``என்னை ஆளாக்கின பள்ளிக்கு நான் செய்றது என் கடமை. கல்விக் கட்டணமே கட்ட முடியாத குடும்பப் பிண்ணனியில இருந்து வர்ற குழந்தைங்கதான் இந்தப் பள்ளிக்கூடத்துல அதிகம். இன்னொரு பக்கம், தமிழ்வழிப் பள்ளிகள் ரொம்பவே குறைஞ்சுட்டு இருக்கு. இன்னும் சொல்லணும்னா தமிழ்வழிக் கல்வியில படிக்கிறதையே சிலர் இளக்காரமா நினைக்கிறாங்க. ஆனா இதே பள்ளிக்கூடத்துல படிச்சுதான் நான் இன்னைக்கு சிவில் எஞ்சினீயரா இருக்கேன். அந்த நன்றிக்கடன்தான், நான் படிச்ச பள்ளிக்கு பதில் அன்பா ஏதாவது செய்யணும்னு நினைக்க வெச்சது'' - வயதுக்கு மீறிய பக்குவத்துடன் பேசுகிறார் இளவேனில். குன்றத்தூர், பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் முன்னாள் மாணவர். தற்போது சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார். தன் முதல் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக நன்கொடையாகக் கொடுத்திருப்பவர், இப்போது கட்டடக்கலை பொறியாளர்.
Also Read: ஏசி வசதி, ஸ்மார்ட் வகுப்பறை; தனியார் பள்ளிகளிலிருந்து வந்து குவியும் அட்மிஷன்; அசத்தும் அரசுப்பள்ளி!
``இளவேனில் பத்தி சொல்லுங்களேன்..."
``நான், என் அக்கா இலக்கியா ரெண்டு பேருமே இந்த பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியோட முன்னாள் மாணவர்கள். எங்க அப்பாவுக்கு இந்தப் பள்ளிக்கூடத்தோட கற்றல் முறை பிடிச்சதால எங்களை இங்க சேர்த்துவிட்டாங்க. இப்போ என் அப்பா இறந்துட்டாங்க. ஆனா, இந்தப் பள்ளி பற்றி அப்பா சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மைனு இப்போவும் நாங்க நினைச்சுப் பார்ப்போம். இப்போ உள்ள பல தனியார் பள்ளிகள், குழந்தைங்களை அதிக மதிப்பெண்கள் வாங்க வைக்கிற ஒரு பயிற்சி நிறுவனமா செயல்படுறாங்க. ஆனா, பள்ளிக்கூடங்கள் என்பவை கற்றுக்கொடுக்கும் நிலையங்களா இருக்கணும்.
பாவேந்தர் தமிழ்ப் பள்ளியில கற்றலுக்கு ரொம்பவே முக்கியத்துவம் இருக்கும். ஐந்தாம் வகுப்பு வரை இங்கதான் படிச்சோம். தமிழ் வழிக் கல்வியில படிச்சா ஆங்கிலம் வராதுனு ஒரு கருத்துப் பரவினதுல ஆசிரியர்களோட பங்கும் இருக்கலாம். ஆசிரியர்கள் பொறுப்பை உணர்ந்து மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தா யாரும் இங்க இருந்து தனியார் பள்ளிகளை நோக்கிப் போகமாட்டாங்க.
எங்க பள்ளியைப் பொறுத்தவரை, எங்க முதல்வர் வெற்றிச்செழியன் ஐயா பல ஆக்கபூர்வமான முயற்சிகளையும் மேற்கொள்கிறவர். ஸ்போக்கன் இங்கிலீஷ், ஆங்கில இலக்கணம்னு அடிப்படையை ரொம்ப பலமா அமைச்சுக் கொடுப்பார்.''
Also Read: `பாடம் புரியலையா? இதோ வர்றேன்!' - மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் தலைமை ஆசிரியை
``பள்ளிக்கு நன்கொடை கொடுக்குற எண்ணம் எப்படி தோணுச்சு..?"
``எங்க பள்ளியில இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, அரசு அறிவிச்ச கட்டணத்தைதான் மாணவர்கள்கிட்ட வாங்குவாங்க. ஆனாலும் அந்தக் கட்டணத்தையும் கட்ட முடியாத குடும்பப் பிண்ணனியில இருந்துதான் நிறைய குழந்தைகள் வர்றாங்க. அந்த ஏரியாவில் இருக்குற கொஞ்சம் வசதி படைத்த நபர்கள் கொடுக்கிற நன்கொடைகள் மூலமா பல மாணவர்கள் கல்வி பெறுவதை, நாங்க நேரடியாகப் பார்த்திருக்கோம்.
அது போக, எங்க பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எல்லாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் தொடர்புலதான் இருக்கோம். பள்ளியோட எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சினாலும் முன்னாள் மாணவர்களோட பங்களிப்பு இருக்கும். என் அக்கா இலக்கியாகூட, தன் சம்பளத்துல ஒரு பகுதியை எங்க பள்ளிக்கு நன்கொடையா கொடுத்தாங்க. அதன் தொடர்ச்சியாதான், இப்போ என்னோட முதல் சம்பளத்தில் ஒரு பகுதியை பள்ளியோட வளர்ச்சிக்குக் கொடுத்தேன். என்னால முடிஞ்சவரை எப்பவும் என் பள்ளிக்குத் துணையாக நிற்பேன்னு நம்புறேன். இதேபோல, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்ல படிக்கிற மாணவர்கள் எல்லாருமே அவங்க படிச்ச பள்ளியை பார்த்துக்கிட்டா, அடுத்து வர்ற மாணவர்களுக்கு, `நாமளும் இதுபோல படிச்சு ஒரு வேலைக்குப் போயிடணும்'னு அது நம்பிக்கையும் ஊக்கமும் கொடுப்பதோடு, பள்ளிகளுக்கும் உதவியா இருக்கும்'' என்றார் இளவேனில் உற்சாகத்துடன்.
பள்ளியின் முதல்வர் வெற்றிச்செழியனிடம் பேசினோம்.
``1994-ல் தொடங்கிய பள்ளி இது. அப்போ தமிழ்நாடு முழுவதும் 150 பள்ளிகள் வரை தமிழ்வழிப் பள்ளிகள் இருந்தன. கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகு பள்ளிகளோட எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சது. இந்தப் பள்ளியைத் தொடங்குவதற்கு முன்பு, நண்பர்கள் பலரும் ஆங்கில வழிப் பள்ளி தொடங்கவே யோசனை சொன்னாங்க. ஆனாலும் நான் விடாப்பிடியாக தமிழ்வழிக் கல்விதான் வேண்டும்னு உறுதியாக இருந்தேன்.
இப்போ எங்க பள்ளியில 150 மாணவர்கள் வரை படிக்கிறாங்க. எட்டு ஆசிரியர்கள் வரை பணியாற்றி வர்றாங்க. பெரிய அளவு நிதி எதுவும் இல்லாத சூழல் என்பது இங்கே வேலைபார்க்கிற எல்லா ஆசிரியர்களுக்கும் தெரியும். ஆனாலும் பள்ளியின் அடிப்படை நோக்கத்துக்காக சம்பளம் பற்றிய கவலைகள் இல்லாம குறைந்த ஊதியத்துக்குக் கற்றல் பணி ஆற்றுறாங்க.''
``பெற்றோர்களிடம் தமிழ் வழிக் கல்விக்கான வரவேற்பு எப்படி இருக்கு?"
``2000-ல ஆங்கில வழி மோகமும், தனியார் பள்ளிகள் மீதான ஈர்ப்பும் அதிகரிச்சது. அதற்குப் பெற்றோர்கள் தரப்பு சொன்ன காரணம், அரசுப் பள்ளியில சரியான கட்டமைப்பு இல்லை என்பதே. ஆனால் கடந்த ரெண்டு வருஷமா பல பெற்றோர்களும் அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்ப ஆரம்பிச்சிருக்காங்க. இது ஒரு வரவேற்கத்தக்க விசயம். கொரோனா சூழல்ல தனியார் பள்ளிகள்ல அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால, அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை நோக்கி வர ஆரம்பிச்சிருக்காங்க. அதை தக்கவைத்து அரசுப் பள்ளிகள் முன்மாதிரியாகச் செயல்படணும்'' என்றார் அக்கறையுடன்.
source https://www.vikatan.com/news/tamilnadu/kundrathur-woman-engineer-gave-donation-to-her-school-from-the-first-salary
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக