மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டில் நோயாளிகள் உட்பட 13 பேர் சிக்கிக்கொள்ள, அவர்களை தீயணைப்புத்துறை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் தமிழகத்தில் முக்கியமானதும் மிகப்பெரியதுமான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
இங்கு வருகின்ற நோயாளிகளுக்கு போதிய வசதிகள் இல்லையென்று புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்த நிலையில்தான் லிஃப்ட் பழுதாகி மக்கள் அதில் மாட்டிக்கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் அனைத்து சிறப்பு வசதிகளுடன் சிகிச்சை அளிக்கும் தாய் சேய் பிரிவு புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
ஐந்து தளங்களைக் கொண்ட இந்த சிறப்புப் பிரிவில் நேற்று மாலை லிஃப்ட் திடீரென பழுதாகி பாதி வழியிலே நின்றுள்ளது. இதனால் லிப்டில் இருந்த 13-க்கும் மேற்பட்ட நோயாளிகள், நோயாளியின் உறவினர்கள், குழந்தைகள் சிக்கிக்கொண்டு அலற ஆரம்பித்தார்கள்.
உடனே தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் விரைந்து வந்த அவர்கள், லிப்டின் கதவை உடைத்து பொதுமக்களை மீட்டனர். லிப்டை முறையாக பராமரிக்க ஆட்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
6 மாதத்திற்கு முன்பும் இதுபோல் லிஃப்ட் பழுதாகி பாதியில் நின்றதாக சொல்கிறார்கள். அதிகமான மக்கள் வந்து செல்லும் இம்மருத்துவமனையில் பொதுமக்கள், நோயாளிகள் பயன்படுத்தும் அனைத்து வகையான இயந்திரங்களும், மருத்துவ உபகரணங்களும் தொடர் கண்காணிப்புடனும் முறையாகவும் இருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-government-hospital-lift-problem-fire-and-safety-department-saved-13-persons
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக