மார்பகப்புற்றுநோயைக் கண்டுபிடிக்க ரத்தப் பரிசோதனை உண்டு என கேள்விப்பட்டேன். உண்மையா? அது என்ன டெஸ்ட்? யார், எப்போது செய்ய வேண்டும்? மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் சோதனை வலிநிறைந்ததா? எத்தனை நாள்களுக்கொரு முறை செய்ய வேண்டும்?
- சித்ரா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பி. குகன்.
``மார்பகப் புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு உடல் ஒத்துழைக்கிறதா என்பதைக் கண்டறிய CA 15-3, CA 27-29 போன்ற ரத்தப் பரிசோதனைகள் உதவுகிறதே தவிர, புற்றுநோயையே கண்டறிய இவை இன்னும் பயன்படுத்தப்படவில்லை. மார்பகங்களில் கட்டி இருப்பது போன்று உணர்பவர்கள், ஸ்கேன் அல்லது மேமோகிராம் சோதனையை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பகுதியிலிருந்து சதையை எடுத்து பயாப்சி செய்து, அது புற்றுநோய்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட CA 15-3, CA 27-29 போன்ற ரத்தப் பரிசோதனைகள் தேவையில்லை.
மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனையை 45 வயதுக்கு மேலான பெண்கள் வருடத்துக்கு ஒருமுறை செய்து பார்த்தால், ஒருவேளை புற்றுநோய் தாக்கியிருந்தால் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும்.
மேமோகிராம் வலி நிறைந்தது என்ற தவறான கருத்து மக்களிடம் இருக்கிறது. தவிர அதில் ரேடியேஷன் அதிகம் என்றும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த பயம் தேவையில்லை.
மிகக் குறைந்த அளவு ரேடியேஷன் பயன்படுத்திச் செய்யப்படுகிற பிரத்யேகப் பரிசோதனை. வலியும் இருக்காது. புற்றுநோய் பாதிப்பை மிகத் துல்லியமாக இதில் கண்டறிந்துவிட முடியும்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/is-mammogram-test-which-diagnoses-breast-cancer-painful
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக