நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
ஆலங்குளத்தில் பேசும்போது, ``எல்லா வார்டுகளிலும் பணத்தை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என திமுகவும், அதிமுகவும் நினைக்கிறது. அவர்களின் ஆட்சி அதிகார பணபலத்தை எதிர்த்து தேமுதிக வெற்றி பெறும். மக்கள் பிரச்னைகளை தீர்க்க இரு கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பொங்கல் பரிசுப்பொருள் தரமில்லாமல் வழங்கப்பட்டன. பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. நீட் தேர்வு ரத்து என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்து ஏமாற்றி விட்டது. தற்போது தேர்தல் வந்துள்ளதால் பெண்களுக்கான 1000 ரூபாய் விரைவில் வழங்குவதாக கூறுகிறார்கள். மீண்டும் ஏமாற்றினால் முதலமைச்சரால் எங்கும் செல்ல முடியாது.
நல்லா இருந்த சிட்டியை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சீரழித்ததுதான் மிச்சம். கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளார். மதுரை மக்களை நலம் விசாரிக்க சொன்னார்."என்றவர்,
முத்துப்பட்டியில் பேசும்போது, ``தேமுதிக வெற்றி பெற்றால் பெண்களுக்கான சுகாதார வசதிகள், மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும்.
போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் கேப்டனாக நினைத்து வாக்களிக்க வேண்டும். மதுரையின் மருமகள் என்ற உரிமையோடு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.
`துளசி வாசம் மாறினாலும் தவசி வாக்கு மாறாது’ என்பதைப் போல நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். இந்த தேர்தலில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வருவோம்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/premalatha-local-body-election-campaign-at-madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக