நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர், ரூபி மனோகரன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால், வெற்றியைக் கைப்பற்றி எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றிவருகிறார்.
Also Read: `வசந்தகுமார் செயலால் எனது வெற்றி உறுதி'- காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்!
ரூபி மனோகரன் வெற்றிபெற்றபோதிலும் அவருக்கு எதிராகச் செயல்படும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி கோஷ்டியினர், `எம்.எல்.ஏ-வைக் காணவில்லை’ என்று போஸ்டர் ஒட்டினார்கள். அத்துடன், தொகுதிக்குள் அவர் வரும்போது அவருக்கு எதிராகவும் செயல்பட்டனர்.
இந்தநிலையில், நாங்குநேரி பேருந்து நிலையத்திலுள்ள சுவரில் `அவரைக் காணவில்லை’ என எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டதற்கு, ``ரூபி மனோகரன் வெற்றிபெற்றபோதிலும், அவர் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை. எங்கிருந்தோ வந்த அவர், இதே தொகுதியில் மறுபடியும் போட்டியிடும் வகையில் செயல்பட்டுவருகிறார். அதனால்தான் அவருக்கு எதிராக உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுகிறார்கள்.
ஏற்கெனவே பலமுறை அவரைக் காணவில்லை என்று போஸ்டர்களை ஒட்டினார்கள். ஆனால் அவற்றைக் கிழித்துவிடுவதால் இந்த முறை சுவரிலேயே பெயின்ட் கொண்டு எழுதிவைத்துவிட்டனர். அதில், ’வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அரிச்சந்திரன், சொன்ன சொல்லைத் தவற மாட்டார், ரூபி மனோகரன். அவரைக் காணவில்லை. கண்டுபிடித்துத் தருபவருக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்’ என்று எழுதப்பட்டுள்ளது” என்றார்கள்.
`ரூபி மனோகரனைக் காணவில்லை’ என்று எழுதப்பட்டிருப்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ரூபி மனோகரனிடம் கேட்டதற்கு, ``அந்தச் சுவரில் எழுதியவரின் பெயராகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அய்யப்பன் என்பவர் குடிகாரர். அவர் என்னிடம் அடிக்கடி பணம் கேட்பார். நான் அங்கு செல்லும்போதெல்லாம் பணம் கொடுப்பேன். ஓரிரு வாரங்களாக என்னைப் பார்க்காததால் பணம் கிடைக்காத அதிருப்தியில் காணவில்லை என எழுதியிருப்பார்” என்று எழுதியவர்மீது குற்றம்சுமத்தினார்.
தொடர்ந்து``எனக்கு சென்னையில் தொழில் இருந்தபோதிலும், அதையெல்லாம் விட்டுவிட்டு தொகுதியிலேயே தங்கியிருந்து பணியாற்றிவருகிறேன். தொகுதி மக்களுடன் தொடர்பிலேயே இருக்கிறேன். அதனால் என்னைப் பற்றி யார் என்ன எழுதியிருந்தாலும் எனக்கு எந்தக் கவலையும் கிடையாது” என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/wall-painting-written-showing-missing-of-congress-mla
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக