Ad

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

கரூர் மேயர் ரேஸ்: `சின்னவர் ஆசி... சுயேச்சைக்குகூட வாய்ப்பு இருக்கு?!’ -சர்ப்ரைஸ் செந்தில் பாலாஜி

தமிழகத்தின் மையத்தில் உள்ள மாநகரம், டெக்ஸ்டைல்ஸ், பஸ்பாடி தொழில், கொசுவலை உற்பத்தி, ஃபைனான்ஸ்கள் என்று தொழில்கள் நிறைந்த பகுதி என்பதால், 'தொழில் நகரம்' என்றும் அழைக்கப்படுகிற கரூர், முதல் மேயரை, அதுவும் பெண் மேயரை எதிர்கொள்ள காத்திருக்கிறது. மற்ற மாநகராட்சிகளில் உள்ளதுபோன்று, 'அவர் சொல்வருக்கு தான் மேயர் பதவி', ''இவர் சொல்வதற்குதான் பதவி' என்ற பேச்சுக்கெல்லாம் கரூரில் இடமில்லை என்கிறார்கள்.

கவிதா கணேசன்

காரணம், 'மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி யார் யாரை கைகாட்டுகிறாரோ, அவர்களே மேயர், துணை மேயர். அதற்கு நோ அப்பீல். அந்த அளவுக்கு தனக்கு எதிராக யாரையும் 'கோஷ்டி' வளர்க்கவிடாமல், சாதுர்யமாக கரூர் மாவட்ட தி.மு.கவை தனக்கு சார்பாக மாற்றி வைத்திருக்கிறார்' என்று தி.மு.கவினர் சொல்கிறார்கள்.

இனி, ஓவர் டு கரூர் மாநகராட்சி மேயர் ரேஸ்...

இதுவரை, நகராட்சியாக இருந்து வந்த கரூர், முதன்முறையாக மாநகராட்சிக்கப்பட்டது. அதுவும், மேயர் பதவிபெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு கொடுத்தால், மேயராகும் நபர் தனக்கு போட்டியாக அரசியலில் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்துவிடுவார் என்பதற்காக, சாதுர்யமாக பெண்களுக்கு ஒதுக்கும்படி செந்தில் பாலாஜி திரைமறைவு 'லாபி' செய்ததாக சொல்கிறார்கள்.

கரூர் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. அதில் ஒன்றான 22 வது வார்டு தி.மு.க வேட்பாளரான பிரேமா சங்கரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் கடைசி நேரத்தில் மனுக்களை வாபஸ் பெற்றதால், தி.மு.க வேட்பாளர் பிரேமா சங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனால், மீதியிருந்த, 47 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அந்த வகையில், தி.மு.க.,- 42, காங்கிரஸ் - 1, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட். - 1, அ.தி.மு.க - 2, சுயேச்சைகள் - 2 என கைப்பற்றியுள்ளது. இதில், சுயேச்சையாக வெற்றிப்பெற்றவர்கள் இருவரும், 12 மற்றும் 16 வது வார்டுகளில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க, தி.மு.க ஆதரவோடு நிறுத்தப்பட்டவர்கள் என்று தி.மு.கவினர் வெளிப்படையாக பேசிக்கொள்கின்றனர். அதனால், தி.மு.க 44 இடங்களை தக்க வைத்துள்ளதாக தெரிகிறது.

தெய்வாணை

கரூர் மேயரை ஆண்களுக்கு ஒதுக்கினால், தனக்குப் போட்டியாக யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்ப்தற்காக, செந்தில் பாலாஜி பெண்களுக்கு ஒதுக்க வைத்தார் என சொல்லப்படுவதால், 'உண்மையில் மேயர் வேட்பாளரை தலைமை அறிவிக்கும் வரை யாருக்கும் தெரியாமல் தான் வைத்திருப்பார். கடந்த சட்டமன்ற தேர்தலிலும், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் மீடியா மட்டுமின்றி, தி.மு.கவினரே எதிர்பார்க்காத இரண்டு, 'அப்பாவி' ஆட்டிடியூட் உடையவர்களை வேட்பாளராக்கினார். அவர்கள் இருவரும் இப்போதுவரை இருக்கும் இடமே தெரியாமல் செந்தில் பாலாஜிக்கு விஸ்வாசம் காட்டி வருகிறார்கள். அதே ஃபார்முலாவைதான் இப்போதும் செயல்படுத்துவார். மேயராகும் பெண் மட்டுமல்ல, அவரின் குடும்பமே அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களாக இருக்க வேண்டும்'னு நினைப்பார்' என்கிறார்கள், செந்தில் பாலாஜியின் 'மூவ்' குறித்து அறிந்த தி.மு.க புள்ளிகள்.

இருந்தாலும், அனைத்து பெண் கவுன்சிலர்களும், செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை சந்தித்து, மேயர் சீட்டை பிடிப்பதற்காக 'துண்டு' போட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை முடிந்த அன்றே அனைத்து கவுன்சிலர்களும், 'சின்னவரைப் பார்க்க போகிறோம்' என்றபடி, ராமகிருஷ்ணபுரத்தில் அசோக்குமாரை சந்தித்து ஆசிபெற்றனர். அதோடு, பெண் கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள், அசோக்குமாரை மேயர் சீட்டுக்காக நடையாய் நடந்து சந்தித்து வருகிறார்களாம். குறிப்பாக, கரூர் மாநகராட்சியில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய தி.மு.க, முதல் மேயர் பதவியை அலங்கரிக்க உள்ளதால், 'இந்த முதல் அதிர்ஷ்டசாலி யார்? என்பதை அறிந்து கொள்வதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மஞ்சுளா பெரியசாமி

கரூர் மாநகராட்சியில் வசிக்கும் மக்களில் கவுண்டர்கள் தான் அதிகம் என்றாலும், முதலியார், முத்தரையர், பட்டியல் இன மக்கள் என்று பல தரப்பு மக்களும் இங்கே வசிக்கின்றனர். அதனால், மேயர் பதவியை கவுண்டர் சமுதாய கவுன்சிலருக்கு கொடுத்தால், துணை மேயர் பதவியை முதலியார், முத்தரையர், பட்டியல் இன சமுதாயம் என ஏதோ ஒரு சமுதாய கவுன்சிலருக்கு கொடுக்க இருக்கிறார்களாம். அதேபோல், மேயர் பதவியை வேறு சமுதாய கவுன்சிலருக்கு கொடுத்தால், துணை மேயர் பதவியை கவுண்டர் சமுதாய கவுன்சிலருக்கு கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

கரூர் மேயர் பதவிக்கு 2 பெண் கவுன்சிலர்களின் பெயர்கள் பலமாக அடிபடுகிறது. அதில் ஒருவர், கவிதா கணேசன். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், கரூர் வடக்கு மாநகர தி.மு.க. செயலாளர் கணேசனின் மனைவி. கணேசன் கட்சியில் சீனியர். செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர். அதோடு, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் கணேசன் குடும்பத்தினர் நெருக்கம். சமீபத்தில், திடீரென கணேசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அந்த அனுதாபத்தை காட்டியும், தலைமையிடம் அவர் தனது மனைவிக்கு மேயர் சீட்டு கேட்டு வருகிறார்.

அடுத்து, 34 - வது வார்டில் போட்டியிட்ட தெய்வாணை பெயரும் பலமாக அடிபடுகிறது. இவர், அ.தி.மு.க. வேட்பாளர் செல்வியை 1,358 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தாரணி சரவணன்

இவர்களை தவிர, 12 - வது வார்டில் சுயேச்சையாக களம் இறங்கி வெற்றிபெற்ற மஞ்சுளா பெரியசாமிக்கு கூட மேயர் அதிர்ஷ்டம் இருக்கலாம் என சொல்லிக்கொள்கிறார்கள். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் உதவியாளரான கிருத்திகா பாலகிருஷ்ணன் 12 வது வார்டில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டார். ஆனால், ஜோதிமணிக்கு 'செக்' வைக்க நினைத்த செந்தில் பாலாஜி, சுயேச்சையாக அதே காங்கிரஸை சேர்ந்த மஞ்சுளா பெரியசாமியை நிற்கவைத்து, ஏகபோகமாக செலவு செய்து, ஜெயிக்க வைத்தாராம். தி.மு.கவில் மஞ்சுளா பெரியசாமியை இணைத்து, அவருக்கு மேயர் பதவி தர வாய்ப்பிருக்கிறது என்று கூட சொல்கிறார்கள்.

அதேபோல், துணை மேயர் பதவிக்கும், கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. துணை மேயர் பதவியை கண்டிப்பாக தன்னோடு அ.ம.மு.கவில் இருந்த ஒரு நபருக்கு தான் கொடுப்பது என்பதில் செந்தில் பாலாஜி உறுதியாக இருக்கிறாராம். அந்த வகையில், 46 - வது வார்டில் வெற்றிபெற்றவரும், கரூர் மத்திய மேற்கு மாநகர செயலாளருமான தாரணி சரவணன், 38 - வது வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரும், கிழக்கு மாநகர செயலாளருமான 'கோல்டு ஸ்பாட்' ராஜா ஆகிய இரண்டு பேரில் ஒருவருக்கு தான் சீட் என்கிறார்கள். இருவரும் அமைச்சருடன் நெருக்கமாக இருப்பவர்கள். இவர்களில் ஒருவருக்கு துணை மேயர் பதவி அளிக்கப்பட்டால், மற்றவருக்கு நிச்சயம் கோட்ட தலைவர் பதவி உறுதி என்கிறார்கள். கோல்டு ஸ்பாட் ராஜா கூடுதலாக, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரோடு நெருக்கம் காட்டி வருகிறார்.

'கோல்டு ஸ்பாட்' ராஜா

அதோடு, கட்சியில் சீனியரும், மத்திய மாநகர செயலாளரும், 37 வது வார்டு கவுன்சிலருமான எஸ்.பி.கனகராஜும் 'கட்சியில் சீனியர்' என்பதை காரணம் காட்டி, துணை மேயர் பதவியை பெற பல ரூட்களிலும் காய்நகர்த்தி வருகிறார். ஆனாலும், "மேயர், துணை மேயர் பதவிகளுக்கு மேற்சொன்ன அனைத்து கவுன்சிலர்களின் பெயர்களும் இல்லாமலும் போகலாம். கடைசி நேரத்தில், மேயர், துணை மேயர் பதவிகளுக்காக எந்த முயற்சியும் செய்யாத கவுன்சிலர்கள்கூட பதவியை அலங்கரிக்கும் அதிசயம் நடக்கலாம். ஏனென்றால், செந்தில் பாலாஜியின் கேரக்டர் அப்படி. அதனால், மேயர், துணை மேயர் யார் என்பது, செந்தில் பாலாஜிக்கே வெளிச்சம்" என்று தி.மு.கவினர் வெளிப்படையாக தெரிவிக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/who-all-are-in-karur-corporation-mayor-race-in-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக