந்த காலகட்டத்தில், நாங்கள் அனைவருமே மிகப்பெரிய கஷ்டத்திலும் சோகத்திலும் இருந்தோம். அன்றைய சூழலில், எங்கே செல்வது, எந்தத் திசையில் செல்வது என்பதெல்லாம் தெரியாமல், தாயை இழந்த பிள்ளையாக தவித்து நின்றோம். திக்கு தெரியாத அந்த நேரத்தில், சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டார்கள்தான். ஆனால், இன்றைக்கு அது தவறு என்பதை அவர்களே உணர்ந்து, 'சசிகலா எங்களுக்குத் தேவையில்லை' என்றும் சொல்கிறார்கள். சசிகலா பொதுச்செயலாளர் என்று சொன்னதை ஏற்றுக்கொண்டவர்கள், இன்று தேவையில்லை என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்!''
Also Read: ``7 மாவட்டங்களில் வார்டு பங்கீடு முடிந்துவிட்டது... முதல்வர் நல்ல முடிவெடுப்பார்!" - துரை வைகோ
''அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உடைந்துபோனதற்கு நயினார் நாகேந்திரன் பேச்சு காரணமா அல்லது சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காது என்ற பயமா?''
“இந்த மாநகராட்சி தேர்தலில் கூட்டணி இல்லாததற்கு காரணம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில உடன்பாடு ஏற்படவில்லை என்பதுதான். சிறுபான்மையினர் வாக்கு வங்கி பற்றிய பயம் இருந்திருந்தால் சட்டசபை தேர்தலையே தனியாக சந்தித்திருப்போமே! அதே மாதிரி நயினார் நாகேந்திரன் பேசியது போல இனிமே யாராவது பேசினா தக்க பதிலடி கொடுப்போம்! அடிக்கடி மன்னித்துக்கொண்டே இருக்க முடியாது!''
''அ.தி.மு.க சிங்கம், சிங்கிளாதான் வரும் என்று ஜெயக்குமார் சொல்கிறார்... ஆனால், 2024-ல் அ.தி.முக - பா.ஜ.க இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று இப்போதும் அண்ணாமலை சொல்கிறாரே?''
''அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்துக்கொள்ள அண்ணாமலை ஆசைப்பட்டால் அதற்கான முயற்சிகளை அவர் முன்னெடுக்கலாம். மற்றபடி நாங்கள் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறோம் என்பதையெல்லாம் எங்கள் கட்சித் தலைவர்கள்தான் சொல்லவேண்டும்!''
source https://www.vikatan.com/government-and-politics/politics/if-anyone-speaks-like-nainar-did-we-will-retaliate-says-vindhya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக