சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ``எனது கணவர் இறந்துவிட்டார். இதனால், வைத்தியநாதன் என்பவரின் வீட்டில் வேலை செய்து வந்தேன். இந்த நிலையில் என் மகள் திருமணத்துக்காக அவரிடம் கடன் வாங்கி இருந்தேன். ஒருநாள், திடீரென அந்த பணத்தை ஒட்டுமொத்தமாக திருப்பி தர வேண்டும். அல்லது அவரின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். அப்போது, வேறுவழியில்லாமல் சம்மதித்த எனக்குக் கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வைத்தியநாதன் அந்த குழந்தையை எங்கோ எடுத்துச் சென்றுவிட்டார். என் குழந்தையை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைத்தீஸ்வரன்கோவில் காவல்துறை, ``குழந்தையை பானு - பாஷா எனும் முஸ்லிம் தம்பதியிடம் மனுதாரர் தத்து கொடுத்துள்ளார். அந்த தம்பதியிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டு, அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உள்ளது” என்று கூறியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், "மனுதாரருக்கு எதிராக போலீசார், வைத்தியநாதன், குழந்தையை வைத்திருந்த தம்பதி ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை போலீஸார் விசாரிக்கவில்லை
மனுதாரரின் மகன் ஆளும்கட்சியில் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால், மனுதாரருக்கு எதிராக அனைவரும் செயல்படுகின்றனர்” என்றார்.
இதனை அடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``இந்த வழக்கே தேர்தலை முன்னிட்டு என்றுதான் நினைக்கிறோம். முன்பெல்லாம் செய்த சாதனையைக் கூறி, அல்லது வாக்குறுதியளித்து ஓட்டு சேகரித்தனர். ஆனால் இப்போது, எதிர் தரப்பினரை அவமானப்படுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் நாடகம் நடக்கிறது.
வைத்தியநாதனின் மகன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை அவமானப்படுத்துவதற்காக அரசியல் எதிர் தரப்பினர் இந்த மனுதாரரைத் தூண்டிவிட்டு இருக்கலாம். இது எங்களுடைய யூகம் மட்டுமே. எதிர் மனுதாரர் வைத்தியநாதன், இந்த குழந்தைக்குத் தந்தை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது மரபணு சோதனைக்குச் சம்மதிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.
இதற்கு வைத்தியநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கைச் சமரச மையத்துக்குப் பரிந்துரை செய்யலாம். இது குறித்து என் கட்சிக்காரரிடம் விளக்கம் கேட்டுத் தெரிவிக்கிறேன்" என்று பதிலளித்தார்.
இந்த வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், காப்பகத்தில் உள்ள குழந்தையை மனுதாரரிடம் ஒப்படைக்க காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
source https://www.vikatan.com/news/election/madras-high-court-judges-comments-on-candidates-election-campaign
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக