விழுப்புரத்திலுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்ற வெளிநடப்பு செய்ததோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். "ஜெயலலிதாவின் பெயரை வைத்த காரணத்துக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதா?" என அதிமுக சீனியர்கள் கொந்தளிக்கிறார்கள். இந்த விவகாரத்தை உள்ளாட்சித் தேர்தல் ஆயுதமாகவும் பயன்படுத்த தீவிரமாகியிருக்கிறது அதிமுக முகாம். இதற்கிடையே, 'ஜெயலலிதா மீது இவ்வளவு பாசம் காட்டும் அதிமுக தலைவர்கள், கடந்த அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்ட ஜெயலலிதா சிலையைக் கைவிட்டது ஏன்?' என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள்.
"பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்காக சென்னை மெரினா சாலையிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு 'ஜெயலலிதா வளாகம்' என்று பெயர் சூட்டப்படும். அங்கு ஜெயலலிதாவுக்கு சிலையும் அமைக்கப்படும்" என ஜனவரி 2021-ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனடிப்படையில், ஜெயலலிதாவின் ஒன்பது அடி உயர வெண்கலச் சிலை ஜனவரி 28-ம் தேதி உயர்கல்வி மன்ற வளாகத்தில் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தடபுடலாக திறக்கப்பட்ட இந்தச் சிலைதான் இன்று புற்கள் மண்டிப்போய் கேட்பாறற்ற நிலையில் இருக்கிறது.
Also Read: `` ஜெயலலிதா பல்கலை. விவகாரம் முதல் ஓ.பி.எஸ் கைது வரை" - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக நிர்வாகிகள் சிலர், "ஜெயலலிதாவுக்கு இரண்டு சிலைகள்தான் சென்னையில் உள்ளன. ஒன்று, ராயப்பேட்டை அதிமுக கட்சி அலுவலகத்தில் இருக்கும் சிலை. இரண்டாவது, மெரினா சாலையிலுள்ள உயர்கல்வி மன்றத்திலிருக்கும் சிலை. கட்சி அலுவலகத்திலிருக்கும் சிலையை அவ்வப்போது பராமரித்துவிடுகிறார்கள். ஆனால், உயர்கல்வி மன்றத்திலிருக்கும் சிலையை யாரும் கண்டுகொள்வதில்லை. இந்தச் சிலை அமைக்கப்பட்டபோது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பராமரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தினமும் பூ மாலை அவர் சார்பில் போடப்படும். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் தொடர்ந்து செய்ய முடியாததால், பராமரிப்பு பொறுப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் ஏற்றுக் கொண்டார். அதிமுக ஆட்சி முடிந்தவுடன், இந்தப் பொறுப்பும் காற்றோடு போய்விட்டது. இன்று பூ மாலை போடுவதற்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவின் சிலையைச் சுற்றி மண்டிப் போயிருக்கும் புற்களை அகற்றக் கூட ஆள் இல்லை.
உயர்கல்வி மன்ற வளாகத்திற்குள் இருப்பதால், இதை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் கூட பராமரிப்பதில்லை. பறவைகள் இளைப்பாறும் இடமாக ஜெயலலிதா சிலை மாறிவிட்டது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட, கருணாநிதியின் சமாதியை திமுக-வினர் பேணிக் காத்தனர். சமாதிக்கு தினமும் மலர் அலங்காரம் செய்து பார்ப்பவர்களின் கண்களில் மரியாதையை வரவழைத்தனர். ஒன்றரைக் கோடி கட்சித் தொண்டர்களின் இதயதெய்வமாகப் போற்றப்படும் ஜெயலலிதாவின் சிலையை அதிமுக தலைவர்கள் கைவிட்டது வேதனையளிக்கிறது.
Also Read: அறக்கட்டளையை இழந்து அல்லாடும் அ.தி.மு.க!
ஆட்சி மாறிவிட்டதால், உயர்கல்வி மன்றத்திலுள்ள பணியாளர்களும் சிலையை சரியாகப் பராமரிப்பதில்லை. மெரினாவுக்கு வரும் பொதுமக்கள், 'இவர்தான் ஜெயலலிதா' என்று தங்கள் குழந்தைகளுக்கு அடையாளப்படுத்த இருப்பது அந்த ஒரு சிலைதான். அதுவே இந்த லட்சணத்திலிருந்தால் இருந்தால், கட்சி மீது எப்படி மரியாதை வரும்? ஒரு பூ மாலை வாங்கிப் போடக்கூடவா கட்சியில் பணமில்லை?" என்று பொங்கித் தீர்த்தார்கள்.
மெரினாவில் தலைவர்களின் சமாதி அமைந்திருக்கும் இடங்கள் பொதுப்பணித்துறையின் பராமரிப்பின் கீழ் வருகிறது. அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், தாங்களாகவே கருணாநிதியின் சமாதி பொறுப்பை ஏற்றுக் கொண்ட திமுக-வினர், தினமும் ஆயிரக்கணக்கான ரூபாயில் மலர் அலங்காரம் செய்தனர். இதைப் பார்த்துவிட்டுத்தான், ஜெயலலிதா சமாதிக்கும் மலர் அலங்காரத்தை அதிமுக கட்சி நிர்வாகம் செய்தது. ஆட்சி மாறிய நிலையில், ஜெயலலிதா சமாதிக்கான அலங்காரம் கூட இப்போது பெரிதாகச் செய்யப்படுவதில்லை. இப்போது, பொதுமக்கள் பார்வையிலிருக்கும் ஒரே ஒரு ஜெயலலிதா சிலையையும் கேட்பாறற்ற நிலையில் இருப்பது கட்சித் தொண்டர்களை குமுறலில் ஆழ்த்தியிருக்கிறது.
அம்மா... அம்மா என்பதெல்லாம் சும்மா தானா?
source https://www.vikatan.com/news/politics/admk-cadres-upset-over-jayalalitha-statue-in-marina-is-not-honoured
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக