நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவாக பா.ஜ.க தவிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நின்று குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், 'நீட் தேர்வு விலக்கு' குறித்து தனது பேட்டிகளில் தெரிவித்து வரும் கருத்துகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், கார்த்தி சிதம்பரத்திடம் பேசினேன்....
``நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாகத் தொடர்ந்து பேசிவருகிறீர்களே என்ன காரணம்?''
``பொதுவாழ்க்கையில் உள்ள சிந்திக்கும் திறன் கொண்ட ஒருவன், பெரும்பான்மையோரின் கருத்துக்கு ஒத்துப்போக வேண்டிய அவசியம் இல்லை. தான் சிந்திக்கிற கருத்தை, 'எதற்காக இப்படிச் சொல்கிறேன்' என்ற காரண காரியத்துடன் தெளிவாக விளக்கும் துணிச்சல்தான் அவனிடம் இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் பெரும்பான்மையோர் 'நீட் தேர்வு வேண்டாம்' என்று சொல்வதற்கு சரியான காரணத்தைச் சொல்கின்றனர். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயம், 'நீட் தேர்வு வேண்டும்' என்றோ 'வேண்டாம்' என்றோ கருப்பு - வெள்ளையாக ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட முடியாது.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு, 'மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து கல்வியாளர்கள்தான் கலந்தாய்வு செய்து, கடந்தகால புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நல்லதொரு முடிவை எட்டவேண்டும்' என்றுதான் நான் சொல்ல வருகிறேன்.''
Also Read: `கர்ப்பமான மகள்... நண்பனுக்கு உடந்தையாக இருந்த தந்தை' - விழுப்புரம் அதிர்ச்சி!
''நீட் தேர்வு நடைமுறை சமூக நீதியைக் குலைக்கிறது என்பதுதானே தமிழக அனைத்துக்கட்சிகளின் கருத்தாக இருக்கிறது?''
''தமிழ்நாட்டில், மருத்துவக் கல்விக்கான இடங்களை சமூக நீதியின் அடிப்படையில் நிரப்புவது என்றால், ப்ளஸ் டூ மதிப்பெண்களை தகுதியாக்கலாமா அல்லது நீட் போன்று ஒரு நுழைவுத் தேர்வு வேண்டுமா, அப்படி நுழைவுத் தேர்வு வேண்டும் என்றால் அதை மாநில அரசு நடத்துமா, மத்திய அரசு நடத்துமா என்பதையெல்லாம் கல்வியாளர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
அதாவது சமூக நீதிக்குப் பங்கம் வராமல், தமிழ்நாட்டிலுள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களை எப்படி நிரப்பலாம் என்று கல்வியாளர்கள்தானே முடிவு செய்யவேண்டும். இதை நான் சொல்வதில் என்ன தவறு?''
''தமிழ்நாட்டில், அரசியல் கட்சிகள் மட்டுமன்றி மக்களும்கூட, 'நீட் தேர்வு வேண்டாம்' என்ற நிலைப்பாட்டில் இருந்துவரும்போது, உங்களின் கருத்து சர்ச்சையாகும்தானே?''
''பெரும்பான்மையோரின் கருத்தை மட்டுமே கேட்டுக்கொண்டு அவர்களது சாயலுக்கே ஒத்துப்போகிற தலைவர் சுய சிந்தனைத் திறன்கொண்ட தலைவர் இல்லை. எனவே, சுயமாக சிந்தித்து, நல்லதொரு முடிவெடுத்து அந்த முடிவை மக்களும் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்யக்கூடிய, சிந்திக்கும் திறன் கொண்ட தலைவராக வரவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
உணர்வு ரீதியாக பலரும் இங்கே பல்வேறு விதமான முடிவுகளை எடுப்பார்கள்தான். ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பாக, விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஆதரித்தார்கள்தான். அதற்காக புலிகளின் கொடூர அரசியலை ஏற்றுக்கொள்ள முடியுமா? இன்றைக்கும்கூட இங்கே எழுவர் விடுதலைக்காக பலரும் குரல் கொடுத்துவருகிறார்கள். ஆனால், 'தனிப்பட்ட சலுகையோடு ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும்' என்ற கோரிக்கையை நான் ஆதரிக்கவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த பலரும் ஆதரிக்கவில்லை.
நாளையே, 'உலகம் உருண்டையல்ல... தட்டைதான்' என தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒரு சர்வேயில் சொல்லிவிட்டால், நானும்கூட 'ஆமாம் தட்டைதான்' என்று ஒப்புக்கொள்ள வேண்டுமா என்ன?''
Also Read: `இதுதான் கடைசி வாய்ப்பு!'- விஜய் மல்லையாவை எச்சரித்த உச்சநீதிமன்றம்
''நீட் தேர்வு விவகாரத்தில், கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக நீங்கள் கருத்து தெரிவித்து வருவது, காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்தானே?''
''அப்படியெல்லாம் எந்த தர்ம சங்கடமும் வரவே வராது. என்னுடைய கருத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் பேசுவோர்தான் பிரச்னையைக் கிளப்புகிறார்கள். மற்றபடி, நான் சொல்ல வரும் கருத்து என்பது, 'நீட் தேர்வு விவகாரத்தில் கல்வியாளர்களால் மட்டுமே நல்லதொரு தீர்வை எட்டமுடியும்' என்பதுதான். மற்றபடி நீட் வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ நான் சொல்லவே இல்லை. ஆனாலும்கூட 'நீட் தேர்வு வேண்டாம்' என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தை சொன்னாலும் அவர்களை தேசத் துரோகி, தமிழின துரோகி என்று திட்டித் தீர்ப்பதாகத்தான் இன்றைக்கு தமிழக விவாதங்கள் எல்லாம் போய்க்கொண்டிருக்கின்றன. இதுதான் இன்றைய தமிழக சூழல்!''
''தி.மு.க கூட்டணியில் நின்று வெற்றி பெற்றுவிட்டு 'மது, லாட்டரி, நீட், தமிழ்ப் புத்தாண்டு' போன்ற விஷயங்களில் தொடர்ந்து முரண்பாடான கருத்துகளைப் பேசி வருகிறீர்களே...?''
''நான் தி.மு.க உறுப்பினர் இல்லை; தமிழ்நாடு அரசாங்கத்திலும் உறுப்பினராக இல்லை. பொதுவிஷயங்களில் என்னுடைய தனிப்பட்டக் கருத்தை நான் சொல்லிவருகிறேன். அதை ஏற்றுக்கொள்வதற்கும் மறுப்பதற்குமான விமர்சன உரிமை எல்லோருக்கும் உண்டு.
லாட்டரி விற்பனை மூலம் நிதி திரட்டி, மக்களுக்கான உயர் கல்வியை இலவசமாக்கலாம் என்கிறேன். இந்த உள்கருத்தைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். இதேபோல், மது விலக்கு என்பதும் சாத்தியமில்லாதது என்ற எதார்த்தத்தைச் சொல்கிறேன். இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில், 'சித்திரை ஒன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு' என்கிறேன்.
என்னுடைய தனிப்பட்ட கருத்துகளில் என் மனதை மாற்றுகிற அளவுக்கு என்னை யாரேனும் சமாதானப்படுத்தினால், நிச்சயம் என் கருத்தை மாற்றிக்கொள்வேன். ஏற்கெனவே இதுபோன்று பலமுறை என் முடிவுகளை மாற்றியுமிருக்கிறேன்.''
source https://www.vikatan.com/government-and-politics/politics/i-am-not-a-member-of-the-dmk-not-even-a-member-of-the-tn-government-karthi-chidambaram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக